பிளாஷ்பேக் 2 - தேர்வு முடிவு

, , No Comments
அன்று... பயம் என்னை  நாத்திகத்தில் நம்பிக்கை இழக்கச் செய்து கோவில் கோவிலாக  திரிய வைத்த நாள். பக்கத்து வீட்டுக்காரர்களின் பார்வையில் நான் என்னவாக நிற்க போகிறேன் என்று தெரியப் போகும் நாள். என் 14 வருட கேள்வியான பள்ளிப்படிப்பிற்கு விடை கிடைக்கும் நாள்.என் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாள். 

'மதிப்பெண் எவ்வளவு ?' என்று கேள்வியுடனும் , அதை எப்படி பெற வேண்டும் என்பதற்கு மிகாத பயிற்சியுடன்  மட்டுமே  அன்றாடம் போராடி வந்த மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தீர்ப்பு நாள். அதே பரபரப்பில் நானும்  திருவிளையாடல் படத்தில் முருகன் பாத்திரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தை மிஞ்சிய விபூதி பட்டையுடன் என் அண்ணனின் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன்.

"என்னப்பா ரிசல்ட் பாக்கவா ?" என்று கேட்டார் நான் எப்போதும் பர்பி வாங்கித் திங்கும் பெட்டிக்கடை தாத்தா.

"ஆமா தாத்தா, அண்ணா வீட்ல கம்ப்யூட்டர் இருக்கு அங்க பாக்கலாம்னு" என்றேன் பயபக்தியுடன்.

"மார்க் கம்மினாலும் பரவாயில்ல. இங்க வந்துரு வீட்ல திட்டுனாங்கனா. மார்க் மட்டும் தான் வாழ்க்கையா என்ன ?" என்றார் 65 வயதிலும் கணீரென்று இருந்த குரலில்.

மார்க் கம்மி ஆயிரும்னு அபசகுணமா பேசறாரே என்று அழுவதா, எனக்கு அடைக்கலம் தரேன்னு சொல்றாரே என்று சிரிப்பதா என்று ஒரு குழப்பம். இருந்தும் தெளிவான ஓர் கருத்தை கூறிய மகிழ்ச்சியில் "சரி தாத்தா !"  என்று சிரித்து விட்டு நடக்க ஆரம்பித்தேன்.

லேப்டாப்பில் இணையத்தை இணைத்த மகிழ்ச்சியில் தன்னை ஒரு பில்கேட்ஸ் ஆக நினைத்துக்கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தார் என் அண்ணன்.

"வாடா... அம்மா எங்க ?"

"கோயிலுக்கு போயிட்டு இங்க வரேன்னு சொன்னங்க ணா"

"சொல்லிருந்தா நானும் போயிருப்பேன்ல! இப்டி சொல்லாம போயிட்டாங்களே சித்தி வரட்டும் வெச்சுக்கறேன்" என்றார் 'சாமி' என எழுதினாலே கும்பிடும் பக்திமான் அண்ணன்.

'நீங்களும் போயிட்டா அப்புறம் யாரு ரிசல்ட் பாக்கறதாம்' என மனதில் நினைத்தவாறே "நீங்க பிஸியா இருப்பிங்கனு தான் கூப்டல ணா . ரிசல்ட் பாத்துட்டு வேணும்னா மறுபடியும் போலாம் "  என்றேன் அவரை மகிழ்விக்க, அதுவே சிறிது நேரத்தில் உண்மையும் ஆகிப் போனது.

"சரி, டைம் ஆயிடுச்சு. வா! ரிசல்ட் பாப்போம். ஏற்கனவே சைட் லோட் பண்ணி வெச்சுட்டேன். உன் ரெஜிஸ்டர் நம்பர் சொல்லு"

1,2,3 என்ற வரிசையையும் மறந்து நான் தூக்கத்திலும் சொல்லி கொண்டிருந்த அந்த வரிசை எண்ணைக் கூறினேன். அதை நிரப்பி என்ட்டர் பட்டனை தட்டிய அந்த விநாடி என் இதயம் பல்வேறு விஞ்ஞானிகளும் கண்டிராத வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது, இணைப்போ ஆமையுடன் போட்டி போட்டுக் கொண்டு லோட் ஆகிக் கொண்டிருந்தது.

சில நிமிட போராட்டத்திற்குப் பின், என் ரிசல்ட் திரையில் மின்னியது. நான் எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். மகிழ்ச்சியில் என்ன செய்கிறேன் என்று தெரியாமல் துள்ளிக் கொண்டிருந்தேன். அதற்கும் அதிக கோவில்களை ஒரே நாளில் சென்ற சவாலை முடித்த அம்மா வருவதற்கும் சரியாய் இருந்தது. ஒரு முத்தத்துடன் சிறிது விபூதியும் சேர்த்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அம்மா.

அதன் பிறகு ஆரம்பித்தது தொலைப்பேசி அத்தியாயம். பந்தியில் பாயாசம் இல்லாமல் போனதால் பகைத்துக் கொண்டு போன மாமாவும், கடந்த தீபாவளிக்கு பலகாரம் கம்மியாய் கொடுத்ததால் விரக்தியில் இருந்த அத்தையும் இன்ன பிற தூரத்து சொந்தங்களும் அழைத்து மதிப்பெண்ணை அறிந்து கொண்டும், வாழ்த்திக் கொண்டும் இருந்தனர். அவரவர் பிள்ளைகளுக்கு அறிவுரைக் கூற ஓர் எடுத்துக்காட்டு கிடைத்துவிட்டதில் அவர்களுக்கு ஆனந்தம் தான். சிலர் இப்படி மார்க் எடுக்கணும் என்றும், சிலர் இத விட அதிகமா எடுக்கணும் என்றும் தமக்குரிய வசனங்களை தயார் செய்ய சென்றுவிட்டனர் என்னை வாழ்த்திய கையோடு.

இதற்கிடையில் என்னை அழைத்திருந்த என் ஆசிரியரின் வாயிலாக நான் தான் பள்ளியில் முதல் மதிப்பெண் என்றும் அறிந்து கொண்டேன்.  நான் என் நண்பர்களின் மதிப்பெண்களை பார்க்க ஆரம்பித்தேன். ஒருவனின் மதிப்பெண்ணைப் பார்த்த உடன் அவனுக்கு கைப்பேசியில் அழைத்தேன். அது என் உயிர் நண்பன் சம்பத்.

சம்பத் எங்கள் வகுப்பிலேயே மிகச் சிறந்த புத்திசாலி.எங்கள் அனைவரையும் விட அதிக மதிப்பெண் பெறும் திறமையுள்ளவனும் கூட. ஆனால், புத்திசாலித்தனத்திற்கும் மதிப்பெண்களுக்கும் தான் சம்மந்தம் இல்லையே. நல்ல மதிப்பெண் தான் எனினும் பலரை விட குறைவான மதிப்பெண்களையே எடுத்திருந்தான். அதற்கு அந்த வருடம் ஏற்பட்டிருந்த உடல் உபாதைகளும் காரணம் தான்.  இருந்தாலும் , எல்லா தகுதிகளும் உடையவனுக்கு அவன் நினைத்தது கிடைக்காத போது ஏற்படும் வலி அவனுக்கும் இருக்கும் தானே.

அவன் அம்மா போனை எடுத்தார்.

"வாழ்த்துக்கள் லோகேஸ்! நீ தான் ஸ்கூல் பர்ஸ்ட் னு கேள்விப்பட்டேன். சம்பத் வாங்கிருந்தா கூட இவ்ளோ சந்தோசப்பட்டிருக்க மாட்டேன்.  ரொம்ப சந்தோஷம் டா. வீட்டுக்கு வா ! " என்றார் என்றும் மாறாத புன்னகையுடன்.

"தேங்க்ஸ் மா, சம்பத் என்ன பண்ணிட்டிருக்கான் ?" என்றேன் அவர் கூறிய ஆசியில் கண்ணீர் ததும்ப.

"அவன் இருக்கான், இரு ! அப்பா பேசறாரு"

"டேய் லோகேஸ், சூப்பர் டா. நீ வருவன்னு எனக்கு நல்லா தெரியும். ரொம்ப சந்தோஷமா இருக்கு. வீட்ல எல்லாரும் என்ன சொன்னங்க?" என்றார் அவருடைய வழக்கமான 1௦௦௦ வாட்ஸ் வாய்சில்.

"தேங்க்ஸ் பா, எல்லாருக்கும் சந்தோஷம் தான். சம்பத் எங்க அவன்கூட நா பேசவே இல்ல"

"இரு அம்மாகிட்டயே தர்றேன் " என்றார். எனக்கோ மிகப் பெரிய குழப்பம் 'ஏன் அவன்கிட்ட போனே தரமாட்டேங்கிறாங்க' என்று.

"சொல்லு டா" என்றார் அவன் அம்மா.

"சம்பத் எங்கம்மா ?"

"அவனா அவன் அழுதுட்டு இருக்கான் டா" என்றார் முதன்முதலில் தன் குரலில் கவலையோடு.

"அம்மா, அவன் எடுத்துருக்கறது நல்ல மார்க் தான் மா.  எதுக்கு அழுதுட்டு இருக்கான். நீங்க திட்டி விட்டுட்டிங்களா ?"

"நாங்களும் இது நல்ல மார்க் தான்னு சொல்லி பாத்துட்டோம். அவனா உக்காந்து அழுதுட்ருக்கான். எங்க கூட பேசவும் மாட்டேங்கிறான்"

"அவன்கிட்ட போன் குடுங்க மா. நான் பேசறேன்"

"அவன் பேசுவானா னு தெரியலையே டா. இரு குடுத்து பாக்கறேன்"

"சம்பத், இந்தா லோகேஸ் பேசறான். பேசு டா. அவன்கிட்ட " என்று அவனிடம் சொல்லும் குரல் கேட்டது. பதிலுக்கு அவன் அழும் சத்தம் மட்டும் தான் கேட்டது. நான் அவனை நேரில் பார்த்து அவனுடன் இருக்க வேண்டிய சமயம் என்று புரிந்தது. அதற்கு முன் இருந்த விடுமுறையில் அவன் வீட்டில் நான் கழித்த நேரம் தான் அதிகம், அந்த நாட்களை விட அன்று நான் அவனுடன் இருப்பது தான் முக்கியம் என்பதை உணர்ந்தேன்.

அவன் அம்மாவிடம் நான் அவர்கள் வீட்டிற்கு நேரே வருவதாக கூறி போனை வைத்தேன். அதற்குள் எங்கள் வீட்டில் குல தெய்வ கோவிலுக்கு செல்ல தீர்மானித்துவிட்டனர். என் அண்ணனும் அம்மாவும் சேர்ந்து செய்த சதி வேலை தான் என்று புரிந்தது. அந்த சதிக்கு என் அப்பாவும் வீழ்ந்து விட்டார் என்றும் புரிந்தது. நானும் எதிர்த்து பேச முடியாத நிலையில் கோவிலுக்கு சென்று விட்டு சம்பத் வீட்டிற்கு செல்ல தீர்மானித்தேன்.

அதே போல் கோவிலுக்கு சென்றுவிட்டு வரும் வழியில் இறங்கி அவன் வீட்டிற்கு சென்றேன். அவன் அப்பா இல்லை. சமையற்கட்டில் அம்மா மட்டும் இருந்தார்.

என்னைப் பார்த்தவுடன் புன்னகை பூத்தவாறு "வாடா ஹீரோ ! எங்க ஸ்வீட் எல்லாம் ஒண்ணும் இல்லையா?" என்றார்.

"கண்டிப்பா வாங்கி தர்றேன் மா, சம்பத் எங்க? அவன பாக்கணும்" என்றேன்.

"அங்க கட்டில்ல தூங்கிட்டு இருக்கான் பாரு " 

கட்டிலில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தான். அருகில் சென்று அவனை புரட்டிப் போட்டேன். அழுது வீங்கிய கண்களை திறந்து என்னைப் பார்த்தான்.

"டேய், ஏன் டா இப்டி பண்ணிட்ருக்க ? நீ வாங்கிருக்கறது நல்ல மார்க் தான் டா" என்றேன்.

உடனே அவன் கண்களில் நீர் பொல பொலவென்று ஊற்றெடுக்க ஆரம்பித்தது. "நான் இன்னும் நல்லா பண்ணிருக்கலாம் டா. எங்க வீட்ல ஏமாத்திட்டேன் டா " என்று அழ ஆரம்பித்தான்.

'ஐயையோ ! நான் தான் தேவ இல்லாம அவனுக்கு மறுபடியும் ஞாபகப்படுத்திட்டேனோ ' என்று என்னையே திட்டிக் கொண்டேன்.

அவனை சமாதானப் படுத்தும் போது உள்ளே அவன் அம்மாவின் குரல் கேட்டது. உறவினர் யாருடனோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார். "சம்பத், அவன் ப்ரெண்டு கூட பேசிட்டு இருக்கான். அவன் கூட இருக்கற பையன் தான் ஸ்கூல் பர்ஸ்ட். ரொம்ப நல்ல பையன். எங்களுக்கு அவனும் சம்பத் மாதிரி தான்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  எனக்கு கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது.

என்னென்னவோ சொல்லி அவன் அழுகையை நிறுத்துவதற்கும் அவன் அப்பா வருவதற்கும் சரியாய் இருந்தது. அதற்குள் சில நண்பர்களும் வந்துவிட்டனர்.  அவன் அப்பா கையில் ஒரு பாக்ஸ் இருந்தது.

"சம்பத், நீ அழுதது போதும். லோகேஸ் ஸ்கூல் பர்ஸ்ட் வந்துருக்கான் அத நாம கொண்டாட போறோம்" என்று கூறிக்கொண்டே உள்ளே இருந்து ஓர் கேக்கை  எடுத்து வெளியே வைத்தார்.

நண்பர்கள் அனைவரும் கேக் வைத்திருந்த டேபிளை சுற்றிக் கூடினர். சம்பத்தும் கண்ணைத் துடைத்துக் கொண்டு என் அருகில் வந்து நின்றான். நான் என் வீட்டில் இருப்பதாக உணர்ந்தேன்.

கேக் வெட்டுவதற்காக பிளாஸ்டிக் கத்தியை என் கையில் கொடுத்தார் சம்பத்தின் அப்பா. மகிழ்ச்சியில் கை நடுங்கியது.  அருகிலிருந்த சம்பத்தின் கையையும் என் கையோடு சேர்த்து வைத்து கேக்கை வெட்டினேன். அனைவரும் எனக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர், நான் சம்பத்திற்கு கேக் ஊட்டியதில் மகிழ்ச்சியடைந்தேன்.

அன்று நான் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை விட இன்றளவும் என் ஞாபகத்தில் இருப்பது இச்சம்பவம் தான். என் இத்தனை வருட வாழ்க்கை தேர்வில், இவ்வளவு அருமையான மனிதர்களை பெற்றதில் நான் 'பாஸ்'. இதுவே என் உண்மையான தேர்வு முடிவு.  

0 comments:

Post a Comment