இரவு 7 :30 மணி  - பொள்ளாச்சி பேருந்து நிலையம்

பொதுவாகவே பயணம் செய்வதென்றால் துள்ளிக்குதிக்கும்  சத்யா , அன்று கனத்த இதயத்துடன் பிடிக்காத பயணத்திற்கு  அளவான மேக்கப்பில் பிரயத்தனமாகி டவுன் பஸ்ஸில் வந்திறங்கினாள்.  அவள் பெங்களுரு கிளம்ப வேண்டிய நேரம் அது , பி.டி. பீரியட் முடிந்து வகுப்பிற்குள் செல்லும் மனநிலையில் அவள். காரணம், அவள் அம்மா அப்பாவுடன் கழித்த அந்த இரண்டு நாட்கள். எந்நேரமும் பேசிக் கொல்லும் அவளை பிரிவதில் அவள் அம்மாவிற்கும் வருத்தம் தான்.  ஆனாலும், வொர்க் பிரம் ஹோம் தர மறுத்த அவள் ஆபீஸின் அழைப்பை அவளால் மறுக்க முடியவில்லை.

அவளை ஏற்றிச் செல்ல தயாராக இருந்த அந்த பேருந்தை பார்த்தாள் , ஆடி அசைந்து செல்வதில் அவளையே மிஞ்சிடும் கண்டிஷனில் இருந்தது. இருந்தும் அவள் தேடி பிடித்து பதிவு செய்த சீட் ஒரு ஜன்னலோர சீட் என்பது ஞாபகத்திற்கு வந்த போது லேசான மன நிம்மதி பிறந்தது. இளையராஜாவும் ஜன்னலோர காற்றும் செய்யும் காதலில் தன் கவலைகளை மறக்கலாம் என்ற ஆசையும் ஓர் காரணம். போய் உட்கார்ந்த உடனே காதுகளை ஹெட்செட்டில் கொடுத்து விட வேண்டுமென உறுதியுடன் பேருந்தினுள் ஏறினாள்.

தன் சீட்டிற்கு பக்கத்துக்கு சீட்டை ஏற்கனவே ஆக்கிரமித்திருந்த சக பயணியை பார்த்தாள்.

'என்ன குமுதா சிட்டிங் எல்லாம் ஸ்டைலா இருக்கு ?' என்று விஜய் சேதுபதி வாய்சில் பார்த்த உடனே கலாய்த்து விட வேண்டுமென்று தோன்றியது அவளுக்கு. அந்த கும்மிருட்டிலும் கண்ணை பறிக்கும் அளவிற்கு மேக்கப்புடன் அமர்ந்திருந்தால் அந்த பெண். 'சரி, அவ எப்டி இருந்தா நமக்கு என்ன ?' என்று நினைத்துக் கொண்டு தன் சீட்டை ஆக்கிரமிக்க நெருங்கினாள் சத்யா.

குபீரென்று ஒரு வாடை அவளை தூக்கி வாரி போட்டது, ஸ்டைலான அந்த சக பயணியிடம் இருந்து தான் அந்த வாடை வந்தது. அரசின் மானிய விலை சேவையை பயன்படுத்தியதால் வரும் வாடையோ என்ற ஐயம் ஒரு நிமிடம் சத்யாவிற்கு உதித்தது. பிறகு அதை விட மோசமான ஒரு பெர்ப்யூமின் வாடை என்பதை உணர்ந்தாள்.

'சரி, உக்காந்து ஜன்னல தொறந்து விட்டா சரியாப் போகும் ' என்ற தைரியத்தில் சீட்டில் தன்னை அமர்த்திக் கொண்டாள்.  வாடையின் வலு சற்று கூடியது. இருந்தும் பொறுத்துக் கொண்டு, காதுகளை இளையராஜாவிடம் ஒப்படைத்தாள். பேருந்து கிளம்பியது.

ஒரு 10 கிமீ  கூட சென்றிருக்காது, சத்யாவின் தோள்பட்டையை அந்த சகபயணியின் கை சொறிந்தது. "எக்ஸ்க்யூஸ்  மீ , கொஞ்சம் குளிரா இருக்கு அந்த விண்டோவ க்ளோஸ் பண்றிங்களா ?"

'என்ன டா இது சத்யாவுக்கு வந்த சத்திய சோதனை, இத நம்பி தானே இவ பக்கத்துலயே உக்காந்தோம் ' என்று தனக்குள்ளே தலையில் அடித்துக் கொண்டாள்.  முடியாது என்று முரட்டுத்தனமாக சொல்லி விடலாமா என்று தோன்றிய யோசனையை உடனே உதறினாள். ஏனெனில், இன்னும் சிறிது நேரத்தில் அவளுக்கும் குளிர ஆரம்பித்து விடும். அதன் பிறகு மூடினால் அது அவமானம் தான். அப்படி ஒரு தோல்வியை அவள் மனம் ஏற்றுக்கொள்ள தயாராய் இல்லை. பெரிய மனது பண்ணி ஜன்னலை மூடுவது போல் "ஸ்யூர் " என்று கெத்தாக சொல்லி ஜன்னலை இறக்கி விட்டாள்.

அது எவ்வளவு பெரிய தவறு என்று அவளுக்கு சிறிது நேரத்திலேயே புரிந்துவிட்டது. அந்த வாடை மீண்டும் அவளை தாக்க ஆரம்பித்தது. மூச்சடைத்தது. சட்டென தன்னை ஒரு ஆஸ்துமா நோயாளியாக உணர்ந்தாள். 'அப்பால போ சாத்தானே' என்று அந்த வாடையை துரத்த எண்ணினாள். ஆனால், அது போவதற்கு தான் வழி இல்லையே.

'சரி நாம போவோம் ' என்று எண்ணியவாறு  "எக்ஸ்க்யூஸ்  மீ,  உங்களுக்கு பிராப்ளம் இல்லேன்னா விண்டோ சீட் எடுத்துக்கரிங்களா ?" என்றாள் தன் சக பயணியிடம். இதற்கு முன் சத்யா செய்த உதவியை நினைவு கூர்ந்தாளோ என்னவோ உடனே சரி என்றாள். சீட்டுகள் மாற்றி ஆக்கிரமிக்கப்பட்டன.

இந்த சீட்டில் அமர்ந்தவுடன் அவள் இடப்புறம் இருந்த சீட்டை நோக்கியவாறு சாய்ந்து கொண்டாள் சத்யா. ஏதேதோ எண்ணங்கள் அவளை ஆட்கொண்டன, அதற்குமேல் இவளை சித்திரவதை செய்த இந்த வாடையும் சேர்ந்து அவள் கண்களில் நீரை வார்த்தன.  எதற்காக அழுதோம், எவ்வளவு நேரம் அழுதோம் என்று அறியாமல் தூங்கிப் போனாள் அவள்.

முழிப்பு வந்த போது அவளை 'பூவே செம்பூவே ' பாடல் அவளை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது. லேசாக கண்களை திறந்தாள். அவள் தூங்கும் முன் வெறிச்சோடி இருந்த இடப்பக்கம் இருந்த சீட்டில்  இளைஞன் ஒருவன் உறங்கிக் கொண்டிருந்தான். மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த பேருந்தின் மெலிதான லைட் வெளிச்சத்தில் அந்த இளைஞனை பார்த்தாள்.

அவளுக்கு மிகவும் பிடித்த வெள்ளை சட்டை அணிந்திருந்தான். அந்த இளைஞன் மாநிறம் தான் எனினும் வெள்ளை சட்டையும், மெல்லிய லைட் வெளிச்சமும் அவனை அழகிய தமிழ்மகன் பட்டத்திற்கு போட்டி போட வைத்துக் கொண்டிருந்தது சத்யாவின் மனது. தூங்கும் முன் அவளுக்கு இருந்த யோசனைகள் குடிபெயர்ந்து, வெள்ளை சட்டை அவளை ஆட்கொள்ள ஆரம்பித்திருந்தது. 'எனக்கு ஏன் வெள்ளை சட்டை னா இவ்ளோ புடிக்குது ? ஏன்னா என்னோட மனசும் வெள்ளை ஆச்சே ' என்று தனக்கு தானே மொக்கையைப் போட்டுக்கொண்டு, அதற்கு வெட்கமும் பட்டுக்கொண்டு அவனைப் பார்த்தவாறே சாய்ந்திருந்தாள்.

திடீரென்று பேருந்து ஒரு டோல்கேட்டில் நின்றது. சிலர் விழிக்க ஆரம்பித்ததில் சலசலப்பு ஏற்பட்டது. அதை கவனித்துவிட்டு  திரும்பிய சத்யாவிற்கு ஒரு அதிர்ச்சி. அந்த இளைஞன் அவளை பார்த்துக்கொண்டிருந்தான். அவளுக்கு கிடுகிடுக்க ஆரம்பித்தது . டக்கென்று கண்களை மூடிக்கொண்டாள்.

வெட்கம் அவள் கன்னங்களை சிவக்கச் செய்தது, இதழ்களை புன்முறுவல் பூக்க செய்தது. கண்களை திறந்தும் திறக்காமல் அவன் பார்க்கிறானா என்று பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் சற்றே கண்ணசந்தவுடன் கண்களை திறந்து பார்க்க ஆரம்பித்தாள். திடீரென்று அவன் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான். மீண்டும் அவள் கண்களை மூடிக்கொண்டாள். இதே போன்று மூன்று முறை நிகழ்ந்தது.

'அடியே சத்யா உனக்கு என்ன ஆச்சு? அவனுக்கு தான் நீ பாக்கறது தெரிஞ்சுருச்சே.. இன்னும் ஏன் பாத்துட்டு இருக்க..! வெக்கமா இல்ல ?' என்று அவளையே திட்டிக் கொண்டாள் சத்யா . 'அதனால என்ன எனக்கு புடிச்சுருக்கு நா பாக்கறேன்' என்று அந்த இளைஞன் மீது கொண்ட ஈர்ப்பினால் அவளே சமாளித்துக் கொண்டாள்.

'அவன் பேர் என்னவா இருக்கும் ? சக்தி, கௌதம், கார்த்தி , சிவா இந்த பேர்ல எதாவது ஒன்னா தான் இருக்கும் . ஏன்னா இதெல்லாம் தானே எனக்கு புடிச்ச பேரு ' என்று தனக்கு தானே அசடும் வழிந்து கொண்டாள் சத்யா.

அதே சமயம் அந்த இளைஞனின் மனம் வேறொரு உலகில் பறந்து கொண்டிருந்தது. எதார்த்தமாக அவன் கண் திறந்த போது மங்கலான வெளிச்சத்தில் அவன் பார்த்தது ஒரு  பெண்.  தூக்கத்திலும் ஒரு ஏக்கமான முகத்துடன் ஒரு குழந்தையைப் போல் உறங்கிக் கொண்டிருந்தவளை அவனுக்கு உடனே பிடித்து விட்டது. பெண்களைப் பிடித்தாலும் அதை சொல்வதற்கோ, வெளிபடுத்துவதற்கோ எந்த ஒரு ஆண்மகனுக்கும் வரும் தயக்கம் அவனுக்கும் வந்தது. அதற்கு காரணம், பலரால் பெண்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பின்மை தான். அவன் அவளைப் பார்த்து சிரிக்க முயன்றால் கூட அது அவனுக்கு சூனியமாகி விட வாய்ப்புண்டு.

பேருந்து ஒரு டோல்கேட்டில் நின்ற போது, அவளும் அவனைப் பார்ப்பதை உணர்ந்து அவன் உள்ளம் பூரித்தது. மனதிற்குள் பல ஆயிரம் முறை சிரித்துக் கொண்டான். ஆண்களின் நாணம் பற்றி கதைகளில் மட்டுமே பார்த்தவனுக்கு, அவனுள் பார்ப்பது ஒரு புது வித அனுபவத்தை தந்தது. 'நம்மளையும் ஒரு பொண்ணு பாக்கறா, இத நாளைக்கு போய் பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி கெத்து போடணும்' என்று தனக்குள் எண்ணிக் கொண்டான். ஆனாலும் அவள் மீது ஏனோ ஒரு மரியாதை அவனுக்கு உதயமாகியிருந்தது.  எண்ணங்களை அவ்வளவு எளிதில் வெளிக்காட்டிவிடாத பெண்களினூடே இவள் கண்டிப்பாய் ஒரு வித்தியாசமான பெண்ணாய் தான் இருக்க வேண்டும்.  தூக்கத்தால் சோர்ந்து போயிருந்த  கோழி முட்டைப் போன்ற அவள் கண்கள் அவனை ஏதோ செய்தது.

அதன் பிறகு இருவரையும் தூக்கம் தூக்கிச் செல்ல மறுத்தது. விடியும் வரை முடியாப் பயணமாய் அவர்கள் பார்வை பார்ப்பதும், நிற்பதுமாய் பயணித்துக் கொண்டிருந்தன. ஒரு முடிவில்லா பயணத்தை விரும்பி எதிர்பார்த்தவர்களாய் இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

துரதிர்ஷ்டவசமாக சத்யா இறங்கும் இடம் வந்தது. பொள்ளாச்சியில் பேருந்தில் ஏறும்போது இருந்தததை விட மனம் கனத்திருந்தது.  அவன் எங்கே இறங்க போகிறான் என்று தெரியாது, அவளால் மறுபடியும் சந்திக்க முடியுமா என்று தெரியாது , அப்படியே சந்தித்தாலும் அவன் தனக்கு பொருத்தமானவனாய் இருப்பானா என்று தெரியாது. இப்படி பல பதில் தெரியாத கேள்விகளினூடே  அவனை பிரிவது அவளுக்கு சோகத்தை தந்தது.

சோகத்தோடு படிக்கட்டின் அருகில் நின்றுகொண்டு அவனை திரும்பி பார்த்தாள்.  அவனும் எதிர்பார்த்த மாதிரியே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவள் பார்த்த உடன் மெலிதான புன்னகையை தன் இதழில் தவழவிட்டான்.  சத்யாவிற்கு பல்பு எரிய ஆரம்பித்தது. 1000 வாட்ஸ் பவரோடு தன் புன்னகையை படரவிட்டாள்.

"டேய்.. வெள்ள சொக்கா உன்ன எங்க இருந்தாலும் கண்டுபுடிக்கறேன் டா ! உன் பேர் என்னனு எனக்கு தெரிஞ்சே ஆகணும்" என்று சபதமிட்டுக் கொண்டே பேருந்தில் இருந்து இறங்கினாள் சத்யா.

அதே சமயம் பேருந்தினுள் அந்த இளைஞனை கைப்பேசி அழைத்தது. எடுத்துப் பார்த்த போது 'அம்மா' என்று அலறியது அது. ஆன் செய்து காதில் வைத்து "அம்மா" என்றான்.

"டேய் கார்த்தி... ரீச் ஆயிட்டியா ?" என்றது அவன் அம்மாவின் குரல்.

பெசன்ட் நகர் பீச்  - மாலை 6.30  மணி

கடலை விற்பவரும் கடலைப் போடுவதை கடமையாய் கொண்டிருக்க, அதை வெறிக்க பார்த்துக் கொண்டு சில கூட்டம் அங்குமிங்கும் அலைமோதிக் கொண்டிருந்தது. அதில் நாங்களும் ஒன்றாக ஒன்றிப் போயிருந்தோம். சென்னைக்கு எங்களின் முதல் விஜயம் என்பதை எங்கள் முகத்தைப் பார்த்தே கண்டுபிடிக்கும் அளவிற்கு வாயைத் திறந்து சிலாகித்துக் கொண்டிருந்தோம்.

வழக்கமாக சிங்கிள் என சொல்லிக் கொள்ளும் மொட்டை பையன்கள் வாங்கி உண்ணும் அதிகம் செலவாகாத பண்டங்களை வாங்கிக் கொறித்துக் கொண்டே சுற்றி வந்து கொண்டிருந்தோம். பீச் என்றால் கடல் அலை மட்டுமே இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, காதல் அலையை பார்த்தவுடன் சற்று அதிர்ச்சி தான்.

குடைக்குள் மழையைக் கூட பார்த்துவிட்ட எனக்கு, குடைக்குள் குழைந்து கொண்டிருந்த ஒரு ஜோடியை பார்த்தவுடன் பீறிட்டு வந்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள எங்களுள் சென்னைவாசியான அரவிந்தை நோண்டினேன்.

"என்ன மச்சான், மழையும் இல்ல வெயிலும் இல்ல இங்க ஒருத்தன் கொட புடிச்சுட்டு உக்காந்துருக்கான் ?"

"அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில கூட கொட புடிப்பானு கேள்விபட்டதில்ல ? அதான் இங்க புடிச்சுட்டே வாழ்ந்துட்டு இருக்கான்" என்றான் அரவிந்த் தனக்கே உண்டான கவித்துவமான கண்றாவி நகைச்சுவையோடு.

"இருந்தாலும்...." என்று மேலும் ஒரு சந்தேகத்தை கேட்க சென்ற என்னை தடுத்து, "போதும் மச்சான் மூடிட்டு வா!" என்றான் அரவிந்த்.

"அவங்க ஏற்கனவே மூடி தான் வெச்சுருக்காங்க டா" என்றேன் அவனை வம்பிழுக்க.

"அவங்களுத சொல்லல மச்சான், உன்னோடத சொன்னேன் "

"ரைட்டு...!" . இதற்கு மேல் அவனிடம் பேச்சுக் கொடுத்தால் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வேன் என்று விக்டரிடம் சென்றேன்.

"ஆர்த்தி அன்னைக்கு யெல்லோ டிரஸ் ல வந்தா பாரு. பப்பா ! என்ன அழகு டா சாமி !" என்று பிரவீனிடம் விவரித்துக் கொண்டிருந்தான். அவனும் எப்பவும் போல் எதிர்த்து பேசாமல் ஹூம் போட்டுக் கொண்டிருந்தான்.

ஆர்த்தி , எங்கள் வகுப்புப் பெண்ணாய் இருந்தும் அவளிடம் நாங்கள் யாரும் அவ்வளவாக பேசியதில்லை. ஆனால், அவளை தோழியாக்கிக் கொள்ள முந்த போவது யார் என்ற பேச்சுவார்த்தை எங்களுக்குள் அடிக்கடி நடக்கும். அன்று அந்தப் பேச்சுவார்த்தைக்கான பிள்ளையார் சுழியை போட்டிருந்தான் விக்டர்.

"நான் அவகிட்ட போய் நம்பர் வாங்கலாம்னு இருக்கேன் டா " என்றான் விக்டர்.

பதறிப் போன நான் "அதெல்லாம் குடுக்க மாட்டா டா !" என்றேன்.

"ஏன் அப்டி சொல்ற ?"

"அது அப்டி தான்"

"அவ தரலைன்னா பாத்துக்கலாம். முதல்ல கேட்ரனும் ஊருக்கு போன உடனே "

"டேய்.. இதெல்லாம் தப்பு டா. நானும் கேப்பேன்" என்றேன் சிறுபிள்ளைத்தனமாக.

"அதெல்லாம் முடியாது நான் தான் கேப்பேன். யாராவது ஒருத்தர் தான் மச்சான் கேக்கணும். எல்லாரும் கேட்டா தரமாட்டா !" என்றான் வஞ்சிக்க நினைத்த விக்டர்.

"அதனால தான் மச்சான் சொல்றேன். நான் கேக்கறேன்னு "

இப்படியே இருவருக்கும் வாய்வழி யுத்தம் நடந்தது. அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பிரவீன்,"சரி , ஒரு போட்டி வெப்போம். யார் ஜெயிக்கராங்களோ அவங்க போய் பேசலாம். இன்னொருத்தர் ஒதுங்கிடனும் " என்றொரு மகத்துவமான சிந்தனையைக் கூறினான்.

இருவரும் ஆமோதித்த உடன் , "சரி , என்ன போட்டினு நீங்களே சொல்லுங்க ?" என்றான் பஞ்சாயத்துத் தலைவராக மாறிய பிரவீன்.

இருவருமே வாழைப்பழ சோம்பேறிகள் என்பதால் வியர்க்காமல் விளையாடக் கூடிய போட்டியாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தோம். ஒரு வழியாக பட்டாணி வாங்க வைத்திருந்த காசில் பலூன் சுடுவதென்று பஞ்சாயத்தில் முடிவானது.

போட்டியின் விதிமுறைகள் என்னவென்றால் இருவருக்கும் ஒரே ஒரு வாய்ப்பளிக்கப்படும். பிரவீன் கூறுகின்ற அதே பலூனை தான் சுட வேண்டும்.

"சரி, ரெண்டு பேருமே சுட்டுட்டா ?" என்று தன் சந்தேகத்தை எழுப்பினான் விக்டர்.

"சுட்டா பாத்துக்கலாம். நீ முதல்ல சுடு நாயே !" என்று கொந்தளித்தான் பிரவீன்.

"அப்ப ரெண்டு பேருமே சுடலைன்னா ?" என்றேன் என் பங்கிற்கு.

"எவனும் அவகிட்ட பேசக்கூடாது. மூடிட்டு அவனவன் வேலைய பாக்கணும் " என்று இன்னும் உக்கிரமானான் பிரவீன்.

இதற்காகவே மொத்தமே 2,3 பலூன்கள் மட்டுமே உள்ள ஒரு கடையை தேர்ந்தெடுத்தனர்.

விக்டர் என்சிசியில் கற்ற ஷூட்டிங் வித்தையை இறக்கி என்னை தோற்கடிக்க ஆயத்தமானான். முகத்தில் எப்படியும் சுட்டுவிடுவேன் என்ற எகத்தாளம்.

துப்பாக்கி அவனிடம் முதலில் சென்றது, ஒரு ப்ளூ கலர் பலூனை கை நீட்டினான் பிரவீன். சற்றே மேலே இருந்தாலும் விக்டர் உயரமானவனாதலால் எப்படியும் சுட்டு விடுவான் என்று நான் உட்பட அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம்.

அவனும் "இப்ப எப்டி சுடறேன் பாரு " என்று குறி பார்த்து சுட்டான். 'பட்' என்று பலூன் வெடிக்கும் சத்தம் பக்கத்துக்கு கடையிலிருந்து தான் வந்தது. விக்டர் மிஸ் செய்திருந்தான்.

அவனுடைய ஓவர் கான்பிடன்ஸ் அவனை வீழ்த்திவிட்டது. எனக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.

'இனி நான் தோத்தாலும் பரவால டா' என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன். இருந்தாலும் ஜெயித்தால் எப்படி இருக்கும் என்கிற எண்ணம் எனக்கு உற்சாகமளித்தது.

துப்பாக்கியை கையில் வாங்கினேன். பிரவீன் ஒரு வைலெட் கலர் பலூனை கை நீட்டினான். குறி பார்த்தேன். துப்பாக்கி சற்றே ஆடியது.

'கருமம் புடிச்ச கையே கொஞ்ச நேரம் நடுங்கித் தொலையாம இரு..' என்று திட்டினேன். கை கட்டுப்பட்டது.

சரியாக 30 விநாடிகள் அதே பொஸிசனில் நின்று அழுத்தினேன். 'பட்' என்ற சத்தம். இம்முறை நான் சுட்ட பலூனிலிருந்து.

சந்தோஷத்தில் குதித்தேன். "யேய்ய்ய்யய்ய்ய்"

"மச்சி, கண்ணும் என்னுது தான் பொண்ணும் என்னுது தான் " என்று விஜய் ஸ்டைலில் விக்டரிடம் டயலாக் பேசினேன்.

"ஓடிரு டா.. செம கடில இருக்கேன் " என்றான்.

"அட போடா !" என்று அன்று முழுவதும் அவனை வெறுப்பேத்தி மகிழ்ந்தேன்.

ஊருக்கு வந்த பின், அவளிடம் ஏதோ ஒரு தைரியத்தில் போன் நம்பரை வாங்கினேன். எங்களுக்குள் நட்பு மலர்ந்தது.

அவள் எனக்கு வீட்டிலிருந்து தக்காளி தொக்கு கொண்டு வந்து கொடுக்க, நான் அவளுக்கு சாக்லேட் கொடுக்க என்று எங்கள் உறவு மேலும் நெருக்கமானது.

'பழக்க வழக்கம் எல்லாம் தக்காளி தொக்கோடு நிறுத்திக்கணும் ' என்றவாக்கில் ஒரு நாள் "நானும் அந்த சீனியரும் கமிட் ஆயிட்டோம் " என்றாள்.   

அன்று தான் தெரிந்தது நான் சுட்ட பலூன் சீனியர் சுட்ட வடையில் பொசுங்கி விட்டதென்று. இன்றளவிலும் அவள் என் தோழியே . ஆனால், அந்த சம்பவம் என்னை முழுதும் மாற்றி விட்டது . விளைவு, இன்றும் நான் 'அவளும் நானும்'  என்ற பாடலைக் கூட 'நானும் நானும்' என்று தான் பாடிக் கொண்டிருக்கிறேன்.

"கொஞ்சம் உளறல்... கொஞ்சம் சிணுங்கல்.... ரெண்டும் கொடுத்தாய்  நீ.. நீ.. நீ..!"

என்று மாதவன் மீரா ஜாஸ்மினுடன் டிவியில் பாடிக்கொண்டிருக்க, அதன் முன் அமர்ந்து மைன்ட் வாய்சில் தன் காதலி மைதிலியுடன் பாடிக் கொண்டிருந்தான் அருண்.

அருகிலிருந்த மேஜையின் மீது வைத்திருந்த செல்போன் சிணுங்கியது. அச்சிணுங்கலை  தந்தவள் நெஞ்சிற்கு பதிலாக கல்லை வைத்திருக்கும் அருணையே சிணுங்க வைக்கும் மைதிலி தான்.

'இப்ப தான்  அவள  பத்தி நெனச்சுட்ருந்தேன். உடனே அவளே கூப்டுட்டா. எப்பதான் அவள பத்தி நெனைக்காம இருந்துருக்கேன்? ஆஹா! செமயா ஒரு டயலாக் மாட்டிருச்சு. இத வச்சு அவகிட்ட கிளாப்ஸ் வாங்கிட வேண்டியது தான் ' என்று பட்டனைத் தட்டி காதில் வைத்தான். எல்லோரிடமும் உர்ரென்று இருக்கும் அருண் மைதிலியிடம் மட்டும் ஒரு ரெமோவாக மாறி விடுவான்.

"ஹே! அழகி..."

"ஹலோ! என்னடா பண்ணிட்ருக்க? " என்றாள் மைதிலி ஒரு அம்மா மகனிடம் பேசும் தொனியில் தனக்கே உரிய கணீர் குரலில்.

"உன் கூட தான் பேசிட்ருக்கேன் செல்லம்"

"காமெடியாக்கும் ? அப்புறமா சிரிக்கறேன். சரி, நா சொல்றத கேளு "

"நீ சொல்றத தானேடி கேட்டுட்டு இருக்கேன் எப்பவும்"

"உன் மொக்கை எல்லாம் அப்புறமா வெச்சுக்க டா. ஒரு மேட்டர் ஆயிருச்சு!!"

"மேட்டரா ?!? யாருக்குள்ள ?" என்று தன்னுடைய இரட்டை அர்த்த நகைச்சுவை உணர்வை தானே பாரட்டியவனாய் சிரித்தான் அருண்.

கடுப்பான மைதிலி , "இப்டி ஆகவலித்தனமா பேசிட்ருந்தா உனக்கு கல்யாணமே ஆகாது டா! " என்றாள்.

"எனக்கு ஆகலைனா , உனக்கும் தானே ஆகாது"

"அதான் சொல்ல வர்றேன். எங்க கேக்கற நீ? எனக்கு மாப்ள பாக்க ஆரம்பிச்சுட்டாங்க டா "

"அடிப்பாவி ! என்னடி இவ்ளோ அசால்ட்டா சொல்ற "

"எங்க  அம்மா கிட்ட நம்ம லவ் மேட்டர சொல்லிட்டேன். அவங்க உன்ன பாக்கணும்னு சொல்றாங்க "

"ஐயையோ! போட்டு விட்டுட்டியா டி ?"

"பயந்து சாவாத டா. அன்னைக்கு என்னமோ பெரிய பருத்திவீரன் மாதிரி 'என்ன விட்டுட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணுனா கண்டம் துண்டமா வெட்டுவேன் டி' னு  சொன்ன. இப்ப இந்த நடுங்கு நடுங்குற ? என்னைக்கா இருந்தாலும் தெரியப் போறது தானே. அதுவும் இல்லாம எங்க அம்மாவுக்கும் ஒரு டவுட் இருந்துது"

"ரொமாண்டிக் மூட்ல பேசுன டயலாக் எல்லாம் இப்ப கண்டிப்பா சொல்லியே ஆகணுமா? என்ன தான் நடந்துச்சுனு தெளிவா சொல்லேன் டி "

"ம்ம்ம்"

நடந்ததை விவரிக்க ஆரம்பித்தாள் மைதிலி.

சரியாக ஒரு மணி  நேரத்திற்கு முன்பு...

அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த மைதிலிக்கு வாசலிலேயே ஆச்சரியம். நான்கு ஜோடி செருப்புகள் புதிதாக இருந்தன.

'யாரோ சொந்தக்காரங்க வந்துட்டாங்க யா. யாரா இருக்கும்? இவங்க வந்துட்டு வடை, பஜ்ஜி  சாப்டுட்டு அமைதியா போனா கூட பரவால. பொண்ணுக்கு எப்ப கல்யாணம்னு ஆரம்பிச்சு விட்டுட்டு போயிருவாங்க. அத நான் தானே சமாளிக்கணும் ' என்ற உறவினர் மீதான அபிப்ராயம் அவளை உள்ளே போக விடாமல் தடுத்தது.

திரும்பி இரண்டு வீடு தள்ளி இருக்கும் தன் தோழி வீட்டிற்கு சென்று விடலாமா என்று கூட யோசித்தாள். ஆனால், 'ஏன் லேட்டு ?' என்று அப்பா கேட்கும்போது, லாவண்யா வீட்டுக்கு போனேன்னு  சொன்னாலும் வம்பு,  ஆபீஸ்ல வேலை அதிகம்னு சொன்னாலும் வம்பு. அவள் அப்பாவின் பதில் என்னவாக இருக்கும் என்று அவளுக்கு தெரிந்திருந்தது.

முதல் பதிலுக்கு 'லாவண்யாவ அன்னைக்கு ஒரு பையனோட பாத்தேன், அவகூட சேராதனு  ஏற்கனவே சொல்லிருக்கேன்ல ' என்பார்.  இரண்டாவது பதிலுக்கு 'அவ்ளோ கஷ்டப்பட்டு அந்த வேலைக்கு போகணுமாக்கும். வேலைய விட்டுட்டு, கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கலாம்ல ' என்பார்.

'அதுக்கு உள்ளயே போயிரலாம். உடம்பு சரியில்லனு சொல்லி ரூம்ல தூங்கிட வேண்டியது தான் ' என்று மனதை தேற்றிக் கொண்டு உள்ளே சென்றாள்.

"மாப்ள வீட்ல எல்லாம் பேசிட்டீங்களா ? அவங்களுக்கு தேதி ஓகேவா ?" என்று அவள் அப்பாவின் குரல் கேட்டது.

அவளுக்கு பகீர் என்று தூக்கி வாரிப் போட்டது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் உள்ளே நுழைந்த போது அவளுடைய பெரிய மாமா -  அத்தையும் , சின்ன மாமா -  அத்தையும் சோபாவில் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் மைதிலியின் தாய் வழி சொந்தங்கள். அதனால் தான் என்னவோ அவள் அப்பா வலுக்கட்டாய புன்னகையோடு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

"வாங்க மாமா, வாங்க அத்த !"  என்று ரெடிமேட் புன்னகையோடு அவர்களிடம் சென்றாள் மைதிலி.

"வாம்மா ! இப்ப தான் ஆபீஸ் முடிஞ்சுதா ?" என்று வினவினாள் சின்ன அத்தை.

"ஆமா அத்த. பூங்கொடி எப்படி இருக்கா ?"

"ம்ம்ம்... நல்லாருக்கா " என்ற போது  சின்ன அத்தையின் முகம் சுருங்கியதை கவனித்து விட்டாள் மைதிலி.

அதற்குள் அவள் அப்பா இடைமறித்து , "இவள ஆபீஸ் போக வேண்டானு சொன்னா  எங்க கேக்கறா ? படிச்ச படிப்புக்கு கொஞ்ச நாளாவது வேல செய்யணும்னு அடம்புடிக்கறா " என்றார்.

'அடடா ! பாய்ண்டுக்கு வர்றாரே ' என்று பல்லை மட்டும் காட்டினாள்.

"அதுக்கு தான் நாங்க பூங்கொடிய பத்தாவதுலேயே நிறுத்திட்டோம் " என்று படாரென்று கூறினார் சின்ன மாமா.

இவளுக்கு சுறுக்கென்று கோபம் வந்துவிட்டது. 'இதுக்கு நீங்க வெக்கப்படணும்  மிஸ்டர் முத்துக்குமார் ' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள். அவள் முகமும் ரெடிமேட் புன்னகையும் ஃபிட்  ஆகாமல் போனது.

அதன் பின் , வந்தவர்களுடைய சில சம்பிரதாய கேள்விகளுக்கு இயந்திரத்தனமாய் பதில் அளித்துவிட்டு தன் அறைக்குச்  சென்றாள்.

உடை மாற்றிக் கொண்டே அவர்கள் ஹாலில் பேசுவதை ஒருவாறு கேட்டுக் கொண்டிருந்தாள்.

"அவங்க ரெண்டு மாசம் போகட்டும்னு தான் சொன்னங்க. நாங்க தான் வர்ற முகூர்த்தத்துலயே முடிச்சுடலாம்னு சொல்லிட்டோம். விஷயம் ஊர் பூரா தெரிஞ்சுருச்சு. இனி லேட் பண்ணுனா நல்லருக்காதுல" என்றது சின்ன மாமாவின் குரல்.

"அதுவும் கரெக்ட் தான். பூங்கொடி என்ன சொல்றா ?" என்றார் மைதிலியின் அப்பா.

"அவளுக்கு என்ன?  அந்த பையன் கூட பொள்ளாச்சி வரைக்கும் ஓடிப் போனப்பவே கல்யாணத்துக்கு ரெடி ஆயிட்டா. இங்க யாருக்கு என்ன வந்தா என்னனு அவ பாட்டுக்கு போய்ட்டா.  அதான் உங்ககிட்ட எல்லாம் பேசிட்டு கல்யாணத்த சீக்கிரம் முடிச்சுடலாம்னு "

மைதிலி சற்றே மனநிம்மதி அடைந்தாள் கல்யாணப் பேச்சு தனக்காக இல்லை என்பதை அறிந்து, இருந்தாலும் யாரிடமும் அதிகம் பேசாத பூங்கொடி இவ்வாறு செய்தாள் என்பது இவளுக்கு ஆச்சரியம் தான்.

அதை உறுதி செய்து கொள்வதற்காக அம்மாவைத் தேடி சமையற்கட்டுக்குள்  நுழைந்தாள்.

அவள் அம்மா பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தாள்.

"என்னம்மா மாமா அத்தையெல்லாம்  திடீர்னு வந்திருக்காங்க  ?"

"வாடி இப்ப தான் வந்தியா ?"

"ஆமா , ஏதாவது விசேஷமா அவங்க வீட்ல ?"

"அந்த கதைய ஏன் கேக்கற ? பூங்கொடிக்கு கல்யாணமாம்"

"என்னம்மா சொல்ற ? இப்ப தானே 20 வயசு ஆகுது அவளுக்கு "

"ஊமச்சி மாதிரி முணுக் முணுக் னு இருந்துட்டு ஒரு பையன் கூட ஓடிப் போயிட்டா. விஷயம் ஊரெல்லாம் தெரிஞ்சுப் போச்சு இனியுமா வீட்ல வெச்சுருப்பாங்க ! "

"அவளா ? லவ் எல்லாம் பண்றாளா? முன்னாடியே இவங்களுக்கு எல்லாம் தெரியாதா ?"

"அது எவனோ ஒரு ***** ஜாதிப் பையன். வீட்ல சொன்னா கண்டிப்பா ஒத்துக்க மாட்டங்கனு தெரிஞ்சு பயத்துல ஓடிருக்கா. எப்டியோ புடிச்சுட்டாங்க. அந்த ஜாதிக்காரங்க எல்லாம் நமக்கு கீழ இருக்க வேண்டியவங்க, இப்ப பாரு அவனுக்கே கல்யாணம் பண்ணி வெக்க வேண்டியதா இருக்கு."

"ஏம்மா இப்டி பேசற ? ஜாதி ஜாதி னு"

"அதெல்லாம் உனக்கு புரியாது. நீ சின்ன பொண்ணு. சும்மா இரு "

"சரி , எப்டியோ சந்தோஷமா இருக்கட்டும்னு கல்யாணம் பண்ணி வெச்சுட வேண்டியது தானே !"

"அது எப்டி சந்தோஷமா இருப்பாங்க . 'வேற ஜாதிப் பையன கல்யாணம் பண்ணிக்கற உங்க வீட்ல ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்'னு  எங்க ரெண்டு அக்கா வீட்லயும் சொல்லிட்டாங்க. உங்கப்பா என்ன சொல்வாரோனு பயத்துல இருந்தேன். நல்ல வேலையா அவரும் இது கரெக்ட் தான்னு  சொல்லிட்டார்"

'ச்சே ! சொந்தக்காரங்களுக்காக  மகளோட சந்தோஷத்த கொண்டாட முடியாம இருக்காங்களே ' என்று நினைத்த மைதிலியின் மனதில் சொந்தக்காரர்களின் மதிப்பு மேலும் ஒரு படி  இறங்கியிருந்தது. அதே சமயம் , அவள் மனதில் ஒரு சந்தோஷமும் இருந்தது, அதற்கு காரணம் அருண் தன் ஜாதி என்பதே !

"சரிம்மா.. நான் போய் தூங்கறேன். லைட்டா தல வலிக்குது " என்றாள் அதற்கு தக்க நடிப்போடு.

"காபி கொஞ்சம் போட்டு தரட்டுமா ? குடிச்சா நல்லாருக்கும் " என்றாள் அம்மாவிற்கே உண்டான அன்போடு.

"இல்லம்மா, கொஞ்ச நேரம் தூங்குனா சரி ஆயிடும் "

"சரி , போய்  தூங்கு. நாளைக்கு ஆபீஸ்ல இருந்து கொஞ்சம் சீக்கிரம் வா. ஒரு நல்ல போட்டோ எடுக்கணும் உன்ன "

"எதுக்கும்மா ?"

"மாப்ள வீட்டுக்கு குடுக்க தான். உன்னோட  ஜாதகத்த வெளிய குடுக்க ஆரம்பிக்கலாம்னு  அப்பா சொல்லிட்டார் "

"இப்ப என்னம்மா அவசரம் ?" என்றாள் இதை சற்றும் எதிர்பாராதவளாய் .

"அவசரமா ? இப்ப பண்ணாம வேற எப்ப பண்றது ? வரவங்க எல்லாம் பொண்ணுக்கு எப்ப கல்யாணம்னு தான் கேக்கறாங்க . அதும் இல்லாம ஒரு நல்ல வரன் வந்துருக்கு.  மாப்ள டாக்டர்  சொந்தமா ஒரு கிளினிக் வெச்சுருக்கார் , சொத்தும் நெறய இருக்கு "

"அது மட்டும் போதுமா கல்யாணத்துக்கு ?"

"வேற என்னடி வேணும் ? அதெல்லாம் இருந்தா தான் நீ கல்யாணத்துக்கு அப்புறம் சந்தோஷமா இருக்க முடியும் . நான் சொல்றத மட்டும் கேளு."

சிந்தனையில் மூழ்கினாள் மைதிலி. 'என்ன இது திடீர்னு இப்டி ஒரு குண்ட தூக்கி போடறாங்களே. எப்டி சமாளிக்கறது ?' என்று நினைத்துக் கொண்டே சமையற்கட்டின் கதவு வரை சென்றவள்.,திரும்பி அம்மாவிடம் மெதுவாக வந்தாள்.

"அம்மா"

"சொல்லுடி"

"ஒரு பையன் ....."

"ஒரு பையன் ?" என்று வினவிக்கொண்டே அவள் முகத்தை உற்று நோக்கினார்.

"ஒரு பையன லவ் பண்றேன் மா"

"ஏய்! என்னடி சொல்ற ? வந்தவங்க காதுல விழுந்து தொலச்சற போகுது. உங்க பெரிய அத்த சும்மாவே அந்த ஆட்டம் ஆடுவா !"

"அம்மா ! நிஜமா தான் மா "

"என்னடி இப்டி சொல்ற ? இந்த விஷயம் உங்க அப்பா கேட்டா என்ன சொல்வாரோ " என பேசிக் கொண்டிருக்கும்போதே அவர் கண்களில் நீர் வரத் தொடங்கியது.

அதைப் பார்த்து மைதிலியின் கண்களிலும் நீர் ஊற்று.

சிறிது நேர மௌனத்திற்குப் பின், நிலைமையை உணர்ந்தவராய் கண்களை துடைத்துக் கொண்டு "சரி, இப்ப எதுவும் பேச வேண்டாம் . வந்திருக்கரவங்க எல்லாம் போகட்டும் நா அப்பா கிட்ட பேசறேன். அந்த பையன ஒரு நாள் வீட்டுக்கு வர சொல்லு, நேர்ல பாத்து பேசணும். நீ இப்ப ரூம்ல போய் தூங்கு "

"சரிம்மா " என்று கண்களைத் துடைத்துக் கொண்டு தன் அறையை நோக்கிச் சென்றவளை நிறுத்தினார் அவள் அம்மா.

"ஒரு நிமிஷம் .. அவன் நம்ம ஜாதிப் பையன் தானே ?"

"ஆமாம்மா"

"சரி, போ!" என்றார் அது வரையில் சந்தோஷம் என்கிற முக பாவனையோடு.

இதையெல்லாம் மூச்சு விடாமல் மைதிலி சொல்லிய போது, அதிர்ச்சியுடனும் ஆச்சர்யத்துடனும் கேட்டுக் கொண்டிருந்தான் அருண்.

"ஏன்டி ! அங்க அந்த பம்பு பம்பிட்டு தான் என்ன வந்து இந்த மெரட்டு மெரட்டிட்டு இருக்கியா ?" என்றான் அதிர்ச்சியை வெளிக் காட்டிக் கொள்ளதவனாய்.

"அப்புறம் உன்கிட்டயும்  அழணுமா ? அழுதாலும் ரியாக்ட் பண்ண மாட்ட  அப்புறம் என்ன ?" என்று சொல்லிக்  கொண்டிருக்கும்போதே அவளை யாரோ அழைக்க, அவளும் "நா மறுபடியும் கூப்டறேன் " என்று இணைப்பை துண்டித்து விட்டு சென்றாள்.

சரியாக 25 நிமிடங்கள் கழித்து , அருணுக்கு அழைப்பு வந்தது. பல குழப்பங்களிலும் சிந்தனையிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அவன், போனை எடுத்து "ம்ம்ம் " என்றான்.

"அப்பா கிட்ட பேசிட்டேன் டா. அவருக்கு மூஞ்சியே இல்ல. எல்லாரும் ரொம்ப நேரம் அமைதியாவே இருந்தாங்க. அப்புறம் நாளைக்கு அண்ணாவும் அப்பாவும் வீட்ல இருப்பாங்க. நாளைக்கே உன்ன வர சொல்றாங்க " என்றாள் சோகம் ததும்பிய குரலில் மைதிலி.

"நாளைக்கேவா ? எங்க வீட்ல தெரிஞ்சா கொன்னுடுவாங்க "

"ஹலோ சார் ! உங்கள வீட்டோட வந்து சம்மந்தம் பேச கூப்டல. நீ முதல வந்து பேசு. அப்புறம் உங்க வீட்ல பேசிக்கலாம்  "

"சரி டி "

அதற்கு மேல் எதுவும் பேச தோன்றாமல் போனை கட் செய்தனர்.

அருண் தன் சிந்தனைக் கடலுக்குள் மூழ்கினான்.

பெற்றோர் சம்மதத்தோடு தான் தங்கள் திருமணம் நடக்க வேண்டும் என்று இருவருமே பேசி முடிவெடுத்தது தான். ஆனால், இப்போது அவனை ஏதோ உறுத்திக் கொண்டிருந்தது. அவனுடைய நேரம் தான். படிப்பு முடிந்து வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் தான் ஆகியிருந்தது. இந்த சூழலில் திருமணம் என்பது அவனால் கனவால் கூட நினைக்க முடியாது. இருந்தாலும் மைதிலியையும் விட முடியாது. அவன் வாழ்வின் முழு வசந்தம் அவள்.

'அவளுக்காக நா நாளைக்கு போறேன் . போய்  எப்டியாவது டைம் வாங்கிடணும். அதுக்கப்புறம் மெதுவா நம்ம வீட்ல பேசி சம்மதம் வாங்கணும் ' என்று தன்னை திடபடுத்திக் கொண்டான்.

அதற்கு அடுத்த நாள் வழக்கமாக ஆபீஸ் சென்று விட்டு, மைதிலியின் மெசேஜ் படி அவள் வீட்டிற்கு மாலை 6 மணிக்கு போனான். முன்னொரு முறை அவள் வீட்டில் யாரும் இல்லாத போது சென்றிருக்கிறான்.   ஆனால், இச்சமயம் அவனுக்கு காதலை விட நடுக்கமே அதிகம் இருந்தது.

வாசலில் மைதிலி காத்துக் கொண்டிருந்தாள். தன் பைக்கை நிறுத்திவிட்டு எதுவும் பேசாமல் அவளை பின்தொடர்ந்தான்.

நாட்டாமை படத்தில் சரத்குமாரை கதர் சட்டையிலும், கலர் சட்டையிலும் பார்த்த மாதிரி மைதிலியின் அப்பாவும், அண்ணனும் சோபாவில் உட்கார்ந்திருந்தனர். அவள் அம்மா அருகில் நின்று கொண்டிருந்தார்.

அவர்களிடம் சிரிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தோடு அவர்கள் முன் நின்றான் அருண்.

"உக்காரு பா " என்றார் அவள் அப்பா.

"தேங்க்ஸ் அங்கிள் "

"காபி எதாவது சாப்ட்றியா பா ?"

"இல்ல அங்கிள். வேண்டாம் . இப்ப தான் சாப்டேன்"

"தம்பிக்கு சொந்த ஊரு எது ?"

"உடுமலை அங்கிள்"

"அங்க சொந்த வீடு இருக்கா ?"

"இருக்கு அங்கிள். இப்ப கோயம்புத்தூர்ல இருக்கறது வாடகை வீடு தான் "

"ம்ம்ம் .. மைதிலி சொன்னா. அம்மா , அப்பா எல்லாம் என்ன பண்றாங்க ?"

"அப்பா ரிடையர்ட் கிளெர்க். அம்மா வீட்ல தான் அங்கிள் "

"சரி .. உன்னோட ஜாதகத்த கொண்டு வந்து குடு பா .. மைதிலிக்கு ஜாதகத்துல செவ்வாய் தோஷமும் இருக்கு, ராகு கேது வும் இருக்கு "

"அங்கிள்.. இந்த காலத்துல இதெல்லாம் பாக்கணுமா " என்று கூறியவுடன் உணர்ந்தான், அவரை எதிர்த்து பேச ஆரம்பிக்கறேனோ என்று. அதற்கு காரணமும் இருந்தது,

"எந்த காலமா இருந்தாலும் எங்க சைடுல இது கண்டிப்பா பாப்போம். எதுவும் பாக்காம கல்யாணம் பண்ணிட்டு பின்னாடி எதாவது ஆச்சுனா யார் கஷ்டப்படறது "

"சரிங்க அங்கிள்... நான் சீக்கிரமே கொண்டு வந்து தர்றேன் " என்று சொல்லிவிட்டு எழுந்தான்.

"எதாவது சாப்டுட்டு போலாமே "

"இல்ல அங்கிள்.. இன்னொரு நாள் சாப்டுக்கறேன் . போய்ட்டு வர்றேன் அங்கிள் "

"சரி தம்பி "

அருண் வாசலை நோக்கிச்  சென்றான். யாரும் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து மைதிலி வெளியே வந்தாள். ஆனால், அதற்குள் அருண் பைக்கில் வெகு தூரம் போயிருந்தான். 

'வந்துட்டு என்கூட ஒரு வார்த்த கூட பேசாம போறான் பாரு. அவன வெச்சுக்கறேன்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். அவள் அப்பா நடந்து கொண்ட விதம் அவளுக்கு மகிழ்ச்சியுடன் நம்பிக்கையும் தந்திருந்தது.

அதே சமயம், பைக்கில் ஒரு உறுதியுடன் சென்று கொண்டிருந்தான் அருண் 'என் ஜாதகம் சுத்த ஜாதகம்னாலும்  எப்டியாவது எல்லார்த்தையும் சமாதனப் படுத்தணும் ' என்று.

பல போன் கால்களும் சந்திப்புகளும், சில வாக்குவாதங்களும் நிறைந்த 9 மாதங்களுக்கு பின் ....

நகரின் முக்கியமான பகுதியில் அமைந்திருந்த பார் அது.

"என் ஆசை மைதிலியே ... என்னை நீ காதலியே ..."  என்ற பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது.

அருண் அதை அழுது கொண்டே பாடிக் கொண்டிருந்தான் .

அருகில் அவன் நண்பன் "டேய் ! இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் அதையே நெனச்சு குடிச்சுட்டிருப்ப.. அத மறந்து வெளிய வாடா " என்று கவலையுடன் கூறினான்.

"மச்சான்.. அந்த நேரத்துல பொறந்தது அவ தப்பா டா ?  அவ ஜாதகத்துக்கு அவளோ நானோ எப்டி டா பொறுப்பாக முடியும். ஜோசியக்காரன் சொல்றான் அவள கல்யாணம் பண்ணுனா நான் செத்துருவனாம். இப்ப மட்டும் என்னவாம் "

"சரி டா .. போதும் டா.. வாடா போலாம்"

"இன்னொரு லார்ஜ் சொல்லு மச்சான். அவளாவது நல்லா இருக்கட்டும் "

அதே நேரத்தில், நகரின் இன்னொரு பகுதியின் ஒரு வீட்டில் யாருக்கும் கேக்காத அழுகை சத்தம் வந்து கொண்டிருந்தது.

மைதிலி பாத்ரூமில் அழுது கொண்டிருந்தாள். தினமும் அவள் அழும்போது  அந்த மொத்த துக்கத்தையும் தாங்கி நின்றிருந்தது அந்த பாத்ரூம் சுவர்கள் .  அன்று அழுகை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. காரணம் அறியா அச்சுவர்கள் அதையும் தாங்கிக் கொண்டது.

போதுமான வரையில் அழுது தீர்த்த மைதிலி, பெட்ரூமிற்கு வந்த போது அவள் கணவன் சந்தோஷமாக உறங்கிக் கொண்டிருந்தான்.  அவன் சந்தோஷத்திற்கு காரணமான  மேஜையின் மீது வைத்திருந்த கவரை எடுத்தாள். அவளின் அளவுக்கதிகமான அழுகைக்கு காரணமும் அதுவே.  அந்த கவரிலிருந்த  ரிப்போர்ட்டை மீண்டும் ஒரு முறை வெளியே எடுத்து பார்த்தாள்.

"ப்ரெக்னன்சி  டெஸ்ட்  பாசிட்டிவ் " என்றிருந்தது.