தாத்தா இறந்து இரண்டு வாரங்களாகிவிட்டது. அவரின் மரணச் செய்தி வந்த கணத்திலிருந்து நான் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறேன் என்று என்னாலே உணர முடியவில்லை. ஆழ்ந்த துயரமோ அடக்க முடியாத அழுகையோ இல்லை. ஆனாலும் ஒரு விதமான இறுக்கமான மனநிலை. அவரை அடக்கம் செய்த அன்று இரவே கூட சம்பந்தமே இல்லாமல் என் பாட்டியின் இழப்பை எண்ணி சற்று நேரம் அழுது கொண்டிருந்தேன்.
அவர் என்னைப் பாசமாக கொஞ்சியதாகவோ கடுமையாக திட்டியதாகவோ எனக்கு நினைவு இல்லை. எந்த விதமான உணர்வுகளையும் அவ்வளவு எளிதில் வெளிக்காட்டிக்கொள்ளாத, தன்னை ஒரு அக்மார்க் alpha male ஆக நினைத்துக் கொண்டிருந்த ஆசாமி. அவர் கடைசி காலக்கட்டங்களில் என்னைப் பார்க்க வேண்டும் என்று அவர் சொன்னதாக கேள்விப்பட்டு அவரைப் பார்க்க செல்வேன். "வாடா!" என்று சொல்லிவிட்டு அவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார். அவர் வேலை என்றால் சிகரெட் புகைப்பது, பழைய நாளிதழ்களைப் புரட்டுவது, வீதியில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்ப்பது. "இதுக்கு தான் என்ன வர சொன்னீங்களா?" என்று கேட்டுவிட தோன்றும். அப்படி உரிமையாக கேட்டுவிடக்கூட முடியாத மேம்போக்கான உறவு தான் எனக்கும் தாத்தாவிற்கும்.
தாத்தா ஒரு சரியான சரக்கு வண்டி. அவர் பதுக்கி வைத்திருந்த காலி மதுபாட்டில்களை கடத்திக்கொண்டு போய் கிரிக்கெட் பந்து வாங்குவதில் தொடங்கியது என் புரட்சி. அவரை ஏமாற்றிவிட முடிந்ததில் அப்படியொரு சந்தோஷம் அச்சமயத்தில்.
தற்போது தாத்தாவைப் பற்றி யோசித்தால் எனக்கு முக்கியமான இரண்டு சம்பவங்கள் உடனே ஞாபகத்திற்கு வருகின்றன.
நான் ஒரு சமயம் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு மிகப்பெரும் விபத்து நேர்ந்தது. பேருந்தில் இருந்த எங்களுக்கு பெரிதாக எதுவும் பாதிப்பில்லை என்றாலும் இன்னொரு வாகனமான காரில் வந்தவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தும் காரும் மேம்பாலத்தில் மோதிக் கொண்டதில், கார் பாலத்தில் இருந்து கீழே விழுந்து நிகழ்ந்தது அந்த கோர சம்பவம். நல்ல வேளையாக பேருந்து ஓட்டுநர் கன்ட்ரோல் செய்து நிறுத்தியதில் நாங்கள் தப்பித்தோம். இதை நான் எங்கள் வீட்டில் சொல்லியிருந்தேன். தாத்தாவும் இதை அறிந்திருந்தார். அதே சம்பவத்தை அவர் இன்னொருவரிடம் கூறிக் கொண்டிருக்கையில் நான் கேட்க நேர்ந்தது. "பஸ்சும் காரும் மோதி பெரிய ஏக்சிடெண்ட். கார்ல இருந்தவங்க எல்லாம் உடனே அவுட்டு. பஸ் பாலத்துல தொங்கிற்றுந்துருக்கு. லோகேஸ் எல்லாம் ஏதோ கம்பிய புடிச்சு தொங்கிட்ருந்துருக்கான். அப்புறம் ஊர் மக்கள் தான் வந்து காப்பாத்திருக்காங்க..!" கதை சுவாரஸ்யத்திற்காக என் உயிரை ஊசலாட விட்டது எனக்கு பேரதிர்ச்சி தான். இருந்தாலும் அவரிடம் இருந்த கதை சொல்லல் தான் என்னிடம் ஒட்டிக்கொண்டதோ என்றொரு எண்ணமும் உண்டு.
இன்னொரு சமயம் நான் புத்தகம் வெளியிட்டு வெகு சில நாட்களில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த சில உறவினர்கள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது தாத்தாவும் அங்கிருந்தார். "நம்ம வீட்ல ஒரு பையன் இதெல்லாம் பண்றது ரொம்ப சந்தோஷம்.." என்று அவர்கள் கூறிக் கொண்டிருக்கையில் நான் எதேச்சையாக தாத்தாவைப் பார்க்க நேர்ந்தது. என்னைப் பார்த்து மிகவும் பெருமையோடு சிரித்துக் கொண்டிருந்தார். அதற்கு முன்னதாகவோ பின்னதாகவோ நிச்சயமாக அவரிடம் இருந்து அப்படியொரு பார்வை கிடைக்கவில்லை. நான் விளையாட்டாக வெளியிட்ட புத்தகம் அது. அதற்கு மற்றவர்கள் பாராட்டும்போது பலமுறை சந்தோஷப்பட்டுள்ளேன். ஆனால், நான் பெருமையாக உணர்ந்த தருணம் அது மட்டுமே.
ஒரு வேளை இந்தப் பதிவை தாத்தா படிக்க நேர்ந்திருந்தால் தனக்குத் தானே சிரித்துக் கொண்டிருப்பார்!
எனக்கும் தாத்தாவிற்குமான உறவை நான் விவரிக்க முயல்கையில் எனக்கு ஆரண்ய காண்டம் படத்தில் வரும் ஒரு டயலாக்கின் மறு ஆக்கம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
"உனக்கு உங்க தாத்தா னா ரொம்ப புடிக்குமா?"
"அப்படி இல்ல. ஆனாலும், அவர் எங்க தாத்தா!"
0 comments:
Post a Comment