ஒரு மரணச் செய்தி புதைந்து கிடைக்கும் எத்தனையோ நினைவுகளை எழுப்பி விடுகிறது.


இன்று நெருங்கிய நண்பன் ஒருவனின் தந்தை இறந்த செய்தி வந்தது. கல்லூரி முடிந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள். இந்த 10 ஆண்டுகளில் நானும் என் நண்பனும் சந்தித்துக் கொண்டதே சில முறை தான். அவனது தந்தையை கல்லூரி படிக்கும்போது இரண்டொரு முறை சந்தித்திருக்கிறேன். கடைசியாக அவனது திருமண விழாவில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது. அப்போது கூட அவருக்கு என் பெயர் ஞாபகம் இருந்திருக்குமா என்றால் தெரியவில்லை. இருந்தும் இந்த செய்தி கேட்டதிலிருந்து ஒரு வித கனமான உணர்வு. நண்பனின் தந்தை என்பதையும் தாண்டிய ஒரு சோகம். என்னவென்று யோசித்துப் பார்க்கையில், அவருக்கும் எனக்குமான நடந்த உரையாடல்கள் சிலவே எனினும் ஆழமான நினைவுகள் உண்டு. மனிதர்கள் தான் எவ்வளவு எளிதில் நினைவுகளை உருவாக்கிவிடுகிறார்கள்.


நாங்கள் மூன்றாம் வருட செமஸ்டர் விடுமுறையில் ட்ரெய்னிங் என்கிற சாக்கில் மேட்டூர் என் நண்பனின் வீட்டில் தங்கியிருந்தோம். பர்மிசன் கிடைக்கவில்லை என்று போக்கு காட்டிவிட்டு ஓகேனக்கல் அருவி, மேட்டூர் அணை, திரைப்படம் என 5 நாட்களை கடத்திவிட்டு ஊர் கிளம்ப ஆயத்தமானோம். அங்கிருந்த நாட்கள் அனைத்தும் நல்ல தீனி. கிளம்புகிற நாள் என்று சிறப்பு கவனிப்பு. மட்டன், சிக்கன் என விறுவிறுப்பான விருந்து. "யப்பா, போயிட்டு வாங்க டா !" என அவர்களே நினைத்திருக்க கூடும் என்று நினைத்துக் கொண்டேன். வீடு திரும்பி பையைப் பார்த்த எனக்கு ஒரு ஆச்சர்யம். அவனது தந்தை எங்களுக்கே தெரியாமல் எங்கள் பைகளில் எல்லாம் வாழ்த்துச் செய்தியுடன் ஒரு 100 ரூபாய் நோட்டும் வைத்திருந்தார். அப்போது 100 ருபாய் எல்லாம் பெரிய தொகை. கையில் கிடைத்தாலே 10 பேர் சேர்ந்து சென்று டீ குடிக்க சரியாக இருக்கும். ஆனால், அதை செலவு செய்ய மனம் வரவில்லை. அந்த வாழ்த்துச் செய்தியும் 100 ருபாய் நோட்டும் எனக்கு பர்சனலாக இருந்தது. இன்றும் இருக்கிறது. பத்திரமாய்!




இன்னொரு முறை நாங்கள் சந்தித்துக் கொண்டது கல்லூரியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில். அட்டெண்டன்ஸ் ஒழுங்காக இல்லாத மாணவர்களின் பெற்றோர் கண்டிப்பாக வந்து கையெழுத்திட வேண்டும் என்கிற அடிப்படையில் அவன் வீட்டில் இருந்தும் என் வீட்டில் இருந்தும் வந்திருந்தனர். ஆசிரியர்கள் கழுவி ஊற்றும் சம்பிரதாயங்களுக்கு பிறகு அப்பா அம்மாவை பஸ் ஏற்றிவிடும் வழியில் அவரை சந்தித்தேன். "யாரு அப்பா அம்மாவா?  உங்க பையன் ரொம்ப நல்ல தெறமசாளி. பெரிய ஆளா வருவான்.  உள்ள சும்மா ஏதாவது சொல்லிட்டு இருப்பாங்க. என்ன தெரியும் நம்ம பசங்கள பத்தி" என்றார் சிரித்துக் கொண்டே. வீட்டிற்கு லெட்டர் வந்த கட்டாயத்தால்  வேறு வழியின்றி அந்த சந்திப்பிற்கு வந்த என் பெற்றோரிடம் அந்த சர்டிபிகேட் ஒரு நல்ல நகை முரண். அவர் நிஜமாக தான் அப்படி நினைத்து சொன்னாரா என தெரியவில்லை எனினும் எனக்கு அது நல்ல பூஸ்ட்.


People who make effort to keep people happy will always be remembered.


மனிதர்கள் தான் எவ்வளவு எளிதாக நினைவுகளை உருவாக்கிவிடுகிறார்கள்.