"ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை
இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணை தான் ஞானத்தின் எல்லை..."
என்று வைரமுத்துவின் வரிகள் சோகக் குரலில் ஒலித்துக் கொண்டிருக்க, மின் மயானம் முழுவதும் அழுகைக் குரல்கள் நிறைந்திருந்தன. அதில் ஒருவனின் ஓலக்குரல் மட்டும் தனியாக ஒலித்துக் கொண்டிருந்தது. இறந்து போன சிவகாமி பாட்டியின் பேரன் ராகவ் மூச்சடைக்க விசும்பிக் கொண்டிருந்தான். பிறக்கும்போது இவனை அள்ளி அணைத்த கைகள், அனலின் கைகளுக்கு இரையாவதை பார்த்த பின் எப்போதும் கட்டுக்குள் இருக்கும் இவன் உணர்ச்சிகள் அணைகளை உடைத்துக் கொண்டு வெளி வர ஆரம்பித்திருந்தன. பாட்டியின் இழப்பு இவனை இவ்வளவு திருப்பிப் போடும் என ஒரு போதும் நினைத்திருக்கவில்லை. அவர் இழப்பைப் பற்றியே யோசித்திராவனுக்கு இது ஒரு மீளாத்துயரமாக தான் பட்டது. இவன் மட்டுமல்ல வேறு எவரும் யோசித்திருக்க மாட்டார்கள். காலையில் கோவிலுக்கு சென்று வருகிறேன் என கிளம்பி, மாலையில் சாமியாக வந்த சிவகாமி பாட்டி தந்த ஏமாற்றம் அனைவருக்கும் பேரதிர்ச்சி தான்.
அக்கண்ணீரின் இடைவெளிகளில் தன் சிந்தை எங்கிருக்கிறதென்று அறியாதவனாய் அனைவரையும் நோட்டம் விட ஆரம்பித்திருந்தான். இவர் இடத்தில் இனி யாரும் இல்லையே என்ற பாசத்தில் சிலரும், இன்று இவர் இருக்கும் இடத்திற்கு நாளை நாமோ என்ற பயத்தில் சிலரும் அழுது கொண்டிருந்தனர். அவர்களைப் பார்க்கப் பார்க்க இவனுக்கு கோபம் தலைக்கேறியது, தன் மீதும் கூட. சிவகாமி பாட்டி உயிருடன் இருக்கும்போது வசை பாட வாய்கள் போதாமல் பேசியவர்கள் பலரும், கவலை முகமாய் கண்ணீருடன் நின்றிருந்தனர். அவர்களைக் கேள்வி கேட்க முடியாத விரக்தியில் தன் மீதும் எரிச்சலாய் வந்தது. கோபத்தின் உச்சத்தில் இறந்த கால நினைவுகளை அசை போட ஆரம்பித்தான்.
பரந்து விரிந்த வானை அலங்கரிக்கும் நிலா போல நெற்றியில் பொட்டும், அவிழ்க்க முடியாத ஜிலேபி கொண்டையும், தவிர்க்க முடியாத புன்னகையும் தான் சிவகாமி பாட்டியின் அடையாளங்கள். இளையவர்கள் எது செய்தாலும் பாக்கைக் கொட்டிக் கொண்டு குற்றம் சொல்லும் சாதாரண பாட்டி அல்ல சிவகாமி, அவர்கள் செய்யும் லூட்டிகளில் தன்னையும் இணைத்துக்கொண்டு மகிழும் முதிர்ந்த இளரத்தம். ராகவ் எடுக்கும் செல்பிக்களுக்கு போஸ் கொடுப்பதாகட்டும், இளையதளபதி விஜய் படத்தை இமை கொட்டாமல் பார்ப்பதாகட்டும், 'ஊதா கலரு ரிப்பன் ' பாடலை முணுமுணுத்துக் கொண்டே வேலை செய்வதாகட்டும், ராகவின் நண்பர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களை கலாய்ப்பதாகட்டும் தனக்கான இலக்கணத்தை தானே வடிவமைத்துக் கொண்டிருந்தார். அதே சமயம் ராகவிற்கு பழைய உறவுகளின் கதைகளையும் அவர்களின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் சந்தர்ப்பங்களையும் அவர் தவற விடவில்லை.
ராகவுடன் அவருடைய உறவு மிகவும் விசேஷமானது. மகன் வழிப் பேரன் என்பதாலோ என்னவோ இட ஒதுக்கீட்டில் இருக்கும் ஓர வஞ்சனை போல மற்ற பேரப் பிள்ளைகளை விட இவனிடம் பாசம் அதிகம். ராகவ் தன் அம்மாவுடனோ அப்பவுடனோ சண்டை இடும் போதெல்லாம் சிவகாமி பாட்டியிடம் போய் படுத்துக் கொள்வான். காரணம், தவறியும் சிவகாமி பாட்டி ராகவை திட்டி விட மாட்டார். குழந்தையில் இருந்து அவனை தூக்கி வளர்த்ததால், அவன் ஒவ்வொரு அசைவும் பாட்டிக்கு அத்துப்படி. அவன் கோபம் தீரும் வரை அவனிடம் கதைகளைக் கேட்டுக் கொண்டு, தலையை நீவி தூங்க வைத்து விடுவார். அடுத்த தினமே "சின்ன பையன் அவன் என்ன பண்ணிட்டான்னு அவன திட்டிருக்க ?" என்று ராகவின் அப்பாவிடம் சண்டையிடுவார்.
முகப்புத்தகத்தின் குறுக்கீடு இல்லாமல் பிறந்தநாட்களை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பாட்டி படுசுட்டி.பிறந்த தினம் விசேஷ தினங்களில் ராகவ் தவறாமல் பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதமும் பணமும் வாங்கி விடுவான். அவன் வரவில்லையென்றாலும் பாட்டியின் ஆசிர்வாதமும் பணமும் அவனை தேடி வந்துவிடும்.
வீட்டில் துணி எடுக்க அனைவரும் செல்லும்போதெல்லாம், பாட்டி ராகவ் தேர்ந்தெடுக்கும் சேலைகளை தான் வாங்குவாள். இவன் தேர்ந்தெடுக்க சிரமப்பட்டால் "ஏண்டா, உங்கம்மாளுக்குனா அவ்ளோ சீக்கிரம் செலக்ட் பண்ற, எனக்கு பண்ணமாட்டியா ?" என்று நக்கலடிப்பார். அதே சமயம் அவன் சுமாராக தேர்ந்தெடுத்தாலும் ,"என் பேராண்டி செலெக்ஷன் எப்போவும் சூப்பரா தான் இருக்கும் " என்று அனைவரிடமும் கூறி பெருமைப்பட்டுக் கொள்வார்.
அப்படி சேலை உடுத்தி மகிழ்ந்த உடலை அவருக்குப் பிடித்த ப்ளூ கலர் பட்டுப்புடவையுடனே அனலுக்கு இரையாகக் கொடுத்து விட்டோமே என்று எண்ணிய போது, ராகவிற்கு அழுகை இன்னும் குமுறிக்கொண்டு வந்தது. அவர் எப்படி இறந்தார் என தெரியாத விரக்தியில் அழுகை இன்னும் அதிகமானது. எப்படியேனும் அதை அறிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு அவனுக்கு இருந்ததாக உணர்ந்தான்.
அது ஒரு புரட்டாசி சனிக்கிழமை. ராகவின் அம்மா அவனை சிறப்பு வாய்ந்த கோவில்களுக்கு அழைத்து செல்ல ஒரு பட்டியலே தயார் செய்து வைத்திருந்தார். ராகவ் காலை எழுந்திருக்கும்போதே சிவகாமி பாட்டி தலைக்கு குளித்து துவட்டிக் கொண்டிருந்தார்.
இவனைப் பார்த்தவுடன் "நீ கோயிலுக்கே போகமாட்டேனு இருந்த, இன்னைக்கு பாரு... உங்க அம்மா உன்ன எத்தன கோயிலுக்கு கூட்டிட்டுப் போக போறான்னு... ஆனா நா தப்பிச்சுட்டேன் பா.. இங்க பக்கத்துல இருக்கற கோயிலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்து படுத்துக்க போறேன் " என்றார் கிண்டலாக. அவனும் அதைக் கேட்டு மீண்டும் உறங்க சென்றுவிட்டான்.
சிறிது நேரம் கழித்து எழுந்தவுடன் "பாட்டி எங்கயோ கீழ விழுந்துட்டாங்களாம்... இந்த ஹாஸ்பிட்டலுக்கு வந்துரு" என்று ராகவின் அப்பா அவனிடம் சொன்ன போது கூட அவனுக்கு பாட்டி உடல்நிலையின் தீவிரம் அவனுக்கு புரியவில்லை. அங்கு சென்று பாட்டியின் நிலைமை சீராகிக் கொண்டிருக்கிறது என்று அனைவரும் பெருமூச்சு விடுவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. சர்க்கரையும் மாரடைப்பும் அவரை முடித்துவிட்டது.
வீட்டிற்கும் ஹாஸ்பிட்டலுக்கும் இடையில் நடந்தவை அனைவருக்கும் புதிர் தான். அதை விடுவிக்க ராகவ் கோவிலுக்கு அருகில் சென்று விசாரிக்கப் போனான். ஒவ்வொருவரிடமும் அவன் கேள்வி கேட்கும்போதும் அவர்கள் சொல்லும் பதிலில் தன் பாட்டியே கிடைத்து விடுவாரோ என்ற ஆர்வம் அவன் கண்களில் தெறித்தது கண்ணீருடன் சேர்ந்து. இறுதியில் அவன் அறிந்த சம்பவம் அவனை சற்று பலவீனமாக்கியது உண்மை தான்.
பாட்டி கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல ஒரு சிற்றுந்தில் ஏற வேண்டும். அதற்கு செல்லும்வழியில் பாட்டிக்கு தலைசுற்றல் ஆரம்பமாகியுள்ளது. ஒரு வழியாக பேருந்தில் ஏறியவருக்கு உட்கார இடமில்லை. கம்பியைப் பிடித்து நிற்க முயற்சித்த பாட்டிக்கு தோல்வியே கிட்டியது. தன் முகத்தைப் பேருந்தின் தரைக்கு தந்தார். தன்னையும் அப்போது வந்த முதல் மாரடைப்புக்கு இரையாக. அந்த பேருந்தின் நடத்துநர் சொல்ல சொல்ல ராகவின் கண்கள் குளமாகியது. இதை வீட்டில் சொல்ல முடியாமல் சொல்லி கதறினான்.
அதன் பிறகு, அவன் பேருந்தில் செல்லும்போதெல்லாம் பாட்டியின் ஞாபகங்கள் ஒரு முறையாவது அவனை தீண்டிவிடும். விளைவு, பாட்டியின் வயதில் எவர் வந்தாலும் அவர்களுக்கு உட்கார இடம் கொடுக்க ஆரம்பித்தான்.
அவர்களின் கண்களிலும் புன்னகையிலும் சிவகாமி பாட்டி வாழ்கிறார் என்கிற நம்பிக்கை அவனை முழுதும் ஆட்கொண்டது.