முதன்முதலில் நான் அவனைப் பற்றி அறிந்து கொண்டது ஒரு மருத்துவமனை காவலாளி அக்காவின் சைகையின் வாயிலாக தான். நான் அந்த சைகையில் என்ன புரிந்து கொண்டேன் என்று எனக்கே தெரியாத தருணம். அது அவன் என்றே தெரியாத ஒரு தருணம். அங்கு செல்வதற்கு முன் நான் அங்கு சென்ற கதையை பேசுவோம்.
ஜூலை 28, 2026. காலை 6 மணி.
நானும் நிருவும் அந்த பிரசவ வார்டின் முன் இருந்த காத்திருப்பு அறைக்கு வந்து சேர்ந்தோம். முதல் நாள் இரவு 10 மணியில் இருந்து காத்துக் கொண்டிருந்த அம்மா, தூக்கமின்றி சோர்வாக உட்கார்ந்து கொண்டிருந்தார். ஜெய்ஸ்ரீயை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றதில் இருந்து அம்மாவிற்கு உறக்கமில்லை. திருத்தம். அவள் கர்ப்பம் உறுதியான நாளில் இருந்தே அம்மாவிற்கு உறக்கமில்லை. சில நாட்கள் 'வரப்போற பேரனோ பேத்தியோ நல்லா பாத்துக்கணும். எனக்கு அத விட என்ன பெரிய வேல இருக்கப் போகுது இனிமேல்' என்ற பூரிப்பில். சில நாட்கள் 'எப்டியாவது கொழந்த நல்லபடியா பொறக்கணும் முருகா' என்ற பக்தி கலந்த பயத்தில். ஜெய் ஸ்ரீயின் கணவர் தாமோவும் அங்கே இருந்தார். அப்பாவும் எங்களுக்கு முன்னரே அங்கு வந்து சேர்ந்திருந்தார்.
ஒருவர் மாற்றி ஒருவர் சிற்றுண்டி உண்ண செல்வது தேநீர் குடிக்க செல்வது என காத்திருப்புனூடே எங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டோம். சுமார் 9 மணி அளவில் தாமோ உள்ளே அழைக்கப்பட்டார் 'வந்தா டெலிவரி முடியற வரைக்கும் அவங்க கூட தான் இருக்கணும். சாப்டுட்டு வந்துருங்க' என்று. உள்ளே செல்லும்போது 'அப்பப்ப வந்து எப்டிருக்குனு சொல்லிட்டு போங்க' என்ற அன்பான நிபந்தனையோடு அவரை அனுப்பி வைத்தோம். எப்படியும் குழந்தை பிறக்க மதியம் ஆகி விடும் என்கிற எதிர்பார்ப்போடு நாங்களும் காத்திருக்க துவங்கினோம்.
10 மணி. 'ஜெய்ஸ்ரீ அட்டெண்டர்!' என்று ஒரு குரல். நாங்கள் அனைவரும் அக்கணமே ஆஜரானோம். 'மேம் பேசணும் னு சொன்னாங்க!' என்று டாக்டரை நோக்கி கை காட்டியது அக்குரல்.
'ஜெய்ஸ்ரீ நல்லா இருக்காங்க. கொழந்தைக்கு ஹார்ட்பீட் செக் பண்ணோம் அதுவும் நல்லா இருக்கு. பெயின் இப்போ ஸ்டார்ட் ஆயிருக்கு. ஆனா தலை இன்னும் திரும்பல. இப்போதைக்கு நார்மல் ஆகுமானு சொல்ல முடியாது ஆனா இன்னும் ஒரு 4 ஹௌர்ஸ் வெயிட் பண்ணி பாக்கலாம். வேற எதுவும் டவுட்ஸ் இருக்கா?' என்று கனிவான குரலில் கேட்டார் டாக்டர். நார்மல் டெலிவரி டவுட் என அவர் சொன்னதில் சற்றே கவலை இருந்தாலும், தாயும் சேயும் நலம் என அவர் கூறிய அப்டேட்டில் அதுவும் அவர்களே அழைத்துக் கூறியதில் எங்களுக்கு திருப்தியே. 'நார்மலோ சிசேரியனோ ரெண்டு பேரும் நல்லபடியா வெளிய வந்துரணும் முருகா!'
மீண்டும் காத்திருக்க துவங்கினோம். சுமார் 11 மணியளவில் தாமோ வெளியே வந்து சென்றார். இன்னும் அதே நிலைமை தான். 'இப்போ வலி கொஞ்சம் இருக்கு. டாக்டர் 2 மணி வரைக்கும் பாக்கலாம்னு சொல்லிருக்காங்க'.
அவள் சிறு வயதிலிருந்தே அவ்வளவாக வலி தாங்கமாட்டாள். இந்த வலியை எப்படி தாங்குவாள் என யோசிக்க ஆரம்பித்தேன். அதற்கு முன் அவள் வலியை பற்றி நான் அவ்வளவாக சட்டை செய்ததில்லை. அட்லீஸ்ட் அவளுக்கு தெரிந்த மாதிரி சட்டை செய்ததில்லை. அவளுக்கும் ஏன் எனக்கும் தெரியாமலே கூட அவள் வலி பற்றி கவலை கொண்டிருக்கிறேன். நாங்கள் சிறு வயதில் WWE எனப்படும் மல்யுத்தம் விளையாடுவதுண்டு. அதாவது நான் எப்போதும் அடிப்பவனாக அவள் அடிவாங்குபவளாக. பொதுவாக வலிக்காத மாதிரி அடித்து ஸ்டைல் செய்து கொள்வதில் தான் எங்கள் ஆட்டம் இருக்கும். ஒரு முறை நான் ஓடி சென்று இடிக்க அவள் குனிந்து மிஸ் ஆகவேண்டும்.ஆனால், அவள் குனிய மிஸ் செய்ததால் ஒரு இடியில் அவளை தள்ளினேன். சிறு காயங்களுடன் ஒரு பெரிய அழுகையும் வீறிட்டது. 'நீ குனிஞ்சுருக்கணும் ல' என்று நான் அடித்த பழியை அவள் அடி வாங்கிய பழியாக மாற்ற முயற்சித்தேன். அவளுக்கு அதைக் கேட்டுக்கொள்ள கூட முடியாத அளவுக்கு வலி. கைத்தாங்கலாக வீட்டிற்கு கூடி செல்லும்போது 'நம்ம மாட்டிக்குவோமே' என்கிற பயத்துடன் 'அய்யோ, அவளுக்கு ரொம்ப வலிக்குது போலயே பாவம்' என்கிற கவலையும் இருந்தது. இது போன்று பல முறை நான் கவலை கொண்டதுண்டு. ஆனால், வெளிக்காட்டிக்கொண்டதில்லை. அது போல் இம்முறையும்.
மணி 12 ஆயிற்று.
.
.
.
மணி 1.
.
.
மணி 1.30.
எவ்வித அப்டேட்டும் இல்லை. டாக்டரும் வந்ததாக தெரியவில்லை. தாமோவும் வெளிய வரவில்லை அதற்கு பிறகு.
அன்றைய தினம் இவளையும் சேர்த்து நான்கு பிரசவம். இவளைத் தவிர மீதம் இருந்த மூவர்க்கும் அடுத்தடுத்து டெலிவரி ஆனது. அவரவர் கணவர்கள் வெளியே வந்து செய்தியை சொல்லும்போது அவர்களின் குடும்பங்கள் குதித்து கொண்டாடின ஆனந்த கண்ணீரோடு. அந்த கணவர்களோ மிக சாதாரணமாக அந்த செய்தியை சொல்லிவிட்டு பெரிதாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தியதாக தெரியவில்லை. அது எனக்கு ஆச்சரியமாகவே இல்லை. ஆண்கள் அப்படித்தானே. எட்டிப் பார்க்கும்போது யாராவது இருந்தால் ஒளிந்து கொள்ளும் கண்ணீருக்கு சொந்தக்காரர்கள். இதையெல்லாம் பார்க்க சந்தோஷமாக தான் இருந்தது. ஆனால், ஒப்பீடு செய்தே பழகிப் போன நம் மனம் 'அவகூட போன எல்லாரும் வந்துட்டாங்க, அவ மட்டும் வரலையே' என கவலை கொள்ள ஆரம்பித்தது. 'டாக்டர் தான் 2 மணி வரைக்கும் டைம் சொல்லிருக்காங்களே' என்று சமாதானப் படுத்திக்கொள்ள முயன்றும் மனம் ஒப்பவில்லை. அம்மாவின் பயம் அதிகரிக்க ஆரம்பித்தது. கூடவே அழுகையும்.
அம்மா அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் உட்கார்ந்து கொண்டிருந்தார். நிரு ஏதோ ஒரு மந்திரத்தை பக்தியுடன் படித்துக் கொண்டிருந்தார். அப்பாவும் ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்திருந்தார். என்னால் உட்கார முடியவில்லை. 'இவ்ளோ நேரமா ஏதும் அப்டேட் இல்லைனா கண்டிப்பா டெலிவெரி போய்ட்ருக்கு னு நினைக்கறேன்'. இதை உறுதிப்படுத்திக்கொள்ள சரியான ஒருவர் வேண்டும். அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு நர்சிடம் 'சிஸ்டர், ஜெய்ஸ்ரீ பேஷண்ட் எப்டி இருக்காங்க னு கேட்டு சொல்றிங்களா?'. கேள்வியை முழுதாக உள்வாங்கியதாக கூட தெரியவில்லை 'மேம் வந்து பாத்துட்டு சொல்வாங்க'. என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், என் ஒப்புதலுக்கு காத்திருக்க அவர்களுக்கு நேரமில்லை.
என்னால் இருப்பு கொள்ள முடியவில்லை. பிரசவ வார்டு கண்ணாடி கதவிற்கு அப்பால் ஏதேனும் நடமாட்டம் தெரிகிறதா என்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். 2 மணி தாண்டியிருக்கும். உணவு இடைவேளை முடித்து வந்த அந்த காவலாளி அக்கா கண்ணாடி கதவிற்கு அருகில் இருந்த அவர் சீட்டில் அமர்ந்தார்.
அவரிடம் கேட்டுவிட முடிவு செய்து அருகில் சென்றேன். இடைவெளி விட்டால் மீண்டும் ஏதாவது சொல்லி காத்திருக்க சொல்வார்களோ என்ற அச்சத்தில் மூச்சு விடாமல் நான் கேட்க சொல்ல நினைத்ததை கொட்டினேன்.
'அக்கா, ஜெய்ஸ்ரீ பேஷண்ட் நேத்து நைட் இருந்து உள்ள இருக்காங்க. அவங்க ஹஸ்பண்ட் கடைசியா 3 மணி நேரத்துக்கு முன்னாடி வந்துட்டு போனார் அதுக்கு அப்புறம் வரல. டாக்டரும் அதுக்கு அப்புறம் வரல. சிஸ்டர் கேட்டாலும் ஏதும் சொல்லல. நீங்க அப்டேட் மட்டும் கேட்டு சொல்றிங்களா? எப்டி இருக்காங்க னு சொன்னா கூட போதும்'
'ஒகே, நீங்க இருங்க. நான் அவங்க ஹஸ்பண்ட் வர சொல்றேன் முடிஞ்சா. இல்லைனா அப்டேட் கேட்டு சொல்றேன்'
எனக்கு அவர் சொன்ன வார்த்தைகள் ஏதோ ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது.
மேலும் ஒரு 10 நிமிடம். அந்த அக்கா உள்ளே நடமாடிக் கொண்டிருந்தார். கதவருகில் வந்து அவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். மீண்டும் சென்று கேட்டால் அவரை தொந்தரவு செய்வதாக இருக்குமா என்ற குழப்பத்தில். என்னை ஓரிரு முறை பார்த்தும் பார்க்காத மாதிரியும் திரும்பிக் கொண்ட அந்த அக்கா. நான் அவரையே வெறிக்க வெறிக்க பார்ப்பதை உணர்ந்து 'அவங்களே 10 நிமிஷத்துல வந்துருவாங்க' என்றார்.
எனக்கு அது அவ்வளவாக புரியவில்லை. அவங்க னா யாரு தாமோவா இல்ல டாக்டரா எனும் குழப்பத்தில். 'அவங்களே வந்துருவாங்களா?' என்றேன். என் குழப்பத்தை அவர் உணர்ந்திருக்கக் கூடும்.
மெதுவாக 'பாப்பாவோட' என்றார் சிரித்துக் கொண்டே. வார்த்தை கேட்கவில்லை. அவர் சைகையும் வாய் அசைவும் தன் எனக்கு அவனை அறிமுகப்படுத்தியது. அவனா அவளா என்று தெரியாத தருணத்தில்.
என்னால் நான் என்ன மனநிலையில் இருந்தேன் என்று கூட என்னால் உணர முடியவில்லை. 'என்ன சொன்னாங்க?' என்று மற்ற அனைவரும் கேட்க 'அவங்களே வந்துருவாங்க னு சொல்றாங்க. உக்காருங்க!' என்றேன். 'யாரு தாமோ வா?' எனறு கேட்டுக் கொண்டிருக்கவே, அவர் அந்த கண்ணாடிக் கதவின் வழியாக வந்து கொண்டிருந்தார்.
'பேபி பாய்!' என்றார் எவ்வித ஆர்பாட்டமுமின்றி. (அவர் உள்ளே கதறி அழுதது குறித்து பின்னர் அறிந்தேன்) நானும் அம்மாவும் அவரை ஆரத் தழுவிக்கொண்டோம். ஜெய்ஸ்ரீயும் அவனும் நலம் என அறிந்துக் கொண்ட பின்னர் தான் நிம்மதி. கூடவே ஆனந்தமும்.
மீண்டும் ஒரு 15 நிமிடம் கழித்து அவனை அழைத்து வந்தனர். அவனை எட்டிப் பார்க்க முனைந்த போது என் கண்கள் மங்கலாக தெரிந்தன. கண்கள் சற்றே குளமாகியிருந்தன போலும். சில வினாடிகளில் குளம் வற்றியது. அவன் முகம் ஒரு துளிர்த்த பூவை போல் என் கண்களில். பொதுவாக எனக்கு குழந்தைகளை பார்க்கும்போது முகம் இப்படி இருக்கு அப்படி இருக்கு என்று சொல்ல தெரியாது. ஆனால், இவனைப் பார்த்த உடன் எனக்கு தோன்றியது, ஜெய்ஸ்ரீ போல் சிரித்த முகம். ஆம், அவளுக்கு சிறு வயதிலிருந்தே அவ்வளவு சிரித்த அழகான முகம். அதில் நானே பல முறை அழுகையைக் கொண்டு வந்திருக்கிறேன். சில முறை விளையாட்டால், சில முறை என்னால் நிகழ்ந்த ஏமாற்றங்களால்.
நான் அவளை விட 2 வயது மூத்தவன். ஆனால், ஒரு நாளும் நான் அப்படி நடந்து கொண்டதாக எனக்கு ஞாபகமில்லை. ஒரு முறை எங்கள் ஊர் திருவிழா அன்று அனைவரும் கோவிலுக்கு சென்றிருந்த சமயம். நிறைய கடைகள் இருந்தன. அவளிடம் விளையாட முடிவு செய்தேன். 'உனக்கு பலூன் வாங்கி தரேன் வா' என்று கூட்டிச் சென்றேன். நாங்கள் இருந்த இடத்திற்கும் பலூன் கடைக்கும் ஒரு 150 மீட்டர் தொலைவு இருக்கும். சென்று கொண்டிருக்கும்போது 'உனக்கு என்ன பலூன் வேணும்னாலும் வாங்கிக்கோ. ஹீலியம் பலூன் வேணுமா ஹார்ட் போட்டது? அதுவும் இன்னொன்னு கூட வாங்கிக்கோ' என்று ஆசை வார்த்தைகள் கூறிக் கொண்டே இருந்தேன். அவளும் ஆசையாக 'அது வேணும் இதுவும் வேணும்' என்றாள். சரியாக பலூன் கடைக்கு அருகில் சென்று 'இதெல்லாம் உனக்கு வாங்கி தரணும்னு ஆசையா தான் இருக்கு. ஆனா, என்கிட்டே காசு இல்லையே' என்றேன். அவள் அழுது கொண்டே அம்மாவிடம் ஓடினாள். நான் வெடித்துச் சிரித்தேன். அப்போது எனக்கு உரைக்கவில்லை அவள் அடைந்த ஏமாற்றம். எப்போதும் உரைக்கவில்லை என்று தான் நினைக்கிறேன். இப்படி அவளை பல முறை ஏமாற்றத்திற்கு ஆளாக்கி உள்ளேன். ஆனால், அவள் ஒரு போதும் என்னை நம்பாமல் இருந்தது இல்லை. அப்போதும் இப்போதும். அதை எண்ணுகையில் தான் கூச்சம் தலைக்கேறுகிறது. இப்போது பொறுப்பும்.
அவனிடம் அப்படியெல்லாம் பண்ணி விட முடியாது. நான் பண்ணவும் மாட்டேன். அவனுக்கு 'எவ்வி' என்று பெயர் சூட்டியுள்ளோம். ஆற்றில் ஓடும் நீரை மேட்டுநிலங்களுக்குப் பாய்ச்ச ஏற்றத்தைப் பயன்படுத்துவர். அந்த ஏற்றத்தைக் குறிக்கும் சொல் எவ்வி. என்னைப் பொறுத்தவரையில் இவ்வுலகில் உள்ள அன்பையும் சந்தோசங்களையும் இக்குடும்பத்தில் பாய்ச்ச வந்தவன் இந்த எவ்வி.
ஜெய்ஸ்ரீ அவனைப் போல் இருக்கையில் நானும் சிறுவன் தான். எனக்கு பெரிதாக ஞாபகம் எதுவும் இல்லை. ஆனால், ஜெய்ஸ்ரீ யின் காதுகுத்தும் நிகழ்வில் எடுத்த புகைப்படத்தில் அழுகையுடன் இருப்பாள். இன்று அவன் அழும்போது அதே தான் இது. இவன் தொட்டில் அருகே அமர்ந்து நான் உண்ணும்போது நான் ஜெய்ஸ்ரீ தொட்டில் அருகே அமர்ந்து சாப்பிடும் ஒரு புகைப்படம் நினைவிற்கு வருகிறது. இந்த நினைவுகள் வரும் வேளையில் எனக்கு தோன்றுவது ஒன்று தான். அவளுக்கு நான் செய்ய மிஸ் செய்த அனைத்தும் இவனுக்கு மிஸ் ஆகாமல் கிடைக்க வேண்டும்.
பொதுவாக சிறு குழந்தைகள் என்னை மாமா என்று அழைப்பதை நான் ஒரு போதும் விரும்பியதில்லை. முடிந்த வரை என்ன அண்ணா னு கூப்டு, லோகேஸ் னு கூப்டு என்று சொல்லி விடுவேன். இவனுக்கு அப்படியில்லை. இவனுக்கு எப்படி வேண்டுமோ அப்படி என்னைக் கூப்பிட்டுக் கொள்ளட்டும்.
ஆனால், அன்பின் எவ்வி நீ என்னை மாமா என்று முதல் முறை அழைக்கும் நாளுக்காக நான் வெகு ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!








