அன்புள்ள பேனாவிற்கு ,

உன்னிடம் கொடுக்க நினைப்பது ஓர் நன்றி , கேட்க நினைப்பது ஓர் மன்னிப்பு.

"நன்றி மறப்பது நன்றன்று " என்று என் நாவில் உதிப்பதற்கு முன், என் கண்ணில் உதிக்க வைத்ததையே காரணமாகக் கொண்டு இந்த நன்றி.  என்னை நான் வெளிக்கொணர உன்னை பயன்படுத்திக் கொண்ட  என் சுயநலத்திற்கு துணை போன உனக்கு இந்நன்றி. எண்ணங்கள் யாவும் ஆழம் நிறைந்த ஓர் பாதை . அதில் என் நாவையும் மீறி தொலை தூரம் பயணம் செய்ததற்கு  இந்நன்றி.

என் உள்ளம் கேட்ட அனைத்தையும் கொடுத்த நீ , நான் கேட்கும் மன்னிப்பை கொடுக்கமாட்டாயா ? உன்னைப் பற்றி நீயே தம்பட்டம் அடித்துக் கொள்ளப் போகும் அவல நிலையை உண்டாக்கும் இப்பாவி கேட்கும் மன்னிப்பு ஓர் முன் ஜாமீன்.  வாய்தா வைக்காமல் விடுவிப்பதில் நீ குமாரசாமியின் குடும்பம் என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்த உண்மை.

நான் உன்னை முதன்முதலில் தழுவிய அந்த கணம், இந்நேரம் இந்நாள் என்று எனக்கு துல்லியமாய் தெரியவில்லை. அதையெல்லாம் பொருட்படுத்த நீ என் முன்னாள் காதலி அல்ல, எந்நாளும் காதலி !

உன்னை தழுவ நான் உன் பாட்டனான பென்சில் குச்சியிடமும், உன் அப்பனான பென்சிலிடமும் செய்த யுத்தம் உலகப் போரைப் போல் வெகு நாட்கள் நீடித்தது. இதெல்லாம் விட இந்த சமூகமும் ஐந்து வயது சிறுவனுக்கு ஏன் இந்த அபத்தமான ஆசை என்று வினவியது தான் காலத்தின் கொடுமை.

உன் பாட்டனுடன் நான் செய்த சண்டையில் மறக்க முடியாத நிகழ்வு ஒன்று உண்டு . "இ " என்ற எழுத்தினால் உன் பாட்டன் கொடுத்த இம்சை அது. அதில் அவன் அடிக்கடி செய்த பிழையில், கொட்டு வாங்கியது என் தலை. அதுவும் தமிழாசிரியை என்னும் மாறுவேடத்தில் இருந்த என் வகுப்புப் பெண்ணின் தாயிடம். உன் பாட்டனுக்கு அறிவே இல்லையா ? ஒரு சிறுவனிடம் இப்படியா நடந்து கொள்வது ? அதற்கு பிரதிபலனாக தான் இரண்டே வருடத்தில் செத்தொழிந்தான்.

உன் அப்பன் மட்டும் என்ன ஒழுக்கமா?  'ஏன் அவருக்கு என்ன குறைச்சல்' என்று கேட்கிறாயா கண்ணம்மா ? கூர்மையாவதற்காக குறைவது தான் அவன் குறைச்சல். மை உண்டு என்னுள் மையம் கொண்ட  உனக்கு நிஜமாகவே அவன் தான் அப்பனா என்பது என் நீண்ட நாள் சந்தேகம். இருந்தாலும் அவன் உன் மேல் கொண்ட அன்பை பாராட்டியே  ஆக வேண்டும். என் படிப்பு முடியும் வரை உன்னுடனே இருந்து நமக்கு கட்டம் கட்டி கொடுத்து காத்த பாசக்காரன். மாப்பிள்ளை வீட்டில் மகளுக்காக வாழ்ந்த மாமனாராக இருந்தாலும் தனி மரியாதை. இனி அவன் தொல்லையும் இல்லை.

என்னுள் நீ வந்த பிறகு , எனக்குள் நடந்த மாற்றங்களைக் கண்டு நானே வியக்கிறேன்.

"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ,
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் "

என்பதற்கேற்ப வாழ்ந்து வருகிறோம் . அதற்கு காதல் மட்டும் காரணமல்ல, காலம் கடந்த சமூகத்தின் சாடலும். நான் பேச நினைப்பதை அப்படியே பேசினால்,  குற்றம் சொல்ல ஆயிரம் குரல்கள் குமுறிக்கொண்டு வரும். நீ பேசினால் அதே குரல்கள் குசலம் விசாரிக்கும். எழுத்து சுதந்திரம் என்றொரு பட்டபிஷேகமும் நடக்கும். என்னை பொறுத்தமட்டில் எழுத்து என்பதே சுதந்திரம் தானே. ஒவ்வொன்றும் இன்னொன்றை தொந்தரவு செய்யாமல், தனித்து நின்று அர்த்தம் கொடுப்பதில் தனக்கான வேலையை செவ்வனே செய்கிறது. அது இன்னொரு சகாவிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியதில்லை, அவன் என்ன சொல்வானோ என்ற பயம் இல்லை , அவன் என்ன இப்படியெல்லாம் செய்கிறான் என்ற பொறாமை இல்லை, அவன் கண்டு கொள்ளவில்லையே என்ற தவிப்பு இல்லை. சார்புத்தன்மை என்று பார்த்தால் உயிரும் மெய்யும் கூடி உயிர்மெய் தந்த காதல் மட்டுமே மிஞ்சுகிறது.
இப்படியொரு வாழ்வை கனவிலும் வாழ முடியுமா ? அதனால் தான் காகிதத்தில் வாழ்கிறேன் உன்னுடன்..!

கண்மணியே! இதுவரை காகிதத்தின் மேல் நாம் செய்த காதலில் பிறந்த கட்டுரைக் குழந்தைகள் யாவும் என் அறிவை உயர்த்துவதற்காக வாழ்வதாக எண்ணி, காரியவாதியான மதிப்பெண்களுக்காக வாழ்ந்து அற்ப ஆயுளில் மடிந்தும் போயின. அவர்களின் கதியை விதியென்று நினைத்து விலகுவோம். இனி நாம் செய்யப்போகும் காதலில் பிறக்கப் போகும் கட்டுரைக் குழந்தைகளும் , கவிதைக் குழந்தைகளும் பிரதிபலிக்கப் போவது நம்மைக் கொண்ட காதலையும் இவ்வாழ்வின் மேல் நாம் கொண்ட காதலையும் தான். அதன் ஆயுள் குறைவாய் இருப்பினும், அர்த்தம் நிறைவாய் இருக்கும்.

அறிவை நீட்டி அன்பைக் கூட்டி  என்னை வாழ வைக்கும் தேவதையே ! உனக்கு என்னுடைய கோடி முத்தங்கள்...

என்றும் புன்னகையுடன்,
உன் ஆசை காதலன்.