எங்கள் வீட்டில் எனக்கு அடிக்கடி சொல்லப்படும் கதைகளில் இதுவும் ஒன்று. நான் பிறந்த போது மருத்துவமனையில் இருந்த அனைத்து நர்ஸ்களும் என்னை பாசமாக கொஞ்சியதாகவும், அதன் பிறகு எங்கள் வீட்டில் இருந்து ஒவ்வொரு முறையும் அங்கு சென்ற போது அவர்கள் என்னைப் பற்றி விசாரித்ததாகவும் சொல்வார்கள். இதை முதன்முறையாக நான் கேட்ட போது இதில் இருந்த கற்பனைத் தன்மையை ஆராய என் மனம் முன்வரவில்லை. அன்றிலிருந்தே முகம் தெரியாத அவர்களின் அன்பை எண்ணி எனக்கு நானே சிலிர்த்துக் கொள்வேன். எனக்கு நர்ஸ் என்றாலே ஒரு விவரிக்க முடியாத அன்பு உண்டாக அது ஒரு முக்கிய காரணம்.

சிலர் இப்படிக் கூறி கேள்விப்பட்டதுண்டு. "நான் மாத்திரை எவ்வளவு வேணும்னாலும் எடுத்துப்பேன். ஆனா, ஊசி மட்டும் போட்டுக்க மாட்டேன் ". நான் அப்படியே நேரெதிர். அதற்கு காரணம் கூட எனக்கு நர்ஸ்கள் மீதான அன்பு தான் என நினைக்கிறேன். அவர்கள் முகத்தில் இருக்கும் கனிவு ஊசிகளின் வலிகளை பொருட்படுத்த விடுவதில்லை.
அப்பாவுக்கு உடல் நலமில்லாத ஒரு தருணத்தில் அவருடன் நான் மருத்துவமனையில் தங்கியிருக்க நேர்ந்தது. அப்பொழுது தனி அறைக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டில் இன்னொரு இளம்வயது பையனுடன் அறையை பகிர்ந்து கொண்டிருந்தோம். அவர் காலேஜ் முதல் வருடம் சேர போகும் மாணவன் என்று சில உரையாடல்களின் வாயிலாய் அறிந்திருந்தேன். அவர் காஸ்மெட்டிக் சர்ஜரி எனப்படும் ஒரு வித அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் காதுமடல் சற்று மடங்கியிருந்த காரணத்தினால் அதை சரி செய்வதற்காக அந்த அறுவை சிகிச்சை. அடுத்த நாள் அறுவை சிகிச்சை என்கிற நிலைமையில் அந்த அறைக்கு அவ்வப்போது வரும் ஒரு ட்யூட்டி நர்ஸ் அவருடன் பேசிக் கொண்டதைக் கேட்க நேர்ந்தது.
"டேய், உன் காது இப்டியிருக்குனு சர்ஜரி பண்ணனுமா? இது கடவுள் குடுத்த வரம் டா. இது வேண்டாம்னு உங்க அப்பா கிட்ட சொல்லு டா. ப்ளீஸ் டா..! " என்றார் இனிமையுடன் கலந்த உரிமையோடு.
"அப்பா கேப்பாரானு தெரியல கா.."
"இதெல்லாம் ஒவ்வொருத்தரோட இஷ்டம் நான் சொல்லவே கூடாது.. இருந்தாலும் ரொம்ப வலிக்கும் டா... உன்ன பாத்துக்க தான் நாங்க இங்க இருக்கோம் இருந்தாலும் உங்க அப்பா கிட்ட சொல்லிப் பாரு செரியா ?"
அந்த இரண்டு நிமிட உரையாடலில் அத்தனை கரிசனம். அவர் சொன்னது போன்றே அறுவை சிகிச்சை முடிந்து வலியால் துடித்த அந்த பையனை அவ்வளவு சிரத்தையாக கவனித்துக் கொண்டார் அந்த நர்ஸ். அங்கிருந்த அனைவரிடமும் அதே கனிவு. எனக்கே அறியாமல் அவர்களுக்கு என்னைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டாகி விட்டது.
"ட்ரிப்ஸ் முடியற மாறி இருந்த என்ன வந்து விளிக்கணும் கேட்டில்லோ?" என்று அவர் மலையாள தமிழில் பேசியபோது எனக்குள் அப்படியொரு பூரிப்பு.
"நான் விளிக்கும் சிஸ்டரே, நீ போய்க்கோ!" என்று மலையாளத்தில் பேசி என் அன்பை காட்டிவிட எனக்கும் ஆசை தான். ஆனால், இந்த மாதிரி எதிர்பாராத உரையாடல்களில் வார்த்தைகள் அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை. நான் "ம்ம்ம்.." என்று தலையாட்டிவிட்டதில் இன்னுமே என் மீது எனக்கே கோபம். நர்ஸ்கள் மீதான என் அன்பை எப்போதும் வெளிப்படுத்த முடிவதில்லை என்கிற அங்கலாய்ப்பு. அதன் உச்சமே இந்த பதிவு.
நேற்று கூட நான் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்றிருந்த போது "அவ்வளவா வலிக்காது செரியா, டக்குனு முடிஞ்சுரும்.." என்றது எப்போதுமே நான் கண்ட கனிவான நர்ஸ் முகம். அப்போது எனக்கு தோன்றிய சிந்தனை இது. நாம் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும்பட்சத்தில் நமக்கு நெருக்கமானவர்களிடம் கூட வெறுப்பைக் காட்டி விடுவோம் வேலைப்பளுவைக் காரணம் கூறி. ஆனால், இவர்களால் மட்டும் எப்படி கனிவுடன் கூடிய சேவையைக் கொடுக்க முடிகிறது. நான் காணாத எத்தனையோ செவிலியர்கள் உலகின் பல மூலைகளில் இதை வாழ்நாள் முழுதும் செய்து வருகின்றனர். அதுவும் இப்படியொரு பெருந்தொற்று காலத்தில் அவர்களின் பங்களிப்பை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.
நான் அடிக்கடி இப்படி நினைத்ததுண்டு, 'செவிலியர்கள் தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்' என்று. அந்தக் கருத்தை நானே மறுக்க விழைகிறேன். அவர்கள் தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களல்ல, அவர்கள் தான் தேவதைகள்.

 தாத்தா இறந்து இரண்டு வாரங்களாகிவிட்டது. அவரின் மரணச் செய்தி வந்த கணத்திலிருந்து நான் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறேன் என்று என்னாலே உணர முடியவில்லை. ஆழ்ந்த துயரமோ அடக்க முடியாத அழுகையோ இல்லை. ஆனாலும் ஒரு விதமான இறுக்கமான மனநிலை. அவரை அடக்கம் செய்த அன்று இரவே கூட சம்பந்தமே இல்லாமல் என் பாட்டியின் இழப்பை எண்ணி சற்று நேரம் அழுது கொண்டிருந்தேன்.

அவர் என்னைப் பாசமாக கொஞ்சியதாகவோ கடுமையாக திட்டியதாகவோ எனக்கு நினைவு இல்லை. எந்த விதமான உணர்வுகளையும் அவ்வளவு எளிதில் வெளிக்காட்டிக்கொள்ளாத, தன்னை ஒரு அக்மார்க் alpha male ஆக நினைத்துக் கொண்டிருந்த ஆசாமி. அவர் கடைசி காலக்கட்டங்களில் என்னைப் பார்க்க வேண்டும் என்று அவர் சொன்னதாக கேள்விப்பட்டு அவரைப் பார்க்க செல்வேன். "வாடா!" என்று சொல்லிவிட்டு அவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார். அவர் வேலை என்றால் சிகரெட் புகைப்பது, பழைய நாளிதழ்களைப் புரட்டுவது, வீதியில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்ப்பது. "இதுக்கு தான் என்ன வர சொன்னீங்களா?" என்று கேட்டுவிட தோன்றும். அப்படி உரிமையாக கேட்டுவிடக்கூட முடியாத மேம்போக்கான உறவு தான் எனக்கும் தாத்தாவிற்கும்.
தாத்தா ஒரு சரியான சரக்கு வண்டி. அவர் பதுக்கி வைத்திருந்த காலி மதுபாட்டில்களை கடத்திக்கொண்டு போய் கிரிக்கெட் பந்து வாங்குவதில் தொடங்கியது என் புரட்சி. அவரை ஏமாற்றிவிட முடிந்ததில் அப்படியொரு சந்தோஷம் அச்சமயத்தில்.
தற்போது தாத்தாவைப் பற்றி யோசித்தால் எனக்கு முக்கியமான இரண்டு சம்பவங்கள் உடனே ஞாபகத்திற்கு வருகின்றன.
நான் ஒரு சமயம் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு மிகப்பெரும் விபத்து நேர்ந்தது. பேருந்தில் இருந்த எங்களுக்கு பெரிதாக எதுவும் பாதிப்பில்லை என்றாலும் இன்னொரு வாகனமான காரில் வந்தவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தும் காரும் மேம்பாலத்தில் மோதிக் கொண்டதில், கார் பாலத்தில் இருந்து கீழே விழுந்து நிகழ்ந்தது அந்த கோர சம்பவம். நல்ல வேளையாக பேருந்து ஓட்டுநர் கன்ட்ரோல் செய்து நிறுத்தியதில் நாங்கள் தப்பித்தோம். இதை நான் எங்கள் வீட்டில் சொல்லியிருந்தேன். தாத்தாவும் இதை அறிந்திருந்தார். அதே சம்பவத்தை அவர் இன்னொருவரிடம் கூறிக் கொண்டிருக்கையில் நான் கேட்க நேர்ந்தது. "பஸ்சும் காரும் மோதி பெரிய ஏக்சிடெண்ட். கார்ல இருந்தவங்க எல்லாம் உடனே அவுட்டு. பஸ் பாலத்துல தொங்கிற்றுந்துருக்கு. லோகேஸ் எல்லாம் ஏதோ கம்பிய புடிச்சு தொங்கிட்ருந்துருக்கான். அப்புறம் ஊர் மக்கள் தான் வந்து காப்பாத்திருக்காங்க..!" கதை சுவாரஸ்யத்திற்காக என் உயிரை ஊசலாட விட்டது எனக்கு பேரதிர்ச்சி தான். இருந்தாலும் அவரிடம் இருந்த கதை சொல்லல் தான் என்னிடம் ஒட்டிக்கொண்டதோ என்றொரு எண்ணமும் உண்டு.
இன்னொரு சமயம் நான் புத்தகம் வெளியிட்டு வெகு சில நாட்களில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த சில உறவினர்கள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது தாத்தாவும் அங்கிருந்தார். "நம்ம வீட்ல ஒரு பையன் இதெல்லாம் பண்றது ரொம்ப சந்தோஷம்.." என்று அவர்கள் கூறிக் கொண்டிருக்கையில் நான் எதேச்சையாக தாத்தாவைப் பார்க்க நேர்ந்தது. என்னைப் பார்த்து மிகவும் பெருமையோடு சிரித்துக் கொண்டிருந்தார். அதற்கு முன்னதாகவோ பின்னதாகவோ நிச்சயமாக அவரிடம் இருந்து அப்படியொரு பார்வை கிடைக்கவில்லை. நான் விளையாட்டாக வெளியிட்ட புத்தகம் அது. அதற்கு மற்றவர்கள் பாராட்டும்போது பலமுறை சந்தோஷப்பட்டுள்ளேன். ஆனால், நான் பெருமையாக உணர்ந்த தருணம் அது மட்டுமே.
ஒரு வேளை இந்தப் பதிவை தாத்தா படிக்க நேர்ந்திருந்தால் தனக்குத் தானே சிரித்துக் கொண்டிருப்பார்!
எனக்கும் தாத்தாவிற்குமான உறவை நான் விவரிக்க முயல்கையில் எனக்கு ஆரண்ய காண்டம் படத்தில் வரும் ஒரு டயலாக்கின் மறு ஆக்கம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
"உனக்கு உங்க தாத்தா னா ரொம்ப புடிக்குமா?"
"அப்படி இல்ல. ஆனாலும், அவர் எங்க தாத்தா!"


பரியேறும் பெருமாள் படம் பார்த்திருந்தால் உங்களுக்கு தெரியும். கறுப்பியை தண்டவாளத்தில் கட்டி வைக்கும் முதல் காட்சியில் திரையில் மட்டுமின்றி அதை தாண்டியும் நம்முள் ஒரு விதமான பதைபதைப்பு நிறைந்திருக்கும். அதே மனநிலை மாரி செல்வராஜ் எழுதிய "அவர்கள் எனக்கு சுரேஷ் என்று பெயரிட்டார்கள்" என்ற சிறுகதையை படிக்கும் போதும் நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கும். ஒரு நாயின் பார்வையில் அதன் வாழ்வை பார்க்க நேரிட்டால் அது அப்படி தான் இருக்க முடியும் என்று நம்மை நம்ப செய்து விடுகிறது. சாதாரணமாகவே  நாய் என்ற சொல்லை நாம் இழிவுபடுத்த மட்டுமே கூற விழைகின்றோம். உதாரணமாக,


"அவன் ஒரு பரதேசி நாய்!"


"அவனைப்  பாத்தியா நாய் மாறி பொறுக்கிட்டு இருக்கான்"


"ஏண்டா நாய் மாறி சாப்பிட்ற ?"


இப்படியெல்லாம் சொல்வதை மிக சௌகரியமாக பழகிக் கொண்டோம். ஆனால், இதை அப்படியே மாற்றி நாயை ஒரு அப்பாவியான ஜீவனாய் முன்னிறுத்துவதில் தான் மாரி செல்வராஜ் மாறுபடுகிறார். கறுப்பியும் சுரேஷும் நம் கண்களை மட்டுமின்றி மனங்களையும் நிறைத்து விடுகிறார்கள். அவர்களை பார்க்கும்போதும் படிக்கும்போதும் தான் இதற்கு முன் நான் கடந்து வந்த எத்தனையோ கறுப்பிகளையும் சுரேஷ்களையும் திரும்பிப் பார்க்க தோன்றுகிறது. அந்த கதையில் வரும் சுரேஷ் இப்படி சொல்லியிருப்பான்.


'மாங்கொட்டாரத்தாளையும், ஐயாக்குட்டியையும் நான் தான் வெறி பிடித்து கடித்தேன் என்று சொல்வதை தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மாங்கொட்டாரத்தாள் அந்த பல்லு போன பாழாப்போன கிழவி என் வாலை மிதித்து நசுக்கியதால் வலி பொறுக்க முடியாமல் கடித்துவிட்டேன். அந்த ஐயாக்குட்டி கண் தெரியாத கபோதி ஒரு ஓரமாய் படுத்திருந்த என் மீது பொத்தென்று விழுந்ததால் அவசரத்தில் பயந்து கடித்தேன். நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை அப்படி செய்யும் அளவுக்கு என் உடம்பில் எனக்கு திறனும் இல்லை. அப்புறம் அப்படி ஒரு கடிநாயாக நான் வளர்க்கப்படவுமில்லை. அதற்காக "நான் ஏதோ செத்துப்போன கழுதை கறியை தின்னுட்டு வந்து கோட்டி புடிச்சு எல்லாரையும் கடிக்கிறேன்னு இவர்கள் சொல்வது அபாண்டம்".'


(மன்னிக்கவும். நான் இதை இங்கு எழுத வேண்டாம் என்றே நினைத்திருந்தேன். இருந்தாலும், எழுதாமல் விட என் மனம் ஒப்பவில்லை. அதனால் சுருக்கமாக சொல்லி விடுகிறேன். சுரேஷ் கடித்ததும் 'கர்ணன்' திருப்பி அடித்ததும் எந்த விதத்திலும் மாறுபட்டுவிடவில்லை என்னைப் பொறுத்தவரையில்!)


ஒரு எளிமையான அப்பாவியின் பேரில் நம்மால் எவ்வளவு எளிதில் குற்றம் சுமத்தி விடமுடிகிறது. இதையும் இன்னொன்றையும் நான் உணர சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் என் நினைவிற்கு வருகிறது.


அந்த இன்னொன்று என நான் கூறியது நா.முத்துக்குமார் சொன்ன இந்தக் கூற்று "நான் பூனை வளர்க்கும் சுதந்திரத்தை எதிர் வீட்டில் புறா வளர்ப்பவன் பறித்துக் கொள்கிறான்".


நான் எந்த செல்லப் பிராணியும் வளர்ப்பவன் அல்ல. எங்கள் வீட்டின் அருகில் சுற்றித் திரியும் கருவாச்சிக்கு அவ்வப்போது திண்பண்டங்கள் போடுவது உண்டு. 'கருவாச்சி' எந்த விதமான நிறவெறி காரணமுமின்றி அவளைப் போலவே அப்பாவியான எங்கள் வீட்டு பாப்பா வாஞ்சையுடன் வைத்த பெயர். இப்பொழுது கூட எங்கள் வீட்டுக் கதவின் முன்னால் காதுகளை மட்டும் தூக்கிக் கொண்டு படுத்திருக்கிறாள். அவள் என்னை துரத்தாமல் இருக்க லஞ்சமாக ஆரம்பித்த எங்கள் வீட்டு உணவும் திண்பண்டங்களும், நாளடைவில் அவளுக்கு அன்பான வாடிக்கையாகிவிட்டது. அப்படி ஒரு நாள் அவளுக்கு நான் பிஸ்கட்டுகள் போட்டுக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ சில கற்கள் அவளை வந்து தாக்கியது. வலி தாங்க முடியாமல் அலறிக் கொண்டு ஓடினாள் கருவாச்சி. அதிர்ச்சியில் கல் வந்த திசையில் நோக்கினேன் நான். நைட்டியை தூக்கி மடித்துக் கட்டியவாறு கையில் இன்னும் சில கற்களோடு ஆக்ரோஷமாக வந்து கொண்டிருந்தார் எங்கள் வீதி குடோன் அம்மா. எங்கேயோ ஓடி பயந்து பம்மிக்கொண்டிருந்த கருவாச்சியின் திசையில் கையில் இருந்த மீதி கற்களையும் வீசிவிட்டு கத்திக்கொண்டே அவர் வீட்டிற்கு திரும்பிச் சென்றார்.


"திருட்டு நாய் கோழிய எல்லாம் வந்து தூக்கிட்டு போயிருது நைட்டு ஆனா... ஊர் மேயற நாய்க்கு நம்ம வீதில என்ன வேல... இந்த...." அதற்கு மேல் அவர் பேசியது கேட்காத தூரம் சென்றிருந்தார். நிற்க. என்னை யாரென்றே அவருக்கு தெரியாது அதனால் அவர் திட்டியது என்னைப் பற்றியதாக இருக்க வாய்ப்புகள் குறைவே!


கருவாச்சி அவர்கள் வீடு வரையில் சென்று எவருமே பார்த்ததில்லை, இருந்தும் இப்படியொரு குற்றச்சாட்டு வந்தது வீதியில் இருந்த அனைவருக்குமே ஆச்சர்யம் தான். சில நாட்களுக்கு பின் தான் தெரிந்தது, அந்த மாயமான கோழிகளுக்கு காரணம் அவர்கள் வீட்டிற்கு ரெகுலராக வந்து சென்று கொண்டிருந்த ஆசாமி என்று. அதன் பிறகு அந்த குடோன் அம்மாவின் சத்தம் வீதியில் கேட்கவில்லை. 'ஒரு நாய் தூக்கிட்டு போயிருச்சே' என்கிற ஆதங்கம் அவருக்கு ஆறியிருக்குமோ என்னவோ. ஆனால், கருவாச்சியின் காயங்கள் ஆற சில தினங்கள் பிடித்தன.


கருவாச்சி எனக்கு உணர்த்திய இன்னொரு கூற்று "அம்மா னா யாருக்கு தான் புடிக்காது. நாய் பூனைக்குக் கூட தான் புடிக்கும்". இது புதுப்பேட்டை படத்தில் தனுஷ் பேசிய வசனம்.


கருவாச்சி மிக கெட்டிக்காரி. ஒரே பிரசவத்தில் ஐந்து குட்டிகள். எங்கள் வீட்டிற்கு அருகிலேயே தான் மொத்த குடும்பமும் தஞ்சம். குட்டிகள் வந்த பிறகு கருவாச்சி அவ்வளவாக சாப்பிடுவதில்லை. நாங்கள் பிஸ்கட்டுகளோ உணவோ கொடுக்கும்போது குட்டிகள் முண்டியடித்துக் கொண்டு சாப்பிடும்போது நடுவில் வராமல் வேடிக்கைப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொள்ளும் அன்பான அம்மாவாக மாறிவிட்டாள். அவளுக்கென தனியாக நாங்கள் ஏதாவது வைத்தாலும் குட்டிகள் அருகில் வந்துவிட்டால் சாப்பிடாமல் விலகி சென்றுவிடுகிறாள், விவரம் தெரியா குட்டிகளும் முழுவதையும் முக்கி விடுகின்றன. அம்மாக்கள் பட்டினி கிடப்பது இப்புவியின் சாபம் தான் போலும்.


இதைப் பற்றியெல்லாம் பேசும்போது எனக்கு ஜிக்கியின் ஞாபகம் வருகிறது. எனக்கு விவரம் தெரியாத வயதில் எங்கள் வீட்டிற்கு வந்தவன் தான் ஜிக்கி. எனக்கு ஞாபகம் இருப்பது எல்லாம் தன் கடைசி காலத்தில் நோய்வாய்ப்பட்டு நடக்கவே முடியாமல் இருந்த ஜிக்கி. அப்படி இருந்தவனை எங்கள் வீட்டில் இருந்த அநேகம் பேரும் அருவருப்புடனே பார்த்தோம். எங்கேயாவது கொண்டு விட்டு விட வேண்டுமென்பதே அனைவரின் தீர்க்கமான முடிவு. அப்படி ஒரு நாள் அவன் கொண்டு செல்லவும் பட்டான். எனக்கு இருக்கும் நிறைவேறவே வாய்ப்பில்லாத ஆசைகளின் பட்டியலில் இப்பொழுது இதுவும் இணைகிறது. 'வாய்ப்பு கிடைத்தால் பரிதாபமாக எங்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜிக்கியை பாசமாக ஒரு முறையாவது கொஞ்சி விட வேண்டும். அருவருப்பை மட்டுமே என் கண்களில் இருந்து பார்த்தவனுக்கு ஒரு இம்மி அளவு அன்பையாவது காட்டி விட வேண்டும்.'


 "இத மட்டும் சொல்றியே.. நாய கொஞ்சறவங்கள எல்லாம் பாத்ததே இல்லையா?" என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. நிச்சயமாக பாசமழை பொழியும் பலரையும் எனக்கு தெரியும். என் நெருங்கிய சொந்தங்கள் நண்பர்கள் கூட குடும்பமாக எண்ணி வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பதிவு என்னைப் போன்ற அலட்சியவாதிகளுக்காக மட்டுமே எழுதியது. இந்த நேரத்தில் என்னையும் ஒரு நாயைப் போல எண்ணிக் கொஞ்சிய ஒரு பெண்ணைப் பற்றி கூற நினைக்கிறேன். என் கல்லூரித் தோழி என்னை அழைக்கும்போதெல்லாம் "நாயே" என்று கூறி தான் அழைப்பாள். அதில் ஒரு உரிமையும் கனிவும் எப்போதும் கலந்திருக்கும். இப்போதும் நாங்கள் எப்போதாவது பேசிக்கொள்ளும்போது அவள் அப்படி அழைப்பதுண்டு. அவள் என்னை "நாயே" என்றழைப்பது எனக்கு எப்போதுமே பிடிக்கும். இப்போது இன்னும் பிடிக்கிறது!