ஒரு ஆன்மாவின் சாதிச் சான்றிதழ்

, , 4 comments


தம்பி , என்ன ஆளுங்க நீங்க ?"

எட்டு திக்கும் எதிர்ப்படும் வழக்கமான கேள்வி தான் இது. ஆனால், கேட்பவர்கள் அனைவரும் என்னை விட வயதில் பெரியவர்களாதலால் பொது நாகரிகம் கருதி அவர்களை அசிங்கமாக பேச முடியாத கையறு நிலையில் இக்கட்டுரை எழுதும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். 'எல்லாரும் கேக்கற சாதாரண கேள்வி தானே, இதுல பதில் சொல்றதுக்கு என்ன பிரச்சன ?' என்று என்னை வினவ அனைவருக்கும் அனுமதி உண்டு. 'உன் பேர் என்ன ?' என்ற கேள்வியைப் போல் 'நீ எந்த ஜாதி ?'  என்கிற கேள்வியும் சாதாரணமாகி போனதென்னவோ உண்மை தான். ஆனால், என் பேரை நான் சொல்லும்போது என்னை மதிப்பீடு செய்ய எவரும் இலர். 'லோகேஸ் னு பேர் வெச்சவன் எல்லாம் இப்டி தான் இருப்பான்' என்று நான் எவர் கூறவும் கேட்டதில்லை. இதே நிலை ஜாதி பற்றிய கேள்விக்கு உண்டா எனில், கண்டிப்பாக இல்லை.

நான் எந்த ஜாதிப் பெயரை கூறி இருந்தாலும், 'நா பாத்தப்பவே நெனச்சேன் நீ இந்த ஆளா தான் இருப்பேன் ' என்று தன் தீர்க்கத்தரிசனத்தை தம்பட்டம் அடித்துக் கொள்வது தான் பலரின் வாடிக்கை. இதையும் தாண்டி நான் இக்கேள்விக்கு பதில் கூற தயக்கம் காட்ட காரணம்,  என் பதிலுக்கு பிறகு அவர்கள் என்னிடத்தில் காட்டும் போக்கில் ஏற்படும் மாற்றம் தான். உதாரணமாக அவர்களின் கேள்விக்கு நான் ஒரு ஜாதியை பதிலாக கூறுகிறேன் எனில், அவர்களுடைய மன ஓட்டம் பலவாறாக பின்னிப் பிணைய வாய்ப்புகள் உள்ளன.

'இவன் நம்மள விட கீழ் ஜாதியா இருக்கானே, இவன நம்ம வீட்டுக்குள்ள விடலாமா ? இவன் பழக்கத்த எப்டி அளவோட நிறுத்திக்கறது ?'

'இவன் நம்மள விட மேல் ஜாதியா இருக்கானே, நம்ம ஜாதி தெரிஞ்சா நம்ம கூட எல்லாம் பழகுவானா? நம்ம வீட்டுக்கெல்லாம் வருவானா ?'

'அட நம்ம ஜாதிப் பையன். மத்தவங்கள விட இவன் நமக்கு நல்லா செட் ஆவான் '

இவற்றில் எது அவர்களது சிந்தனையாக இருந்தாலும் எனக்கு சங்கடம் தான். 'இவ்ளோ பேசறியே அவங்க என்ன நெனச்சா உனக்கு என்ன ? நீ பாட்டுக்கு உன் வேலைய பாத்துட்டு போக வேண்டியது தானே ' என்று நீங்கள் என்னை கூறலாம். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் நடந்து கொள்ளும் விதம், என்னுடைய செயல்பாடுகளை வைத்து என்னை ஒருவர் மதிப்பீடு செய்கிறார் என்றால் அதை ஒருவாறு ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் மற்றவரை மதிப்பீடு செய்து வாழ்வது தானே மனிதனின் மரபு. அதைக் குற்றம் சொல்ல ஆரம்பித்தால், வாழ்வதே குற்றம் தான் என்று சொல்லி முடிக்க வேண்டும். அதனால் அதை விடுத்து மதிப்பீடு செய்ய வேறேதும் கிடைக்காமல் ஜாதியை வைத்து செய்பவர்களை மட்டும் குற்றம் சொல்வோம்.

ஏதோ ஒரு நாள் , ஏதோ ஒரு காரணத்திற்காக , என் பரம்பரையில் எவரோ ஒருவர், அவருக்குத் தோன்றியதால் பின்பற்றிய ஜாதி, இன்று 'இவன் இப்படித்தான் ' என்று என்னைப் பற்றி தீர்மானிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இந்த ஜாதிகள் எப்படி தோன்றியிருக்கும் என நான் பல முறை சிந்தித்தது உண்டு. தொழிலை வைத்து ஜாதிகள் உருவானதாக ஒரு கருத்து இருக்கிறது. அப்படி பார்க்கையில், எதை வைத்து இது மேல் தட்டு தொழில், இது கீழ் தட்டு தொழில் என்பதை தீர்மானித்தார்கள். வாழ்வியல்  சமநிலை என்பது எல்லா தொழிலும் தடையின்றி நடக்கும் போது தானே இருக்கும்.  ஒருவன் அவர்கள் பரம்பரையாய் செய்யும் தொழிலை விடுத்து, இன்னொரு தொழிலை செய்ய முற்பட்டால் ஜாதி மாறியதாக கருதப்படுவானா?  அல்லது ஒருவன் அவன் உண்ணும் உணவை உழவு செய்வது தொடங்கி, அவன் கழிவை அவனே சுத்தம் செய்து கொள்வது வரை அனைத்தையும் அவனே செய்தால் தான் ஜாதிப் பிரிவினை தீர்வு பெறுமா ?

சரி, கொள்கைகளை வைத்து ஜாதிகள் வந்திருக்குமோ என்று கூட யோசித்துப் பார்த்தேன். அசைவம் உண்ணக்கூடாது, குளிக்காமல் வீட்டிற்குள் செல்லக்கூடாது இது போன்ற கட்டுப்பாடுகள் மட்டுமே இந்த கொள்கைகளை வேறுபடுத்தி காண்பிக்கின்றன. இவர்களுக்கு பின்னால் வரும் தலைமுறை நாகரிக வளர்ச்சியில் இதை பின்பற்றாமல் போனால் வேற்று ஜாதி என்று ஒதுக்கி வைக்கப்படுவார்களா ? அல்லது இதெல்லாம் செய்கிறேன் என சத்தியம் செய்து ஒருவன் பின்பற்ற ஆரம்பித்தால் அவன் அந்த குறிப்பிட்ட ஜாதியில் புதுவரவாக கருதப்படுவானா?

கடைசியாக வழிபடும் கடவுள்களை வைத்து ஜாதிகள் பிரிக்கப்பட்டிருக்குமோ என்று கூட எண்ணினேன். ஆனால், 'அவனை கும்பிடுபவன் வீட்டில் சாப்பிடாதே ','அவளை கும்பிடுபவனுக்கு உன் மகளை திருமணம் செய்து வைக்காதே ' என்று எந்த கடவுளும் சொன்னதாக எனக்கு தெரியவில்லை. அப்படி சொல்லியிருந்தால் அது கடவுளே இல்லை என்பது வேறு விஷயம். அதை விடுத்து பகுத்தறிவு கொண்டு திரியும் மனித கடவுள்களை கும்பிடலாமே ?

இப்படி எந்த காரணமும் சமாதானப்படுத்தாத நிலையில், ஜாதி நம் வாழ்வில் எல்லா இடங்களிலும் ஊடுருவி இருப்பது வேதனையான விஷயம் தான்.  இதை நான் உணர்ந்த தருணம், 'சாதிகள் இல்லையடி பாப்பா ' என்று சொல்லிக்கொடுத்த வாத்தியாரே 'நேத்தே உன்ன சாதிச் சான்றிதழ் கொண்டு வர சொன்னேன்ல, இன்னைக்கும் கொண்டு வராம வந்துருக்க. வெளிய நின்னே க்ளாஸ் அட்டென்ட் பண்ணு ' என்று சொன்ன போது தான்.

சில காலங்களுக்கு முன்னால் வேண்டுமானால் தன் ஜாதி மட்டுமின்றி, உற்றார், உறவினர், பெண் எடுத்தோர், பெண் கொடுத்தோர்  ஆகியோரது குலம் , கோத்திரம் முதலியனவற்றை அனைவருக்கும் கூறிக் கொள்வதில் பெருமை இருந்திருக்கலாம். அதை இச்சந்ததியினருக்கும் புகுத்த முற்படாதீர்கள், அது வேறு விதமான அசம்பாவிதங்களை தொடங்கி வைக்க வாய்ப்பிருக்கிறது. 'நீ லவ் பண்ணுனாலும் நம்ம ஜாதிக்காரங்களா பாத்து லவ் பண்ணு ' என சில பெற்றோர் அவர்களுடைய மகன்/மகள் களுக்கு அறிவுரை கூற கேட்டிருக்கிறேன். ஏற்கனவே காதல்களுக்காக பல கொலைகளையும், தற்கொலைகளையும் பார்த்த இச்சமூகம், 'நான் ஏன் இந்த ஜாதில பொறக்கல '  என்ற தற்கொலைகளையும், 'நீ ஏன் இந்த ஜாதில பொறக்கல'  என்ற கொலைகளையும் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

பிற்காலத்தில் ஜாதிகளே இல்லாமல் போகலாம், பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுவரை 'நீ என்ன ஜாதி ?' என்று கேட்பவர்களுக்கு பதில் ....

ஜாதி வெறியர்களுக்கு நான் கீழ் ஜாதி,
'ஜாதில இவ்ளோ விஷயம் இருக்கா' என்பவர்களுக்கு நான் மேல் ஜாதி,
ஜாதி எதற்கு என்பவர்களுக்கு ஒரே ஜாதி.

4 comments: