7 மணி 40 நிமிடங்கள் 33 விநாடிகள் நான் பெருமாநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் காலடி எடுத்து வைத்த போது...
"காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றை தேடுதே"
என்று இளையராஜா டீக்கடையில் வருடிக்கொண்டிருக்க, கீழே விழுந்த 5 ரூபாயை ஓர் முதியவர் தேடிக்கொண்டிருந்தார். அதைக் கண்டுகொள்ளாதவனாய் ஓர் இளைஞன் 7:30 மணி பேருந்து சென்றுவிட்டதா என்று பதில் சொல்ல இஷ்டமே இல்லாத சிலரிடம் விசாரித்துக் கொண்டிருந்தான். பேருந்து வந்தால் மட்டுமே போதும் என்பவனுக்கு, நேரத்திற்கு பேருந்தை எதிர்பார்ப்பது ஆடம்பரம் தானே!
என்றும் போல் அம்மா வைத்த ரசம் பையினுள் சிந்திவிடக்கூடாதெனும் சிந்தனையில் அலர்ட் ஆறுமுகமாய் நான் தலையை திருப்பாமல் திருப்பி, அசையாமல் அசைத்து 'கிங் பிஷர்' வருகிறதா என்று பார்த்தேன். கிங் பிஷர் என்பது நான் வழக்கமாக தவறவிடும் ஓர் பேருந்தின் பெயர். படிப்போரின் சிந்தனை சிதறிவிடக்கூடதென்பதால் இச்சிறு விளக்கம்.
ரேஷன் கடையிலிருந்து அரிசிப்பையை ஒரு பக்கம் சாய்ந்து கஷ்டப்பட்டு தூக்கி வரும் ஓர் சிறுவனை போல ஈரோட்டிலிருந்து ஒரு பேருந்து ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. நிச்சயமாக அது கிங் பிஷர் இல்லை. சாய்ந்து வந்தாலும் தள்ளாடாமல் வந்ததே காரணம். நிறுத்தத்தில் அசால்டாக நின்று கொண்டிருந்த அனைவரும் ஆயத்தமானார்கள்.
ஆயத்தமான 10 பேர் கொண்ட கும்பலை கடக்கும் போது மட்டும் வேகம் எடுத்தது அந்த ஊர்தி. நான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து சரியாக 100 மீட்டர் தொலைவில் நின்றது. அனைவரும் ஓட ஆரம்பித்தனர். மந்தையில் இணைந்த ஆடாக நானும் மனதிற்குள் சில ஹீரோக்களின் பின்னணி இசையை வாசித்தவாறு பேருந்தை நோக்கி ஓடினேன். ஆனால் பார்த்தவர்களுக்கு என்னமோ ‘அலுங்குறேன் குலுங்குறேன்’ என்று தான் தோன்றியிருக்கும். பேருந்தின் படிக்கட்டுகளை நெருங்கிய போது என்னுள் வாங்கிய மூச்சு மென்பொருள் பணி என்னை எவ்வளவு மென்மையானவனாய் மாற்றிவிட்டதென்பதை உணர்ந்தேன். ஏற்கனவே அனைத்து இருக்கைகளும் நிரம்பிய பேருந்தில் நிற்பதற்கான இடத்தைப் பிடிக்க சில தள்ளுமுள்ளுகளை சமாளித்து ஏறினேன்.
‘உள்ள போ , உள்ள போ ! எடம் இருக்குது பார்... நடு வண்டில...’ என்று அனைவரையும் தலையணை பஞ்சாய் பேருந்தினுள் அமுத்திக் கொண்டார் நடத்துநர்.
பையை ஓர் பாதுகாப்பான (?!?) இடத்தில் வைத்த பிறகு, அருகிலிருந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தேன்.
காலையில் நேரம் கழித்து காபி போட்ட மனைவியை சகித்துக் கொள்ளமுடியாத ஒருவர் நாட்டின் சகிப்புத்தன்மையைப் பற்றி பேசி அருகிலிருந்தவரின் சகிப்புத்தன்மையைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
“நாட்டுல எவனும் ஒழுங்கில்ல சார்.. எவனுக்கும் பொறுமையும் இல்ல.. எது பண்ணுனாலும் நொட்ட சொல்லிட்டிருக்கானுங்க”
அருகிலிருந்தவரும் ‘நீ மட்டும் இப்ப என்ன பண்ணிட்டிருக்கியாம்’ என்ற வாக்கில் மூஞ்சியை வைத்துக் கொண்டு ம்ம்ம் போட்டுக் கொண்டிருந்தார்.
அவர்களுக்கு அருகிலிருந்தவரோ நமக்கு ஏன் இந்த பாடு என்று என் அறிவுக்கு எட்டாத அரசியலையும், என் வங்கிக் கணக்குக்கு எட்டாத பொருளாதாரத்தையும் தினசரிப் பத்திரிக்கையில் அலசிக் கொண்டிருந்தார். விளையாட்டுப் பகுதி வந்தால் நானும் கொஞ்சம் அலசிக் கொள்ளலாம் என்றிருந்த எனக்கு ஏமாற்றமே. உலகக் கோப்பையில் இந்தியா தோற்ற பிறகு, யுவராஜ் சிங் வீட்டின் மீது கல்லெறிந்து விட்டு கிரிக்கெட்டை வெறுத்தார் போல் நடிக்கும் பட்டியலில் அவரும் ஒருவராய் இருக்கலாம்.
“சார்.. கொஞ்சம் தள்ளி உக்காருங்க” என்று பின்னால் ஒரு குரல். மூவர் சீட்டில் உட்காந்திருந்த இருவரினூடே இடைவெளியை கண்டுபிடித்த குரல் அது.
“உள்ள போங்க சார்... நாங்க கருமத்தம்பட்டியில இறங்கிடுவோம்” என்றார் அந்த இருவரில் ஒருவர் காரணத்தைக் கண்டுபிடித்து பேருந்து ஏறியது போல.
“சார்.. நான் அவிநாசியிலயே இறங்கிடுவேன்“ என்றார் ஒரு வஞ்சப் புன்னகையோடு.
உட்கார்ந்திருந்தவர்களும் வேறு வழியில்லாமல் நகர்ந்தும் நகராமலும் சிறு இடம் விட்டு, தள்ளி உட்கார்ந்தனர். இவரும் சிரித்த பாவத்திற்கு உட்கார முடியாமல் உட்கார்ந்தார். நம்மை வெறுப்பேத்தியவரை கடுப்பேத்தும் ஓர் அல்ப சுகம் அலாதியானது தானே!
இந்த பஞ்சாயத்து முடிவதற்குள் பேருந்தின் முன்பகுதியிலிருந்து ஓர் சலசலப்பு. என்னவென்று கவனிக்கையில் அது ஓர் கம்பீரமான பெண்மணியின் குரல். ‘கம்பீரம்’ , ‘பெண்மணி’ இரண்டும் ஒரு சேர வரும்போது சொல்முரணணியாக பார்க்கப்படும் சூழலில் அப்படியொரு குரல் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் எல்லாப் பொருத்தங்களையும் கொண்டிருந்தது.
“என்னங்க... பஸ் ஸ்டாப்ல தானே நிக்கணும்... இவ்ளோ தூரம் தள்ளி நிறுத்துனா எல்லாரும் எப்படி ஏறுவாங்களாம்“ என்று ஓட்டுநரிடம் உறுமியது அந்த கம்பீரம்.
“அதெல்லாம் எதுக்கு கேக்கற. பஸ் ஏறுனியா, டிக்கெட் எடுத்தியா, வந்தியானு இருக்கணும்” என்று சம்மந்தமே இல்லாமல் ஒரு பதில்.
“ஆனா, ரூல்ஸ் படி அங்க தானே நிக்கணும். நாங்க தானே பஸ் ஏறுறோம். எங்களுக்காக தானே பஸ்” என்று நியாயமான நியாயத்தை கூறினார் அந்த பெண்மணி.
“ஓ... ரூல்ஸ் பேசறியா நீ. எனக்கு தெரிஞ்ச ரூல்ஸ் இதான்” என்று கோபத்தை காட்ட பேருந்தை நிறுத்தினார் ஓட்டுநர்.
உடனே பேருந்தின் பின்பகுதியில் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த நடத்துநர் இறங்கி பஞ்சாயத்து தலைவராய் முன்னால் ஏறினார்.
“என்னம்மா உனக்கு பிரச்சனை ? அதான் பஸ் ஏறிட்டல. அப்புறம் என்ன” என்று நியாயமாக பேசுவது போலவே பேசினார் நம் பஞ்சாயத்து தலைவர்.
“பஸ் எதுக்கு தள்ளி நிறுத்தறிங்க. கரக்டான எடத்துல நிக்கணும் கேட்டது தப்பா?” விட்டுக்கொடுக்காமல் நம் கதாநாயகி.
“ரூல்ஸ் எல்லாம் நீ பேசக்கூடாது. அப்புறம் எதுக்கு இதுல ஏறுன? வாய மூடிட்டு வர்றதுனா வா இல்லனா எறங்கிடு”
“நா எதுக்கு எறங்கணும். டிக்கட் எடுக்கறேன்ல”
“அப்ப பேசாம வா..: “ கிட்டதட்ட ஒரு கட்டளை அந்த பெண்மணியிடம்.
“நீ எதுக்கு ணா இது பேசறது எல்லாம் காதுல வாங்கிட்டு. நீ வண்டிய எடுணா” கெஞ்சல் ஓட்டுநரிடம் என்று வித்தியாசம் காட்டினார் நடத்துநர்.
“பேசாம வர்றதுனா வர சொல்லு” என்று வண்டியை எடுத்தார் நியாயம் தன் பக்கம் இருப்பதைப் போல பிம்பத்தை முன்னிறுத்தி.
“சரி. நா பேசல” என்றார் தன் நியாயத்திற்கு எவரும் துணை நிற்காத விரக்தியில்.
பேருந்து புறப்பட்டது.
ஒரு 200 மீட்டர் சென்றிருக்கும், மறுபடியும் மனம் பொறுக்காதவராய் “ஆனாலும் நீங்க செஞ்சது தப்பு தான்” என்றார் அந்த பெண்மணி.
“இந்த பொம்பளைய வெச்சிக்கிட்டு பஸ் ஓட்ட முடியாது யா. கருமத்த” என்று பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்றுவிட்டார் ஓட்டுநர் அந்த தருணத்திற்காகவே காத்திருந்தது போல. உண்மை கோபத்தை வரவழைப்பது தான், ஆனாலும் இது அர்த்தமற்ற கோபமாக தோன்றியது.
2 நிமிடத்திற்கு எவருக்கும் எதுவும் புரியவில்லை. அதன்பிறகு, நடத்துநருடன் 10 பேர் இறங்கி ஓட்டுநரை சமாதானம் செய்ய சென்றனர் முனகிக்கொண்டே.
உடனே பேருந்தினுள் அர்ச்சனை ஆரம்பித்தது. ஓட்டுநருக்கு அல்ல அப்பெண்மணிக்கு.
“ஏம்மா... அவன் அவன் வேலைக்கு போக வேண்டாமா? நீ பாட்டுக்கு டிரைவர கடுப்பேத்திவிட்டுட்ட”
“ஒரு பொம்பளைக்கு அப்படி என்ன திமிரு ?”
“ஒரு பொம்பள எப்படி ரூல்ஸ் பேசலாம் ?”
“ஆனாலும் ஒரு பொம்பளைக்கு இவ்வளவு ஆகாது”
என ஆங்காங்கே தன் வீட்டு பெண்மணியை திட்டமுடியாத கையாலாகாதனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர் சில ஆண்கள்.
“இதில் யார் மீது தவறு ? அந்த பெண் கேட்டது நியாயம் தானே” என்ற குழப்பத்தில் நான். பெண்மைக்கும் பெண்ணுக்கும் எதிரான குரல்கள் வரும்போது காரண காரணிகளை ஆராய்வது முட்டாள்தனம் தான்.
ஆனால், அப்பெண்ணுக்கு ஆதரவாக ஒரு குரல் கூட ஒலிக்கவில்லை என்பது தான் வருத்தம். அது அவர் பெண் என்பதாலா? அல்லது அவர் கேட்டது நியாயம் என்பதாலா?
அவரும் மேற்கொண்டு பேச விருப்பமில்லாமல் அமைதியானார்.
நடத்துநரும் அந்த 10 பேரும் ஏதோ அநியாயத்தைக் கண்டு பொங்கியவரை ஆசுவாசப்படுத்தியது போல மகிழ்ச்சியுடன் அழைத்து வந்தனர். பேருந்தும் புறப்பட்டது ஓட்டுநரின் ஏளன பார்வையோடு.
அதைப் பற்றி எவரும் வாய் திறக்கவில்லை. பாவம்! அப்பெண்மணி எங்கு செல்ல எண்ணி வந்தாரோ அடுத்த பேருந்து நிறுத்தத்திலேயே இறங்கினார். இறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்பது சரியாக இருக்கும்.
இறங்கிய பின், பேருந்தையும் பேருந்தில் இருந்தவர்களையும் ஒரு பார்வை பார்த்தார். அப்பார்வை “உங்களுக்காக பேசியது என் குற்றம் தான்” என்று கோபத்தையும் அழுகையையும் கலந்து கூறியது. இப்படி பல பார்வைகளை உண்டாக்கிய குருடர்களுள் ஒருவனாய் கூனிக் குறுகிப் போனேன் நான்.
This bull shit society supress human emotion .....even as a human we hide our emotion towards truth with name of "I m a part of this society so forget it"
ReplyDeleteGood writing. Good messages(questions) put inside a casual incident.
ReplyDeletesimple and touche..
ReplyDeletesomething that happens in day-to-day life but never put in words..!
Till now :)