"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்" என்றான் பாரதி. அவன் கனவு மட்டும் பலித்திருந்தால், பல கனவுகள் பலி ஆகாமல் இருந்திருக்கும். சாதி, மதம், இனம் ,மொழி , மாநிலம் , நாடு போன்ற மேம்போக்கான பாகுபாடுகளை பற்றி அலசி ஆராயும் நாம் இதற்கெல்லாம் வித்திட்ட பாலின பாகுபாட்டை  அலட்சியப் படுத்துவதில் ஆச்சர்யமில்லை. காரணம், அது இயல்பு என்றாகிப் போனது தான்.

பெண் என்பவள் ஒரு சக மனிதி  என்று உணரும் ஞானம் பலருக்கும் வாய்க்காமல் போனது ஏன் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. பதில் மட்டும் கிடைத்த பாடில்லை.  ஆண்களால் முடிந்த சில விஷயங்கள் பெண்களால் முடியாது, பெண்களால் முடிந்த சில விஷயங்கள் ஆண்களால் முடியாது.  அதை உணர்ந்து ஒருவரையொருவர் உறுதுணையாகக் கொண்டு உலக  வாழ்வின் பூரணத்தை நோக்கி  வழி நடத்திச் செல்வதே ஆண், பெண் படைப்பின் சித்தாந்தம். ஆனால், இங்கு நடப்பது அனைத்தும் அதற்கு நேர்மாறானவை.


சர்வாதிகாரம், வேற்றுமை இவையெல்லாம் நாட்டு நடப்பு என்பர், இதே தோரணையில் நடக்கும் வீட்டு நடப்பிற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. பெண்களுக்கு எதிரான கொடுமை என்றால் அது கொலை, கொள்ளை, வன்முறை மட்டுமே என்று நினைத்தால் மன்னிக்கவும். அதையும் தாண்டி பல வெளி வராத , பெண்களின் உள்ளங்களை மட்டுமே வாட்டி எடுக்கும் பல கொடுமைகளும் உள்ளன. உதாரணமாக, இங்கு இரு  கதைகளை  எடுத்துக் கொள்வோம்.

வித்யா ஒரு புத்திசாலி பெண். பள்ளி காலத்தில் அவளுடன் படித்த அனைவரையும் விட மதிப்பெண்களும் அறிவும் பெற்றவள். பட்டம் படித்து பொறியாளராக வேண்டும் என்பது தான் அவள் கனவு. ஆனால், அவளால் பொறியியல் பட்டதாரி மட்டுமே ஆக முடிந்தது. சமூகம் திணித்த திருமணம் தான் அதற்கு காரணம் . "என்ன இவ்ளோ வயசு ஆகியும் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணாம வெச்சுருக்கிங்க "  என்று ஒரு 22 வயது பெண்ணைப் பார்த்து கேட்கும் அவலம் இந்நாட்டில் மட்டுமே காணமுடியும் பொக்கிஷம். பல கண்டுபிடிப்புகளின் பிறப்புக்கு காரணமாக வேண்டிய அவளால், இரு குழந்தைகளின் பிறப்புக்கு மட்டுமே உதவ முடிந்தது. குழந்தை பிறப்பு அவளால் மட்டுமே முடிந்த ஒன்று தான். அதற்காக அவள் கனவுகள் கலைக்கப்பட்டதற்கு காரணம் குழந்தைகள் என்றாகுமா? நிச்சயமாக இல்லை.

அவள் உடல் ரீதியாக எந்த விதத்திலும் புண்படுத்தப்படவில்லை. யாருடைய வார்த்தையும் அவளை துளைத்தெடுக்கவில்லை. இருந்தும் அவள் துன்புறுத்தப்படுகிறாள்.  இத்தனைக்கும் அவள் சுற்றத்தார் அவளுக்கு ஓர் நல்வாழ்வு ஏற்படுத்திக் கொடுப்பதாகவே நினைத்து இதை செய்தனர். அவர்களது அன்பு பாசத்தால் மறைக்கப்பட்டுவிட்டது அவள் கனவு. அதற்காக அன்பு பாசமே இருக்கக்கூடாதா என்றால் அது தவறு. எதிலும் அவர்களுக்கான இடைவெளியும், சுதந்திரமும் கொடுக்கப்படவேண்டும். இது ஆண்களுக்கும் பொருந்தும். வித்யாவின் மனநிலையை சற்று சிந்தித்து பார்க்கையில் , அவளுக்குள் ஒரு போராட்டமே நடந்திருக்கும்.  அவள் மீது அக்கறை கொண்ட அன்பான குடும்பம் , அக்குடும்பத்தின் மீது எந்நேரமும் குற்றம் சொல்ல காத்திருக்கும் சமூகம். இதற்கிடையில் அவளுக்கான கனவு. அதை அவள் வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கூட அவளுக்கு கிடைத்திராது. அவள் உணரும் முன்பே அவளுடைய கனவு நசுக்கப்பட்டிருக்கும். கருவை சிதைப்பது எவ்வளவு கொடுமையோ, அதே அளவு கனவை சிதைப்பதும் தான்.

நாம் சாருவின் கதைக்கு வருவோம். பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களே அதிகம் கொண்டவள்  சாரு. தைரியசாலி , சமூகத்தில் பெண்கள் மீது பிணைக்கப்பட்டிருக்கும் சங்கிலிகளை உடைப்பதிலும் கூட. தன் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது மட்டும் இல்லாமல், அவர்களுக்கு பிரச்சனை என்றாள் முன் நிற்பதிலும் அவள் தான் முன்னோடி. அதற்காக அவள் வாங்கிய பெயர்கள் 'பஜாரி ', 'அடங்காப்பிடாரி ' போன்ற வகையறாக்களை சேர்ந்தவை. ஏன் இன்னும் சிலர் அவளை 'தே.....' என்கிற வார்த்தையில் கூட அழைப்பதுண்டு. இதையே ஒரு ஆண் செய்திருந்தால் 'வீரன்,தீரன் ' என்று போற்றப்பட்டிருப்பான். அவளைப்  போற்றிப் புகழ வேண்டாம், ஆனால் ஒரு குறைந்தபட்ச மரியாதையாவது அவளுக்கு கிடைத்திருக்கலாம். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் துடித்த சாரு, தற்கொலை செய்து கொள்கிறாள். காரணமே தெரியாத சுற்றத்தாரும் "அவ நடத்தை சரியில்ல அது அவங்க வீட்டுக்கு தெரிஞ்சுருச்சு , அதான் தற்கொலை பண்ணிகிட்டா"  என்று கிளப்பி விடுகின்றனர் . உலகின் பல கொடுமைகாரர்களுக்கு கிடைத்த இறுதி மரியாதை கூட, அவளுக்கு கிடைக்காமல் போனது யார் குற்றம்?

சாரு தன் உயிரை மட்டுமே மாய்த்துக் கொண்டாள். இங்கு இருப்பவர்கள் கலாசார சீரழிவு என்னும் வஸ்திரத்தால் அவள் பண்பை மாய்த்துவிட்டனர். எது கலாசார சீரழிவு ? ஆணுடன் பேசாதே , அவனுடன் பழகாதே என்று அவள் சமூக சிந்தனையை முடக்குவதா, இல்லை சகமனிதரை மதித்து பழகுவதா! சாருவின் ஆன்மாவும் கண்ணீர் வடித்திருக்கும் இவர்கள் அறியாமையை கண்டு.  ஒரு பெண்ணைப் பற்றி முழுதும் அறியாமலேயே அவள் பாத்திரத்தை கொலை செய்ய கதை உருவாக்குபவர்களுக்கு , அவள் நிலைமையை உணர நேரம் இருந்திருக்காது தான்.

இம்மாதிரி பல வித்யாக்களும், பல சாருக்களும் நம்மை சுற்றி தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை பெண் தெய்வங்களாக போற்ற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. சொல்லப் போனால் பிரச்சனை ஆரம்பிக்கும் இடமே, அப்படி அவர்களை பிரித்துப் பார்க்கும் போது தான். அவர்களை அவர் போக்கில் விடுங்கள், பிரச்சனைகள் சுமூகமாகும். அடுப்படி மட்டுமே அவர்களது நிரந்தர உறைவிடம் என்பது மாற வேண்டும்.

"ஒரு பொண்ணால எப்டி இத பண்ண முடியும்... "

"ஒரு பொண்ணுகிட்ட போய் இப்டி தோத்துட்டு வந்துருக்கியே... "

"ஒரு பொண்ணுக்கு என்ன இவ்ளோ ஆசை .."

"ஒரு பொண்ணு சொல்றத நான் கேக்கணுமா?"

"ஒரு பொண்ணு தானே... "

போன்ற எண்ணங்கள் ஆண்களுக்கும் ,

"நான் ஒரு பொண்ணு, எப்டி நான் போய்... "

"நான் ஒரு பொண்ணு, எப்டி என்னால முடியும்.."

"ஒரு பொண்ணு பண்ணுனா ஒத்துக்குவாங்களா .."

"நான் ஒரு பொண்ணு, மத்தவங்க சொல்றத தான் கேக்கணும் "

போன்ற எண்ணங்கள் பெண்களுக்கும் இருக்கும் வரையில் இக்கொடுமைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

பெண் என்பவள் ஒடுக்கப்பட்டவளும் அல்ல, வலிமையற்றவளும் அல்ல. நம்மால் அந்த நிலைக்கு தள்ளப்பட்டவள். இன்றைய வளர்ந்து வரும் நாகரிகத்தில், பெண்கள் வெளி வர ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால், அதுவும் அவர்களுக்கு பிரச்சனை கொடுக்கவே ஆரம்பித்திருக்கிறது. அப்படிப்பட்ட பெண்களை எளிதாக அடைந்து விடலாம் என்பது சில காமுகர்களின் பார்வை. அது அனைவரின் சிந்தனை இல்லையெனினும் சமீபத்தில் 11 மாத குழந்தை கற்பழிக்கப்பட்ட செய்தி மற்றவர்களையும் கிலி அடையத்தான் செய்கிறது. இருந்தும் அதையும் உடைத்தெறிந்து வெளி வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருகிறது.

ஒரு பெண் இங்கு தான் செல்ல வேண்டும் , இவ்வளவு நேரம் தான் இருக்க வேண்டும் , இவ்வளவு தான் பேச வேண்டும் , இவர்களோடு தான் பேச வேண்டும்  என்பதெல்லாம் தான் பெண்களுக்கான இலக்கணம் என்றால், அதை திருத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு. பெண்களுக்கான இலக்கணம் என்பதே உடைத்தெறிக்க பட வேண்டிய ஒன்று தான். அவர்களை அவர்களாக இருக்க விடாமல் செய்யும் கருணையும் கூட கொடுமையானது தான்.

பெண்களுக்கான குரல்கள் ஆங்காங்கே ஒலித்தாலும் அதில் பலவும் சில பெண்களின் சுயநல விரோதத்தை தீர்த்துக் கொள்ளவே பயன்படுகிறது. பெண்களே! உங்களுக்கான ஆதரவுகள் பெருக துவங்கி இருக்கின்றன. அதை சரியான முறையில் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துங்கள். பாலின பாகுபாடு குறைய சில காலம் பிடிக்குமெனினும் அதற்கான ஆணிவேராக இது அமையும். ஆண், பெண் இருவருடைய ஒத்துழைப்பின்றி இது நிறைவேறாத ஆசையாகவே இருக்கும்.

"விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்
சாத்திரங்கள் பலபல கற்பராம்
சவுகரியங்கள் பலபல செய்வராம்
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்
மூடக் கட்டுகள் யாவும் தகர்ப்பராம்
காத்து மானிடர் செய்கை அனைத்தையும் கடவுளர்க் கினிதாகச் சமைப்பராம்"

இதில் பாதி நிகழ ஆரம்பித்திருக்கிறது. மீதியும் நிகழ, பெண்மையைப் புகழ்வோம்.