"அம்மி
அம்மி அம்மி மிதிச்சு" என்று மெட்டி ஒலி நாடகத்தின் இன்ட்ரோ பாடல் கேட்டவுடன்
சில்லறைகளை சிதறவிட்டு பார்த்த வீடுகளில் எங்கள் வீடும் ஒன்று. சரோவிற்கு வந்த
மாமியார் பிரச்சனை, லீலாவிற்கு வந்த கணவன் பிரச்சனை என அனைத்து
பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து அவர்களுக்காக அலறி அனுதாபப்பட்டு
ஆசுவாசப்படுத்திக் கொண்டு சுபம் போடுவதற்கும், 'இந்த நாடகம்னாலே
இப்படி தான் டா அழுகாச்சியா இருக்கும்' என்று பொதுமைப்படுத்தி
சீன் போடும் எதார்த்த கிளிஷேவிற்குள் நான் விழுவதற்கும் சரியாய் இருந்தது.
அன்றிலிருந்து
சீரியல் என்றாலே எனக்கொரு ஒவ்வாமை இருந்து வந்தது. அவ்வப்போது ஆங்கில சீரிஸ் பார்க்கச் சொல்லி
எனக்கு நண்பர்களிடம் இருந்து அறிவுரைகள் வந்து கொண்டும் இருந்தது. அப்போதும் என்
எண்ணங்கள் யாவும் தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களையும் என் நண்பர்கள்
சொன்ன சீரிஸ்களையும் ஒன்றாகவே எண்ணி என்னை ஒன்ற விடாமல் செய்து கொண்டிருந்தது.
அப்படி இருந்த என்னை 'இந்த சீரிஸ் பாரு டா வேற லெவல்ல இருக்கும்' என்று மற்றவருக்கு
உபதேசம் சொல்லும் உத்தமன் ஆக்கிய
புண்ணியம் நான் பார்த்து வியந்த சில சீரிஸ்களையே சாரும். அவற்றை நான் உணர்ந்த
விதம் பற்றிய சிறு தொகுப்பு தான் இது. பல
கருத்து கதவுகளை எனக்கு திறந்துவிட்ட அந்த சீரிஸ்களுக்கான நன்றியாகவும், அவற்றை எனக்கு அறிமுகப்படுத்த நினைத்த பலரை
பகடி செய்ததற்கு மன்னிப்பாகவும் தான் நான் இதை பார்க்கிறேன்.
'அப்படி என்ன தான் யா இருக்கு இதுல' என்று நான் பார்க்க ஆரம்பித்த ஒரு சீரிஸ் 'ஃப்ரெண்ட்ஸ்'. வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் ஒன்று சேர்ந்த ஆறு நண்பர்களின் கதை.
எப்போதும் காபிக்கடையில் அரட்டையடித்துக்கொண்டு, எப்போதாவது பெற்றோர்களை
சந்தித்துக்கொண்டு, லவ் வேறு டேட்டிங் வேறு என்று புரிந்து கொண்டு வாழும்
நமக்கு செட்டே ஆகாத செட்டப். இதில் மீண்டும் மீண்டும் சிரிப்பில் வருவது போல்
இடையில் சிரிப்பலைகள் வேறு. ஆனாலும் ஒவ்வொரு கேரக்டரும் அவர்களுக்கு நிகழும்
கிளைக்கதைகளும் நம்மை வியப்படைய வைக்க
தவறவில்லை.
"நட்புன்னா
என்னனு தெரியுமா? இப்படி இருக்கணும் டா , அப்படி இருக்கணும் டா" என்று அவர்கள் பேசிக் கொள்வதில்லை. இத்தனைக்கும்
ஒவ்வொருவரும் இன்னொருவர் பேச்சைக் கேட்பதில்லை, சொன்ன சொல்லை அப்படியே
காப்பாற்றுவதும் இல்லை. ஆனால், ஒருவருக்கு நடக்கும் நல்லது கெட்டது என
அனைத்திலும் மற்றவர்கள் துணை நிற்கிறார்கள். அவர்களின் நட்பு காட்சிகளாக கதைகளாக
அவர்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளாக நம் முன் விரிவடைகின்றன. அந்த நிகழ்வுகளின்
ஒரு பகுதியாக அவர்களுக்கு பரிச்சயமான ஆனால் கண்களுக்கு தட்டுப்படாத ஒரு கேரக்டராக நாமும் வாழ துவங்கி விடுகிறோம்.
ஆண்களும்
பெண்களும் நண்பர்களாக மட்டும் இருக்க முடியுமா? நண்பர்களுக்குள் காதல்
தவறா? என்று நாம் இன்னும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும்
வேளையில், இதுல சரி தவறுன்னு எதுவும் இல்ல நமக்கு எது செட் ஆகுதோ அத
பண்ணிட்டு போயிட்டே இருப்போம் என்று அசால்டாக பதில் சொல்லி செல்கிறார்கள்.
நண்பர்கள்னா பார்ட்டி
ஜாலி மட்டும் தானா என்றால், அது மட்டுமில்லை அவர்களுக்கு பிரச்சனை அதற்கு
மேல் வரும் என்பதையும் அவர்கள் சொல்ல தவறவில்லை. கை நிறைய சம்பாரித்து அடிக்கடி
பார்ட்டி செய்யும் நண்பர்களுக்கிடையில் நிரந்தர வருமானமில்லாமல் பார்ட்டிக்கு போக
கூச்சப்படும் இருவர், பல பெண்களிடம் உறவு கொண்டாலும் தன் நண்பனின்
முன்னாள் காதலியின் மேல் காதல் வரும்போது அதை வெளிப்படுத்த முடியாமல் மறைக்க
முற்படும் ஒருவன் என்று அவர்களுக்குள் வரும் முரண்பாடுகள் நாம் அதிகம் சிந்தித்து
பார்க்காதவை ஆனால் எளிதில் நடக்கக் கூடியவை.
இந்த சீரிஸ் வந்த
காலக்கட்டத்தை வைத்துப் பார்க்கும்போது இது பதித்து சென்ற முற்போக்கான கருத்துகள்
அதீதம். அதே சமயம் அவர்கள் கூறும் நெகிழ்வான கதைகளும் ஏராளம்.
மாற்றாந்தாயின்
மூலம் பிறந்த தம்பியின் குழந்தைகளுக்கு வாடகைத்தாய் ஆகும் அக்கா, தந்தையின் நண்பனைக் காதலிக்கும் மகள், பெண்ணாக மாறிய தந்தையை 30 வருடங்களுக்கு பிறகு ஏற்றுக் கொள்ளும் மகன், தந்தை இல்லாத தோழிக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமண மேடையில் ஏற்றிவிடும்
நண்பன், விபத்தாக நண்பர்களுக்கு இடையே நடந்த உறவில் பிறந்த குழந்தை, ஆனால் அதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாமல்
வாழும் தம்பதி, மனைவியின் லெஸ்பியன் திருமணத்தை முன் நின்று
நடத்தும் கணவன் என இந்த சீரிஸ் நமக்கு
அறிமுகப்படுத்தும் விஷயங்கள் பல பல.
இதில்
பலவற்றையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். ஆனால், அவர்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை. அவர்கள் நமக்கு
சொல்லிக் கொள்ள விரும்புவதும் அது தான்.
இவ்வளவு ஆழமான
நிகழ்வுகள், கனமான பாத்திரங்கள் இருந்தும் நம்மை தொடர்ந்து
சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். நகைச்சுவை மூலம் இவ்வளவு கதைகளும்
கதாபாத்திரங்களும் நமக்கு உணர்த்தும் உண்மைகள் அபாரமானவை.
எவன் எது
செய்தாலும் கிண்டல் செய்யும் சாண்ட்லர், பார்க்கும் இடமெல்லாம்
சுத்தம் எதிர்பார்க்கும் மோனிகா,
சந்தர்ப்பம் வாய்க்கும்
போதெல்லாம் டைனோசர் பற்றி லெக்ட்சர் அடிக்கும் ராஸ், பேஷன் டேட்டிங்கில்
நாட்டம் கொண்ட ரேஷல், பெண்களை கவர்வதையே வேலையாக வைத்திருக்கும் ஜோயி, தன் கிறுக்குத்தனங்களை மறைக்க விரும்பாத ஃபீபீ என அவர்கள் ஒருவருக்கொருவர்
சொல்லாமல் சொல்லிக்கொள்ளும் ஒரே விஷயம்
Super Loges.. A cute Tamil recap for friends fans.
ReplyDelete