தேவதைகள்

, , No Comments

 எங்கள் வீட்டில் எனக்கு அடிக்கடி சொல்லப்படும் கதைகளில் இதுவும் ஒன்று. நான் பிறந்த போது மருத்துவமனையில் இருந்த அனைத்து நர்ஸ்களும் என்னை பாசமாக கொஞ்சியதாகவும், அதன் பிறகு எங்கள் வீட்டில் இருந்து ஒவ்வொரு முறையும் அங்கு சென்ற போது அவர்கள் என்னைப் பற்றி விசாரித்ததாகவும் சொல்வார்கள். இதை முதன்முறையாக நான் கேட்ட போது இதில் இருந்த கற்பனைத் தன்மையை ஆராய என் மனம் முன்வரவில்லை. அன்றிலிருந்தே முகம் தெரியாத அவர்களின் அன்பை எண்ணி எனக்கு நானே சிலிர்த்துக் கொள்வேன். எனக்கு நர்ஸ் என்றாலே ஒரு விவரிக்க முடியாத அன்பு உண்டாக அது ஒரு முக்கிய காரணம்.

சிலர் இப்படிக் கூறி கேள்விப்பட்டதுண்டு. "நான் மாத்திரை எவ்வளவு வேணும்னாலும் எடுத்துப்பேன். ஆனா, ஊசி மட்டும் போட்டுக்க மாட்டேன் ". நான் அப்படியே நேரெதிர். அதற்கு காரணம் கூட எனக்கு நர்ஸ்கள் மீதான அன்பு தான் என நினைக்கிறேன். அவர்கள் முகத்தில் இருக்கும் கனிவு ஊசிகளின் வலிகளை பொருட்படுத்த விடுவதில்லை.
அப்பாவுக்கு உடல் நலமில்லாத ஒரு தருணத்தில் அவருடன் நான் மருத்துவமனையில் தங்கியிருக்க நேர்ந்தது. அப்பொழுது தனி அறைக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டில் இன்னொரு இளம்வயது பையனுடன் அறையை பகிர்ந்து கொண்டிருந்தோம். அவர் காலேஜ் முதல் வருடம் சேர போகும் மாணவன் என்று சில உரையாடல்களின் வாயிலாய் அறிந்திருந்தேன். அவர் காஸ்மெட்டிக் சர்ஜரி எனப்படும் ஒரு வித அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் காதுமடல் சற்று மடங்கியிருந்த காரணத்தினால் அதை சரி செய்வதற்காக அந்த அறுவை சிகிச்சை. அடுத்த நாள் அறுவை சிகிச்சை என்கிற நிலைமையில் அந்த அறைக்கு அவ்வப்போது வரும் ஒரு ட்யூட்டி நர்ஸ் அவருடன் பேசிக் கொண்டதைக் கேட்க நேர்ந்தது.
"டேய், உன் காது இப்டியிருக்குனு சர்ஜரி பண்ணனுமா? இது கடவுள் குடுத்த வரம் டா. இது வேண்டாம்னு உங்க அப்பா கிட்ட சொல்லு டா. ப்ளீஸ் டா..! " என்றார் இனிமையுடன் கலந்த உரிமையோடு.
"அப்பா கேப்பாரானு தெரியல கா.."
"இதெல்லாம் ஒவ்வொருத்தரோட இஷ்டம் நான் சொல்லவே கூடாது.. இருந்தாலும் ரொம்ப வலிக்கும் டா... உன்ன பாத்துக்க தான் நாங்க இங்க இருக்கோம் இருந்தாலும் உங்க அப்பா கிட்ட சொல்லிப் பாரு செரியா ?"
அந்த இரண்டு நிமிட உரையாடலில் அத்தனை கரிசனம். அவர் சொன்னது போன்றே அறுவை சிகிச்சை முடிந்து வலியால் துடித்த அந்த பையனை அவ்வளவு சிரத்தையாக கவனித்துக் கொண்டார் அந்த நர்ஸ். அங்கிருந்த அனைவரிடமும் அதே கனிவு. எனக்கே அறியாமல் அவர்களுக்கு என்னைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டாகி விட்டது.
"ட்ரிப்ஸ் முடியற மாறி இருந்த என்ன வந்து விளிக்கணும் கேட்டில்லோ?" என்று அவர் மலையாள தமிழில் பேசியபோது எனக்குள் அப்படியொரு பூரிப்பு.
"நான் விளிக்கும் சிஸ்டரே, நீ போய்க்கோ!" என்று மலையாளத்தில் பேசி என் அன்பை காட்டிவிட எனக்கும் ஆசை தான். ஆனால், இந்த மாதிரி எதிர்பாராத உரையாடல்களில் வார்த்தைகள் அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை. நான் "ம்ம்ம்.." என்று தலையாட்டிவிட்டதில் இன்னுமே என் மீது எனக்கே கோபம். நர்ஸ்கள் மீதான என் அன்பை எப்போதும் வெளிப்படுத்த முடிவதில்லை என்கிற அங்கலாய்ப்பு. அதன் உச்சமே இந்த பதிவு.
நேற்று கூட நான் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்றிருந்த போது "அவ்வளவா வலிக்காது செரியா, டக்குனு முடிஞ்சுரும்.." என்றது எப்போதுமே நான் கண்ட கனிவான நர்ஸ் முகம். அப்போது எனக்கு தோன்றிய சிந்தனை இது. நாம் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும்பட்சத்தில் நமக்கு நெருக்கமானவர்களிடம் கூட வெறுப்பைக் காட்டி விடுவோம் வேலைப்பளுவைக் காரணம் கூறி. ஆனால், இவர்களால் மட்டும் எப்படி கனிவுடன் கூடிய சேவையைக் கொடுக்க முடிகிறது. நான் காணாத எத்தனையோ செவிலியர்கள் உலகின் பல மூலைகளில் இதை வாழ்நாள் முழுதும் செய்து வருகின்றனர். அதுவும் இப்படியொரு பெருந்தொற்று காலத்தில் அவர்களின் பங்களிப்பை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.
நான் அடிக்கடி இப்படி நினைத்ததுண்டு, 'செவிலியர்கள் தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்' என்று. அந்தக் கருத்தை நானே மறுக்க விழைகிறேன். அவர்கள் தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களல்ல, அவர்கள் தான் தேவதைகள்.

0 comments:

Post a Comment