Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

முதன்முதலில் நான் அவனைப் பற்றி அறிந்து கொண்டது ஒரு மருத்துவமனை காவலாளி அக்காவின் சைகையின் வாயிலாக தான். நான் அந்த சைகையில் என்ன புரிந்து கொண்டேன் என்று எனக்கே தெரியாத தருணம். அது அவன் என்றே தெரியாத ஒரு தருணம். அங்கு செல்வதற்கு முன் நான் அங்கு சென்ற கதையை பேசுவோம்.


ஜூலை 28, 2026. காலை 6 மணி.


நானும் நிருவும் அந்த பிரசவ வார்டின் முன் இருந்த காத்திருப்பு அறைக்கு வந்து சேர்ந்தோம். முதல் நாள் இரவு 10 மணியில் இருந்து காத்துக் கொண்டிருந்த அம்மா, தூக்கமின்றி சோர்வாக உட்கார்ந்து கொண்டிருந்தார். ஜெய்ஸ்ரீயை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றதில் இருந்து அம்மாவிற்கு உறக்கமில்லை. திருத்தம். அவள் கர்ப்பம் உறுதியான நாளில் இருந்தே அம்மாவிற்கு உறக்கமில்லை. சில நாட்கள் 'வரப்போற பேரனோ பேத்தியோ நல்லா பாத்துக்கணும். எனக்கு அத விட என்ன பெரிய வேல இருக்கப் போகுது இனிமேல்' என்ற பூரிப்பில். சில நாட்கள் 'எப்டியாவது கொழந்த நல்லபடியா பொறக்கணும் முருகா' என்ற பக்தி கலந்த பயத்தில். ஜெய் ஸ்ரீயின் கணவர் தாமோவும் அங்கே இருந்தார். அப்பாவும் எங்களுக்கு முன்னரே அங்கு வந்து சேர்ந்திருந்தார்.


ஒருவர் மாற்றி ஒருவர் சிற்றுண்டி உண்ண செல்வது தேநீர் குடிக்க செல்வது என காத்திருப்புனூடே எங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டோம். சுமார் 9 மணி அளவில் தாமோ உள்ளே அழைக்கப்பட்டார் 'வந்தா டெலிவரி முடியற வரைக்கும் அவங்க கூட தான் இருக்கணும். சாப்டுட்டு வந்துருங்க' என்று. உள்ளே செல்லும்போது 'அப்பப்ப வந்து எப்டிருக்குனு சொல்லிட்டு போங்க' என்ற அன்பான நிபந்தனையோடு அவரை அனுப்பி வைத்தோம். எப்படியும் குழந்தை பிறக்க மதியம் ஆகி விடும் என்கிற எதிர்பார்ப்போடு நாங்களும் காத்திருக்க துவங்கினோம்.


10 மணி. 'ஜெய்ஸ்ரீ அட்டெண்டர்!' என்று ஒரு குரல். நாங்கள் அனைவரும் அக்கணமே ஆஜரானோம். 'மேம் பேசணும் னு சொன்னாங்க!' என்று டாக்டரை நோக்கி கை காட்டியது அக்குரல்.


'ஜெய்ஸ்ரீ நல்லா இருக்காங்க. கொழந்தைக்கு ஹார்ட்பீட் செக் பண்ணோம் அதுவும் நல்லா இருக்கு. பெயின் இப்போ ஸ்டார்ட் ஆயிருக்கு. ஆனா தலை இன்னும் திரும்பல. இப்போதைக்கு நார்மல் ஆகுமானு சொல்ல முடியாது ஆனா இன்னும் ஒரு 4 ஹௌர்ஸ்  வெயிட் பண்ணி பாக்கலாம். வேற எதுவும் டவுட்ஸ் இருக்கா?' என்று கனிவான குரலில் கேட்டார் டாக்டர். நார்மல் டெலிவரி டவுட் என அவர் சொன்னதில் சற்றே கவலை இருந்தாலும், தாயும் சேயும் நலம் என அவர் கூறிய அப்டேட்டில் அதுவும் அவர்களே அழைத்துக் கூறியதில் எங்களுக்கு திருப்தியே. 'நார்மலோ சிசேரியனோ ரெண்டு பேரும் நல்லபடியா வெளிய வந்துரணும் முருகா!'


மீண்டும் காத்திருக்க துவங்கினோம். சுமார் 11 மணியளவில் தாமோ வெளியே வந்து சென்றார். இன்னும் அதே நிலைமை தான். 'இப்போ வலி கொஞ்சம் இருக்கு. டாக்டர் 2 மணி வரைக்கும் பாக்கலாம்னு சொல்லிருக்காங்க'.


அவள் சிறு வயதிலிருந்தே அவ்வளவாக வலி தாங்கமாட்டாள். இந்த வலியை எப்படி தாங்குவாள் என யோசிக்க ஆரம்பித்தேன். அதற்கு முன் அவள் வலியை பற்றி நான் அவ்வளவாக சட்டை செய்ததில்லை. அட்லீஸ்ட் அவளுக்கு தெரிந்த மாதிரி சட்டை செய்ததில்லை. அவளுக்கும் ஏன் எனக்கும் தெரியாமலே கூட அவள் வலி பற்றி கவலை கொண்டிருக்கிறேன். நாங்கள் சிறு வயதில் WWE எனப்படும் மல்யுத்தம் விளையாடுவதுண்டு. அதாவது நான் எப்போதும் அடிப்பவனாக அவள் அடிவாங்குபவளாக. பொதுவாக வலிக்காத மாதிரி அடித்து ஸ்டைல் செய்து கொள்வதில் தான் எங்கள் ஆட்டம் இருக்கும். ஒரு முறை நான் ஓடி சென்று இடிக்க அவள் குனிந்து மிஸ் ஆகவேண்டும்.ஆனால், அவள் குனிய மிஸ் செய்ததால் ஒரு இடியில் அவளை தள்ளினேன். சிறு காயங்களுடன் ஒரு பெரிய அழுகையும் வீறிட்டது. 'நீ குனிஞ்சுருக்கணும் ல' என்று நான் அடித்த பழியை அவள் அடி வாங்கிய பழியாக மாற்ற முயற்சித்தேன். அவளுக்கு அதைக் கேட்டுக்கொள்ள கூட முடியாத அளவுக்கு வலி. கைத்தாங்கலாக வீட்டிற்கு கூடி செல்லும்போது 'நம்ம மாட்டிக்குவோமே' என்கிற பயத்துடன் 'அய்யோ, அவளுக்கு ரொம்ப வலிக்குது போலயே பாவம்' என்கிற கவலையும் இருந்தது. இது போன்று பல முறை நான் கவலை கொண்டதுண்டு. ஆனால், வெளிக்காட்டிக்கொண்டதில்லை. அது போல் இம்முறையும்.  


மணி 12 ஆயிற்று.

.

.

.

மணி 1.

.

.

மணி 1.30.

எவ்வித அப்டேட்டும் இல்லை. டாக்டரும் வந்ததாக தெரியவில்லை. தாமோவும் வெளிய வரவில்லை அதற்கு பிறகு. 


அன்றைய தினம் இவளையும் சேர்த்து நான்கு பிரசவம். இவளைத் தவிர மீதம் இருந்த மூவர்க்கும் அடுத்தடுத்து டெலிவரி ஆனது. அவரவர் கணவர்கள் வெளியே வந்து செய்தியை சொல்லும்போது  அவர்களின் குடும்பங்கள் குதித்து கொண்டாடின ஆனந்த கண்ணீரோடு. அந்த கணவர்களோ மிக சாதாரணமாக அந்த செய்தியை சொல்லிவிட்டு பெரிதாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தியதாக தெரியவில்லை. அது எனக்கு ஆச்சரியமாகவே இல்லை. ஆண்கள் அப்படித்தானே. எட்டிப் பார்க்கும்போது யாராவது இருந்தால் ஒளிந்து கொள்ளும் கண்ணீருக்கு சொந்தக்காரர்கள். இதையெல்லாம் பார்க்க சந்தோஷமாக தான் இருந்தது. ஆனால், ஒப்பீடு செய்தே பழகிப் போன நம் மனம் 'அவகூட போன எல்லாரும் வந்துட்டாங்க, அவ மட்டும் வரலையே' என கவலை கொள்ள ஆரம்பித்தது. 'டாக்டர் தான் 2 மணி வரைக்கும் டைம் சொல்லிருக்காங்களே' என்று சமாதானப் படுத்திக்கொள்ள முயன்றும் மனம் ஒப்பவில்லை. அம்மாவின் பயம் அதிகரிக்க ஆரம்பித்தது. கூடவே அழுகையும்.


அம்மா அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் உட்கார்ந்து கொண்டிருந்தார். நிரு ஏதோ ஒரு மந்திரத்தை பக்தியுடன் படித்துக் கொண்டிருந்தார். அப்பாவும் ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்திருந்தார். என்னால் உட்கார முடியவில்லை. 'இவ்ளோ நேரமா ஏதும் அப்டேட் இல்லைனா கண்டிப்பா டெலிவெரி போய்ட்ருக்கு னு நினைக்கறேன்'. இதை உறுதிப்படுத்திக்கொள்ள சரியான ஒருவர் வேண்டும். அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு நர்சிடம் 'சிஸ்டர், ஜெய்ஸ்ரீ பேஷண்ட் எப்டி இருக்காங்க னு கேட்டு சொல்றிங்களா?'. கேள்வியை முழுதாக உள்வாங்கியதாக கூட தெரியவில்லை 'மேம் வந்து பாத்துட்டு சொல்வாங்க'. என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், என் ஒப்புதலுக்கு காத்திருக்க அவர்களுக்கு நேரமில்லை.


என்னால் இருப்பு கொள்ள முடியவில்லை. பிரசவ வார்டு கண்ணாடி கதவிற்கு அப்பால் ஏதேனும் நடமாட்டம் தெரிகிறதா என்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். 2 மணி தாண்டியிருக்கும். உணவு இடைவேளை முடித்து வந்த அந்த காவலாளி அக்கா கண்ணாடி கதவிற்கு அருகில் இருந்த அவர் சீட்டில் அமர்ந்தார்.


அவரிடம் கேட்டுவிட முடிவு செய்து அருகில் சென்றேன். இடைவெளி விட்டால் மீண்டும் ஏதாவது சொல்லி காத்திருக்க சொல்வார்களோ என்ற அச்சத்தில் மூச்சு விடாமல் நான் கேட்க சொல்ல நினைத்ததை கொட்டினேன்.


'அக்கா, ஜெய்ஸ்ரீ பேஷண்ட் நேத்து நைட் இருந்து உள்ள இருக்காங்க. அவங்க ஹஸ்பண்ட் கடைசியா 3 மணி நேரத்துக்கு முன்னாடி வந்துட்டு போனார் அதுக்கு அப்புறம் வரல. டாக்டரும் அதுக்கு அப்புறம் வரல. சிஸ்டர் கேட்டாலும் ஏதும் சொல்லல. நீங்க அப்டேட் மட்டும் கேட்டு சொல்றிங்களா? எப்டி இருக்காங்க னு சொன்னா கூட போதும்'


'ஒகே, நீங்க இருங்க.  நான் அவங்க ஹஸ்பண்ட் வர சொல்றேன் முடிஞ்சா. இல்லைனா அப்டேட் கேட்டு சொல்றேன்'


எனக்கு அவர் சொன்ன வார்த்தைகள் ஏதோ ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது.


மேலும் ஒரு 10 நிமிடம். அந்த அக்கா உள்ளே நடமாடிக் கொண்டிருந்தார். கதவருகில் வந்து அவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.  மீண்டும் சென்று கேட்டால் அவரை தொந்தரவு செய்வதாக இருக்குமா என்ற குழப்பத்தில். என்னை ஓரிரு முறை பார்த்தும் பார்க்காத மாதிரியும் திரும்பிக் கொண்ட அந்த அக்கா. நான் அவரையே வெறிக்க வெறிக்க பார்ப்பதை உணர்ந்து 'அவங்களே 10 நிமிஷத்துல வந்துருவாங்க' என்றார்.


எனக்கு அது அவ்வளவாக புரியவில்லை. அவங்க னா யாரு தாமோவா இல்ல டாக்டரா எனும் குழப்பத்தில். 'அவங்களே வந்துருவாங்களா?' என்றேன்.  என் குழப்பத்தை அவர் உணர்ந்திருக்கக் கூடும்.


மெதுவாக 'பாப்பாவோட' என்றார் சிரித்துக் கொண்டே. வார்த்தை கேட்கவில்லை. அவர் சைகையும் வாய் அசைவும் தன் எனக்கு அவனை அறிமுகப்படுத்தியது. அவனா அவளா என்று தெரியாத தருணத்தில்.


என்னால் நான் என்ன மனநிலையில் இருந்தேன் என்று கூட என்னால் உணர முடியவில்லை. 'என்ன சொன்னாங்க?' என்று மற்ற அனைவரும் கேட்க 'அவங்களே வந்துருவாங்க னு சொல்றாங்க. உக்காருங்க!' என்றேன். 'யாரு தாமோ வா?' எனறு கேட்டுக் கொண்டிருக்கவே, அவர் அந்த கண்ணாடிக் கதவின் வழியாக வந்து கொண்டிருந்தார்.


'பேபி பாய்!' என்றார் எவ்வித ஆர்பாட்டமுமின்றி. (அவர் உள்ளே கதறி அழுதது குறித்து பின்னர் அறிந்தேன்) நானும் அம்மாவும் அவரை ஆரத் தழுவிக்கொண்டோம். ஜெய்ஸ்ரீயும் அவனும் நலம் என அறிந்துக் கொண்ட பின்னர் தான் நிம்மதி. கூடவே ஆனந்தமும்.


மீண்டும் ஒரு 15 நிமிடம் கழித்து அவனை அழைத்து வந்தனர். அவனை எட்டிப் பார்க்க முனைந்த போது என் கண்கள் மங்கலாக தெரிந்தன. கண்கள் சற்றே குளமாகியிருந்தன போலும். சில வினாடிகளில் குளம் வற்றியது. அவன் முகம் ஒரு துளிர்த்த பூவை போல் என் கண்களில். பொதுவாக எனக்கு குழந்தைகளை பார்க்கும்போது முகம் இப்படி இருக்கு அப்படி இருக்கு என்று சொல்ல தெரியாது. ஆனால், இவனைப் பார்த்த உடன் எனக்கு தோன்றியது, ஜெய்ஸ்ரீ போல் சிரித்த முகம். ஆம், அவளுக்கு சிறு வயதிலிருந்தே அவ்வளவு சிரித்த அழகான முகம். அதில் நானே பல முறை அழுகையைக் கொண்டு வந்திருக்கிறேன்.  சில முறை விளையாட்டால், சில முறை என்னால் நிகழ்ந்த ஏமாற்றங்களால்.


நான் அவளை விட 2 வயது மூத்தவன். ஆனால், ஒரு நாளும் நான் அப்படி நடந்து கொண்டதாக எனக்கு ஞாபகமில்லை. ஒரு முறை எங்கள் ஊர் திருவிழா அன்று அனைவரும் கோவிலுக்கு சென்றிருந்த சமயம். நிறைய கடைகள் இருந்தன. அவளிடம் விளையாட முடிவு செய்தேன். 'உனக்கு பலூன் வாங்கி தரேன் வா' என்று கூட்டிச் சென்றேன். நாங்கள் இருந்த இடத்திற்கும் பலூன் கடைக்கும் ஒரு 150 மீட்டர் தொலைவு இருக்கும். சென்று கொண்டிருக்கும்போது 'உனக்கு என்ன பலூன் வேணும்னாலும் வாங்கிக்கோ. ஹீலியம் பலூன் வேணுமா ஹார்ட் போட்டது?  அதுவும் இன்னொன்னு கூட வாங்கிக்கோ' என்று ஆசை வார்த்தைகள் கூறிக் கொண்டே இருந்தேன். அவளும் ஆசையாக 'அது வேணும் இதுவும் வேணும்' என்றாள். சரியாக பலூன் கடைக்கு அருகில் சென்று 'இதெல்லாம் உனக்கு வாங்கி தரணும்னு ஆசையா தான் இருக்கு. ஆனா, என்கிட்டே காசு இல்லையே' என்றேன். அவள் அழுது கொண்டே அம்மாவிடம் ஓடினாள். நான் வெடித்துச் சிரித்தேன். அப்போது எனக்கு உரைக்கவில்லை அவள் அடைந்த ஏமாற்றம். எப்போதும் உரைக்கவில்லை என்று தான் நினைக்கிறேன். இப்படி அவளை பல முறை ஏமாற்றத்திற்கு ஆளாக்கி உள்ளேன். ஆனால், அவள் ஒரு போதும் என்னை நம்பாமல் இருந்தது இல்லை. அப்போதும் இப்போதும். அதை எண்ணுகையில் தான் கூச்சம் தலைக்கேறுகிறது. இப்போது பொறுப்பும்.


அவனிடம் அப்படியெல்லாம் பண்ணி விட முடியாது. நான் பண்ணவும் மாட்டேன். அவனுக்கு 'எவ்வி' என்று பெயர் சூட்டியுள்ளோம். ஆற்றில் ஓடும் நீரை மேட்டுநிலங்களுக்குப் பாய்ச்ச ஏற்றத்தைப் பயன்படுத்துவர். அந்த ஏற்றத்தைக் குறிக்கும் சொல் எவ்வி. என்னைப் பொறுத்தவரையில் இவ்வுலகில் உள்ள அன்பையும் சந்தோசங்களையும் இக்குடும்பத்தில் பாய்ச்ச வந்தவன் இந்த எவ்வி.


ஜெய்ஸ்ரீ அவனைப் போல் இருக்கையில் நானும் சிறுவன் தான். எனக்கு பெரிதாக ஞாபகம் எதுவும் இல்லை. ஆனால், ஜெய்ஸ்ரீ யின் காதுகுத்தும் நிகழ்வில் எடுத்த புகைப்படத்தில் அழுகையுடன் இருப்பாள். இன்று அவன் அழும்போது அதே தான் இது. இவன் தொட்டில் அருகே அமர்ந்து நான் உண்ணும்போது நான் ஜெய்ஸ்ரீ தொட்டில் அருகே அமர்ந்து சாப்பிடும் ஒரு புகைப்படம் நினைவிற்கு வருகிறது. இந்த நினைவுகள் வரும் வேளையில் எனக்கு தோன்றுவது ஒன்று தான். அவளுக்கு நான் செய்ய மிஸ் செய்த அனைத்தும் இவனுக்கு மிஸ் ஆகாமல் கிடைக்க வேண்டும்.


பொதுவாக சிறு குழந்தைகள் என்னை மாமா என்று அழைப்பதை நான் ஒரு போதும் விரும்பியதில்லை. முடிந்த வரை என்ன அண்ணா னு கூப்டு, லோகேஸ் னு கூப்டு என்று சொல்லி விடுவேன். இவனுக்கு அப்படியில்லை. இவனுக்கு எப்படி வேண்டுமோ அப்படி என்னைக் கூப்பிட்டுக் கொள்ளட்டும்.


ஆனால், அன்பின் எவ்வி நீ என்னை மாமா என்று முதல் முறை அழைக்கும் நாளுக்காக நான் வெகு ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!


ஒரு மரணச் செய்தி புதைந்து கிடைக்கும் எத்தனையோ நினைவுகளை எழுப்பி விடுகிறது.


இன்று நெருங்கிய நண்பன் ஒருவனின் தந்தை இறந்த செய்தி வந்தது. கல்லூரி முடிந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள். இந்த 10 ஆண்டுகளில் நானும் என் நண்பனும் சந்தித்துக் கொண்டதே சில முறை தான். அவனது தந்தையை கல்லூரி படிக்கும்போது இரண்டொரு முறை சந்தித்திருக்கிறேன். கடைசியாக அவனது திருமண விழாவில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது. அப்போது கூட அவருக்கு என் பெயர் ஞாபகம் இருந்திருக்குமா என்றால் தெரியவில்லை. இருந்தும் இந்த செய்தி கேட்டதிலிருந்து ஒரு வித கனமான உணர்வு. நண்பனின் தந்தை என்பதையும் தாண்டிய ஒரு சோகம். என்னவென்று யோசித்துப் பார்க்கையில், அவருக்கும் எனக்குமான நடந்த உரையாடல்கள் சிலவே எனினும் ஆழமான நினைவுகள் உண்டு. மனிதர்கள் தான் எவ்வளவு எளிதில் நினைவுகளை உருவாக்கிவிடுகிறார்கள்.


நாங்கள் மூன்றாம் வருட செமஸ்டர் விடுமுறையில் ட்ரெய்னிங் என்கிற சாக்கில் மேட்டூர் என் நண்பனின் வீட்டில் தங்கியிருந்தோம். பர்மிசன் கிடைக்கவில்லை என்று போக்கு காட்டிவிட்டு ஓகேனக்கல் அருவி, மேட்டூர் அணை, திரைப்படம் என 5 நாட்களை கடத்திவிட்டு ஊர் கிளம்ப ஆயத்தமானோம். அங்கிருந்த நாட்கள் அனைத்தும் நல்ல தீனி. கிளம்புகிற நாள் என்று சிறப்பு கவனிப்பு. மட்டன், சிக்கன் என விறுவிறுப்பான விருந்து. "யப்பா, போயிட்டு வாங்க டா !" என அவர்களே நினைத்திருக்க கூடும் என்று நினைத்துக் கொண்டேன். வீடு திரும்பி பையைப் பார்த்த எனக்கு ஒரு ஆச்சர்யம். அவனது தந்தை எங்களுக்கே தெரியாமல் எங்கள் பைகளில் எல்லாம் வாழ்த்துச் செய்தியுடன் ஒரு 100 ரூபாய் நோட்டும் வைத்திருந்தார். அப்போது 100 ருபாய் எல்லாம் பெரிய தொகை. கையில் கிடைத்தாலே 10 பேர் சேர்ந்து சென்று டீ குடிக்க சரியாக இருக்கும். ஆனால், அதை செலவு செய்ய மனம் வரவில்லை. அந்த வாழ்த்துச் செய்தியும் 100 ருபாய் நோட்டும் எனக்கு பர்சனலாக இருந்தது. இன்றும் இருக்கிறது. பத்திரமாய்!




இன்னொரு முறை நாங்கள் சந்தித்துக் கொண்டது கல்லூரியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில். அட்டெண்டன்ஸ் ஒழுங்காக இல்லாத மாணவர்களின் பெற்றோர் கண்டிப்பாக வந்து கையெழுத்திட வேண்டும் என்கிற அடிப்படையில் அவன் வீட்டில் இருந்தும் என் வீட்டில் இருந்தும் வந்திருந்தனர். ஆசிரியர்கள் கழுவி ஊற்றும் சம்பிரதாயங்களுக்கு பிறகு அப்பா அம்மாவை பஸ் ஏற்றிவிடும் வழியில் அவரை சந்தித்தேன். "யாரு அப்பா அம்மாவா?  உங்க பையன் ரொம்ப நல்ல தெறமசாளி. பெரிய ஆளா வருவான்.  உள்ள சும்மா ஏதாவது சொல்லிட்டு இருப்பாங்க. என்ன தெரியும் நம்ம பசங்கள பத்தி" என்றார் சிரித்துக் கொண்டே. வீட்டிற்கு லெட்டர் வந்த கட்டாயத்தால்  வேறு வழியின்றி அந்த சந்திப்பிற்கு வந்த என் பெற்றோரிடம் அந்த சர்டிபிகேட் ஒரு நல்ல நகை முரண். அவர் நிஜமாக தான் அப்படி நினைத்து சொன்னாரா என தெரியவில்லை எனினும் எனக்கு அது நல்ல பூஸ்ட்.


People who make effort to keep people happy will always be remembered.


மனிதர்கள் தான் எவ்வளவு எளிதாக நினைவுகளை உருவாக்கிவிடுகிறார்கள்.

"கடவுள் இருக்கிறாரா?"


இக்கேள்வியை நான் பள்ளியில் படிக்கும் சமயத்தில் கேட்டிருந்தால், கண்டிப்பாக இருக்கிறார் என்றிருப்பேன். இதே சில வருடங்களுக்கு முன் கேட்டிருந்தால் இல்லவே இல்லை என்று சண்டைக்கு கூட வந்திருப்பேன். 'சரி, இப்போ என்ன தான் டா சொல்ற?' என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. அதை தெரிந்து கொள்ள நாம் சில வருடங்கள் பின் நோக்கியும், மைசூரை நோக்கியும் செல்ல வேண்டும். குத்துமதிப்பாக 5 ஆண்டுகள்.


என் தங்கை கல்லூரி முடிந்த கையுடன் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர மைசூர் வர சொல்லியிருந்தார்கள். குடும்பமாக ஒரு 6-7 பேர் வாடகைக் கார் வைத்துக் கொண்டு வீட்டில் இருந்து சென்றோம். ஆபிஸில் சேர எதற்கு இத்தனைப் பேர் என்ற ஒரு கேள்வி வரலாம். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் செல்லப் பிள்ளையான என் தங்கை வீட்டில் இருந்து வெளியே சென்று தங்க ஆயத்தமாகும் முதல் பயணம். அந்த மென்சோகம் பயணம் தொடங்கும் முன்பே தொடங்கி விட்டது. அது கூடக்கூட அங்கே செல்லும் ஆட்களின் எண்ணிக்கையும் கூடியது. இவ்வளவு ஏன் "இவங்க ரெண்டு பேர்த்தயும் ஸ்கூலோட நிறுத்திரலாம். படிக்க வெச்சு என்ன ஆகப் போகுது?" என்று சொன்ன தாத்தா கூட முதல் ஆளாக ஏறிக் கொண்டார்.


எங்கள் வீட்டில் அனைவரும் அதீத பக்திமான்கள். எவ்வளவு என்றால்...


சும்மா இருக்கோமா? கோவிலுக்கு போகலாம்.


சும்மா இருக்க முடியலையா? அப்பவும் கோவிலுக்கு போகலாம்.


அவ்வளவு. 


அதனாலேயே எனக்கு ஒரு ஒவ்வாமை இந்த பக்தியுடன். 


இவர்களுடன் எந்த பாதையில் எப்போது பயணித்தாலும் முதல் இலக்கு ஒரு கோவிலாக தான் இருக்கும். அப்படித்தான் மைசூர் செல்லும் வழியில் ஒரு கோவிலை சென்றடைந்தோம். அங்கே தரிசனம் முடித்து விட்டு தான் மறுவேலை என்று காலை 5 மணிக்கே ஆரம்பித்து விட்டார்கள். "அடேய், அந்த ஆபிஸ்ல போய் நேரத்துக்கு சேந்தா தான்  அவளுக்கே வேலை!" என்பதாக இருந்தது என் மைண்ட் வாய்ஸ்.


"கூட்டம் கம்மியா தான் இருக்கு, எப்டியும் ஈஸியா 2 மணி நேரத்துல சாமி பாத்தரலாம்" என்று அவர்கள் பெருமை பொங்க பேசிக் கொண்டிருந்த போதே முடிவு செய்து விட்டேன். நான் அவர்களுடன் செல்லப் போவதில்லை என்று. நான் தீவிர கடவுள் மறுப்பில் இருந்த காலம் அது.


"நா வரல.. நீங்க போயிட்டு வாங்க.."


"வரலையா.. எங்க போக போற?"


"எங்கயும் போகல.. இங்க அப்டியே சும்மா போட்டோ எடுத்துட்டு இருக்கேன்." நான் புதிதாக அப்போது தான் ஒரு கேமரா வாங்கியிருந்தேன்.


"நீ அதுக்கா வந்த.. உள்ள போயிடு வரலாம் வா.."


"நீங்க இதுக்கா வந்தீங்க? ஆபிஸ் போலாம் வாங்க.."


இது திருந்தாது என்பது போல பார்த்து விட்டு அனைவரும் கோவிலுக்குள் சென்றனர். நான் என் கேமராவை தூக்கிக் கொண்டேன்.



ஒரு அரை மணி நேரம் கோவிலை சுற்றி சுற்றி வளைத்து வளைத்து எடுத்திருப்பேன். அனைத்து புகைப்படங்களும் ஒரே மாதிரி தான் இருந்தன. சரி, நம்ம கிரியேட்டிவிட்டி அவ்வளவு தான் போல என்று டீயை வாங்கி கொண்டு ஒரு கல் பெஞ்சில் அமர்ந்தேன். அதுவும் இரண்டு நிமிடங்களில் முடிந்தது. இன்னொரு டீ வாங்கிரலாமா என்று வெறும் கப்பை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த சமயம் அருகில் நிழலாடியது.


ஒரு நடுத்தர வயதுள்ள நபர் கொஞ்சம் தள்ளி அதே பெஞ்சில் அமர்ந்தார். கண்ணை மூடி ஏதோ முணுமுணுத்துக் கொண்டே அமர்ந்திருந்தார். அவர் லிப் மூவ்மெண்டை வைத்து என்ன சொல்கிறார் என்று அறிந்து கொள்ளும் முயற்சியில் அவரை உன்னிப்பாக கவனித்தேன். அதை எப்படியோ உணர்ந்த அவர் தவம் களைந்த முனியைப் போல் என்னைப் பார்த்தார். அந்த சங்கடத்தை மறைக்க சிரித்து வைத்தேன். அவர் முகம் கனிவாக மாறியது.


"எந்த ஊர்?" கன்னடமும் ஆங்கிலமும் கலந்து வந்தது அந்த கேள்வி.


"திருப்பூர்"


"போட்டோக்ராபரா? போட்டோ எடுக்க வந்துருக்கீங்களா?"


"இல்ல.. வீட்ல இருந்து வந்துருக்காங்க.. கோவிலுக்கு உள்ள போயிருக்காங்க..." என்றேன் அதே கன்னடமும் ஆங்கிலமும் கலந்து. என்னிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் இது. ஒரு மொழி ஒழுங்காக தெரியவில்லை என்றால் அது தெரியாது என்று சொல்லி விட என் ஈகோ என்றும் ஒத்துழைத்தது இல்லை. அதை தவறாக பேசி அவர்களே புரிந்து கொள்ளும் வரை நான் விட்டதே இல்லை. அவர் கெட்டிக்காரர் அந்த ஒரு கேள்வியிலேயே புரிந்து கொண்டார். ஆங்கிலத்தில் தொடர்ந்தார். அவர் ஆங்கிலம் அவ்வளவு சரளமில்லை. ஆனால், என் கன்னடம் அளவிற்கு மோசமில்லை.


"ஓ.. அவளோ தூரத்துல இருந்து வந்துருக்கீங்களா?"


"ஆமா..." 


"நாங்களும் தூரத்துல இருந்து தான் வந்துருக்கோம். நார்த் கர்நாடகால இருந்து.." அவர் சொன்ன ஊர் பெயரை சத்தியமாக மறந்து விட்டேன்.


"ஓ.." இப்படியாக இரண்டு மூன்று ஓ போட்டு விட்டு நகர்ந்து விடலாம் என்று தான் யோசித்திருந்தேன். அப்போது தான் அவர் தன் பிரச்சனையை சொல்ல ஆரம்பித்தார். உண்மையில் மிக அசௌகர்யத்துடன் தான் கேட்க ஆரம்பித்தேன்.


இன்னொரு முக்கியமான விஷயம். பொதுவாக ஆண்கள் அதிகமாக எதையும் பகிரமாட்டார்கள், திறந்த புத்தகமாக இருக்கமாட்டார்கள் என்றொரு கருத்துண்டு. அதற்கு ஒரு நேரெதிர் தியரி நான் வைத்திருக்கிறேன். தெரியாத ஒரு ஆணிடம் நீங்கள் சுமார் 20 நிமிடம் பேச்சு கொடுக்க நேரிட்டால் அவர்களின் வாழ்வின் ஒரு முக்கியமான நிகழ்வை அல்லது பிரச்னையை உங்களிடம் கூறியிருப்பார்கள். ஆண்கள் பொதுவாக தனிமையானவர்கள். தங்களுக்குள் இருப்பவற்றை தனிமை என்னும் கயிறைக் கொண்டு இறுக்கி வைத்துக் கொள்கிறார்கள். அந்த கயிற்றின் இறுக்கத்தை தளர்த்த ஒரு கால் மணி நேர உரையாடல் போதுமானதாக இருக்கிறது. நாம் மீண்டும் சந்தித்துக் கொள்ளவே போவதில்லை என்கிற ஒரு தைரியம் கூட காரணமாக இருக்கலாம். இதற்கு நாம் பார்க்க போகும் இந்த உரையாடல் மட்டும் உதாரணம் அல்ல. இப்படித்தான் நான் ஒரு ஆட்டோ டிரைவருடன் அரை மணி நேரம் பயணிக்க நேர்ந்தது. அந்த நேரத்துக்குள் அவர் கள்ள காதல் கதையை சொல்லிவிட்டார். கள்ள காதல் என்றவுடன் உங்கள் புருவம் உயர்வதை உணர முடிகிறது. ஆனால், அதை இன்னொரு நாள் சொல்கிறேன். நம் கதைக்கு வருவோம்.


அதற்கு முன் ஒரு எச்சரிக்கை. என் தியரியை வைத்துக் கொண்டு யாரிடமும் எதையும் உளறி வைக்காதீர்கள். அனைவரும் என்னைப் போல நல்லவனாக இருக்க போவதில்லை(?!). ஸாரி, நான் பார்த்தவர்கள் போல.



"நானும் என் பொண்டாட்டியும் தான் வந்துருக்கோம்." என்றார் சற்றே தோய்ந்த குரலில்.


"ஓ.."


"எங்களுக்கு ரொம்ப நாளா கொழந்தை இல்ல... அப்படியா?"


"அப்படியா?" நான் வற்புறுத்தி வரவழைத்த ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன்.


"ஆமா... எங்க ஊரு கிளைமேட்டுக்கு எல்லாருக்கும் லேட்டா தான் பொறக்கும்.."


`இவ்வளவு சயின்ஸ் பேசற ஆள் கொழந்த பொறக்கலனு ஏன் கோவிலுக்கு வரான்` என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே "உங்க ஊர்ல எல்லாம் சீக்கிரம் பொறந்துரும் ல?" என்று கேட்டார்.


இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. "ஆமா.. அப்படி தான் இருக்கும்.  சில பேருக்கு சீக்கிரம் பொறக்கும், சிலருக்கு லேட் ஆகும்" என்று மேம்போக்காக எதையோ உளறி வைத்தேன். அவரை சோர்வடைய வைக்கும்படி எதையும் சொல்லி விடக் கூடாது என்பது மட்டும் என் பின்மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது.


"ஓ.. சரி.. எங்களுக்கும் இவ்வளவு லேட்டா ஆகும்னு நெனைக்கல. எல்லா டாக்டரையும் பாத்தாச்சு எந்த பிரச்சனையும் இல்லனு சொல்லிட்டாங்க.. வேற என்ன பண்றதுனு தெரியல.எனக் ஊருல நெறய பேரு இந்த கோவில் ரொம்ப சக்தி வாய்ந்ததுனு சொன்னாங்க. அதான் இந்த கோயிலுக்கு வந்துருக்கோம்."


"சரிங்க.."


"நீங்க அவ்ளோ தூரத்துல இருந்து வந்துருக்கீங்க.. அப்போ இந்த சாமி ரொம்ப சக்தி வாய்ந்தது தானே? எங்களுக்கு கொழந்த பொறந்துரும் ல?" என்றார்  ஒரு வித ஆவலுடன்.


எனக்கு சில நிமிடங்கள் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பொதுவாக இப்படியான ஒரு கேள்வி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் தொடுக்கப்பட்டிருந்தால் 'அது எப்படி கோயிலுக்கு போனா எல்லாம் சரி ஆகும்?' என்று விதண்டாவாதமாக ஏதாவது கேட்டிருப்பேன். எனக்கு கடவுள் சார்ந்து இருக்கும் மக்களின் மேல் கோபமே 'நான் எதும் பண்ணலைனாலும் கடவுள் பாத்துப்பார், நான் எந்த தப்பு பண்ணுனாலும் கடவுள் பாத்துப்பார்' என்கிற போக்கு தான். அதை வைத்து தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் வருத்திக் கொள்வதும் என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. கடவுள் வியாபாரமாக்கப்பட்டதும் அரசியலாக்கப்பட்டதும் அதை விட வேதனைக்குரியது. ஆனால், இங்கே ஒருவர் தனக்கும் தன் மனைவிக்கும் ஆசையான ஒன்றிற்காக அலைந்து திரிந்து கடைசியில் நம்பிக்கையை மட்டுமே வைத்திருக்கும்போது. அந்த நம்பிக்கை கடவுளாக இருப்பதில் தவறில்லை என்றே பட்டது. 


"ஆமா, ரொம்ப சக்தி வாய்ந்த சாமின்னு தான் எங்க வீட்ல எல்லாரும் வந்துருக்காங்க.." அவர் முகத்தில் அப்படியொரு பிரகாசம். "உங்களுக்கு கண்டிப்பா சீக்கிரம் கொழந்தை பொறக்கும்.." என்றேன் சிரித்த முகத்தோடு. அவர் முகத்திலும் அதே சிரிப்பு.



இந்த சம்பவம்  முடிந்த சிறிது நேரத்தில் எனக்கு தோன்றியது. 'அடடா, நாம நம்பாத ஒரு விஷயத்த நம்பற மாரி சொல்லிட்டோமே' என்று தான். ஆனால், அவர் நம்பிக்கையை குலைக்காமல் இருக்க இப்படி செய்தது திருப்தியாக தான் இருந்தது. அதே சமயம், ஒரு தெரியாத நபர் என்பதால் நின்று யோசித்த நான், நெருக்கமானவர்களின் நம்பிக்கையை கண்டிப்பாக உதாசீனப்படுத்தி இருப்பேன்.நாம் எடுத்துக்கொள்ளும் உரிமைகளுக்கு இடையில் நம்பிக்கைகளுக்கு இடமில்லை போலும்.


இதெல்லாம் சரி, கடவுள் இருக்காரா இல்லையானு சொல்லு என்கிறீர்களா?



இன்னுமா உங்களுக்கு புரியவில்லை. கடவுள் ஒரு நம்பிக்கை கொடுப்பவர் தான். இந்த கதையில் நம்பிக்கை கொடுத்த நான் தான் கடவுள் - அஹம் ப்ரம்மாஸ்மி!

 எங்கள் வீட்டில் எனக்கு அடிக்கடி சொல்லப்படும் கதைகளில் இதுவும் ஒன்று. நான் பிறந்த போது மருத்துவமனையில் இருந்த அனைத்து நர்ஸ்களும் என்னை பாசமாக கொஞ்சியதாகவும், அதன் பிறகு எங்கள் வீட்டில் இருந்து ஒவ்வொரு முறையும் அங்கு சென்ற போது அவர்கள் என்னைப் பற்றி விசாரித்ததாகவும் சொல்வார்கள். இதை முதன்முறையாக நான் கேட்ட போது இதில் இருந்த கற்பனைத் தன்மையை ஆராய என் மனம் முன்வரவில்லை. அன்றிலிருந்தே முகம் தெரியாத அவர்களின் அன்பை எண்ணி எனக்கு நானே சிலிர்த்துக் கொள்வேன். எனக்கு நர்ஸ் என்றாலே ஒரு விவரிக்க முடியாத அன்பு உண்டாக அது ஒரு முக்கிய காரணம்.

சிலர் இப்படிக் கூறி கேள்விப்பட்டதுண்டு. "நான் மாத்திரை எவ்வளவு வேணும்னாலும் எடுத்துப்பேன். ஆனா, ஊசி மட்டும் போட்டுக்க மாட்டேன் ". நான் அப்படியே நேரெதிர். அதற்கு காரணம் கூட எனக்கு நர்ஸ்கள் மீதான அன்பு தான் என நினைக்கிறேன். அவர்கள் முகத்தில் இருக்கும் கனிவு ஊசிகளின் வலிகளை பொருட்படுத்த விடுவதில்லை.
அப்பாவுக்கு உடல் நலமில்லாத ஒரு தருணத்தில் அவருடன் நான் மருத்துவமனையில் தங்கியிருக்க நேர்ந்தது. அப்பொழுது தனி அறைக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டில் இன்னொரு இளம்வயது பையனுடன் அறையை பகிர்ந்து கொண்டிருந்தோம். அவர் காலேஜ் முதல் வருடம் சேர போகும் மாணவன் என்று சில உரையாடல்களின் வாயிலாய் அறிந்திருந்தேன். அவர் காஸ்மெட்டிக் சர்ஜரி எனப்படும் ஒரு வித அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் காதுமடல் சற்று மடங்கியிருந்த காரணத்தினால் அதை சரி செய்வதற்காக அந்த அறுவை சிகிச்சை. அடுத்த நாள் அறுவை சிகிச்சை என்கிற நிலைமையில் அந்த அறைக்கு அவ்வப்போது வரும் ஒரு ட்யூட்டி நர்ஸ் அவருடன் பேசிக் கொண்டதைக் கேட்க நேர்ந்தது.
"டேய், உன் காது இப்டியிருக்குனு சர்ஜரி பண்ணனுமா? இது கடவுள் குடுத்த வரம் டா. இது வேண்டாம்னு உங்க அப்பா கிட்ட சொல்லு டா. ப்ளீஸ் டா..! " என்றார் இனிமையுடன் கலந்த உரிமையோடு.
"அப்பா கேப்பாரானு தெரியல கா.."
"இதெல்லாம் ஒவ்வொருத்தரோட இஷ்டம் நான் சொல்லவே கூடாது.. இருந்தாலும் ரொம்ப வலிக்கும் டா... உன்ன பாத்துக்க தான் நாங்க இங்க இருக்கோம் இருந்தாலும் உங்க அப்பா கிட்ட சொல்லிப் பாரு செரியா ?"
அந்த இரண்டு நிமிட உரையாடலில் அத்தனை கரிசனம். அவர் சொன்னது போன்றே அறுவை சிகிச்சை முடிந்து வலியால் துடித்த அந்த பையனை அவ்வளவு சிரத்தையாக கவனித்துக் கொண்டார் அந்த நர்ஸ். அங்கிருந்த அனைவரிடமும் அதே கனிவு. எனக்கே அறியாமல் அவர்களுக்கு என்னைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டாகி விட்டது.
"ட்ரிப்ஸ் முடியற மாறி இருந்த என்ன வந்து விளிக்கணும் கேட்டில்லோ?" என்று அவர் மலையாள தமிழில் பேசியபோது எனக்குள் அப்படியொரு பூரிப்பு.
"நான் விளிக்கும் சிஸ்டரே, நீ போய்க்கோ!" என்று மலையாளத்தில் பேசி என் அன்பை காட்டிவிட எனக்கும் ஆசை தான். ஆனால், இந்த மாதிரி எதிர்பாராத உரையாடல்களில் வார்த்தைகள் அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை. நான் "ம்ம்ம்.." என்று தலையாட்டிவிட்டதில் இன்னுமே என் மீது எனக்கே கோபம். நர்ஸ்கள் மீதான என் அன்பை எப்போதும் வெளிப்படுத்த முடிவதில்லை என்கிற அங்கலாய்ப்பு. அதன் உச்சமே இந்த பதிவு.
நேற்று கூட நான் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்றிருந்த போது "அவ்வளவா வலிக்காது செரியா, டக்குனு முடிஞ்சுரும்.." என்றது எப்போதுமே நான் கண்ட கனிவான நர்ஸ் முகம். அப்போது எனக்கு தோன்றிய சிந்தனை இது. நாம் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும்பட்சத்தில் நமக்கு நெருக்கமானவர்களிடம் கூட வெறுப்பைக் காட்டி விடுவோம் வேலைப்பளுவைக் காரணம் கூறி. ஆனால், இவர்களால் மட்டும் எப்படி கனிவுடன் கூடிய சேவையைக் கொடுக்க முடிகிறது. நான் காணாத எத்தனையோ செவிலியர்கள் உலகின் பல மூலைகளில் இதை வாழ்நாள் முழுதும் செய்து வருகின்றனர். அதுவும் இப்படியொரு பெருந்தொற்று காலத்தில் அவர்களின் பங்களிப்பை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.
நான் அடிக்கடி இப்படி நினைத்ததுண்டு, 'செவிலியர்கள் தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்' என்று. அந்தக் கருத்தை நானே மறுக்க விழைகிறேன். அவர்கள் தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களல்ல, அவர்கள் தான் தேவதைகள்.

 தாத்தா இறந்து இரண்டு வாரங்களாகிவிட்டது. அவரின் மரணச் செய்தி வந்த கணத்திலிருந்து நான் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறேன் என்று என்னாலே உணர முடியவில்லை. ஆழ்ந்த துயரமோ அடக்க முடியாத அழுகையோ இல்லை. ஆனாலும் ஒரு விதமான இறுக்கமான மனநிலை. அவரை அடக்கம் செய்த அன்று இரவே கூட சம்பந்தமே இல்லாமல் என் பாட்டியின் இழப்பை எண்ணி சற்று நேரம் அழுது கொண்டிருந்தேன்.

அவர் என்னைப் பாசமாக கொஞ்சியதாகவோ கடுமையாக திட்டியதாகவோ எனக்கு நினைவு இல்லை. எந்த விதமான உணர்வுகளையும் அவ்வளவு எளிதில் வெளிக்காட்டிக்கொள்ளாத, தன்னை ஒரு அக்மார்க் alpha male ஆக நினைத்துக் கொண்டிருந்த ஆசாமி. அவர் கடைசி காலக்கட்டங்களில் என்னைப் பார்க்க வேண்டும் என்று அவர் சொன்னதாக கேள்விப்பட்டு அவரைப் பார்க்க செல்வேன். "வாடா!" என்று சொல்லிவிட்டு அவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார். அவர் வேலை என்றால் சிகரெட் புகைப்பது, பழைய நாளிதழ்களைப் புரட்டுவது, வீதியில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்ப்பது. "இதுக்கு தான் என்ன வர சொன்னீங்களா?" என்று கேட்டுவிட தோன்றும். அப்படி உரிமையாக கேட்டுவிடக்கூட முடியாத மேம்போக்கான உறவு தான் எனக்கும் தாத்தாவிற்கும்.
தாத்தா ஒரு சரியான சரக்கு வண்டி. அவர் பதுக்கி வைத்திருந்த காலி மதுபாட்டில்களை கடத்திக்கொண்டு போய் கிரிக்கெட் பந்து வாங்குவதில் தொடங்கியது என் புரட்சி. அவரை ஏமாற்றிவிட முடிந்ததில் அப்படியொரு சந்தோஷம் அச்சமயத்தில்.
தற்போது தாத்தாவைப் பற்றி யோசித்தால் எனக்கு முக்கியமான இரண்டு சம்பவங்கள் உடனே ஞாபகத்திற்கு வருகின்றன.
நான் ஒரு சமயம் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு மிகப்பெரும் விபத்து நேர்ந்தது. பேருந்தில் இருந்த எங்களுக்கு பெரிதாக எதுவும் பாதிப்பில்லை என்றாலும் இன்னொரு வாகனமான காரில் வந்தவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தும் காரும் மேம்பாலத்தில் மோதிக் கொண்டதில், கார் பாலத்தில் இருந்து கீழே விழுந்து நிகழ்ந்தது அந்த கோர சம்பவம். நல்ல வேளையாக பேருந்து ஓட்டுநர் கன்ட்ரோல் செய்து நிறுத்தியதில் நாங்கள் தப்பித்தோம். இதை நான் எங்கள் வீட்டில் சொல்லியிருந்தேன். தாத்தாவும் இதை அறிந்திருந்தார். அதே சம்பவத்தை அவர் இன்னொருவரிடம் கூறிக் கொண்டிருக்கையில் நான் கேட்க நேர்ந்தது. "பஸ்சும் காரும் மோதி பெரிய ஏக்சிடெண்ட். கார்ல இருந்தவங்க எல்லாம் உடனே அவுட்டு. பஸ் பாலத்துல தொங்கிற்றுந்துருக்கு. லோகேஸ் எல்லாம் ஏதோ கம்பிய புடிச்சு தொங்கிட்ருந்துருக்கான். அப்புறம் ஊர் மக்கள் தான் வந்து காப்பாத்திருக்காங்க..!" கதை சுவாரஸ்யத்திற்காக என் உயிரை ஊசலாட விட்டது எனக்கு பேரதிர்ச்சி தான். இருந்தாலும் அவரிடம் இருந்த கதை சொல்லல் தான் என்னிடம் ஒட்டிக்கொண்டதோ என்றொரு எண்ணமும் உண்டு.
இன்னொரு சமயம் நான் புத்தகம் வெளியிட்டு வெகு சில நாட்களில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த சில உறவினர்கள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது தாத்தாவும் அங்கிருந்தார். "நம்ம வீட்ல ஒரு பையன் இதெல்லாம் பண்றது ரொம்ப சந்தோஷம்.." என்று அவர்கள் கூறிக் கொண்டிருக்கையில் நான் எதேச்சையாக தாத்தாவைப் பார்க்க நேர்ந்தது. என்னைப் பார்த்து மிகவும் பெருமையோடு சிரித்துக் கொண்டிருந்தார். அதற்கு முன்னதாகவோ பின்னதாகவோ நிச்சயமாக அவரிடம் இருந்து அப்படியொரு பார்வை கிடைக்கவில்லை. நான் விளையாட்டாக வெளியிட்ட புத்தகம் அது. அதற்கு மற்றவர்கள் பாராட்டும்போது பலமுறை சந்தோஷப்பட்டுள்ளேன். ஆனால், நான் பெருமையாக உணர்ந்த தருணம் அது மட்டுமே.
ஒரு வேளை இந்தப் பதிவை தாத்தா படிக்க நேர்ந்திருந்தால் தனக்குத் தானே சிரித்துக் கொண்டிருப்பார்!
எனக்கும் தாத்தாவிற்குமான உறவை நான் விவரிக்க முயல்கையில் எனக்கு ஆரண்ய காண்டம் படத்தில் வரும் ஒரு டயலாக்கின் மறு ஆக்கம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
"உனக்கு உங்க தாத்தா னா ரொம்ப புடிக்குமா?"
"அப்படி இல்ல. ஆனாலும், அவர் எங்க தாத்தா!"


பரியேறும் பெருமாள் படம் பார்த்திருந்தால் உங்களுக்கு தெரியும். கறுப்பியை தண்டவாளத்தில் கட்டி வைக்கும் முதல் காட்சியில் திரையில் மட்டுமின்றி அதை தாண்டியும் நம்முள் ஒரு விதமான பதைபதைப்பு நிறைந்திருக்கும். அதே மனநிலை மாரி செல்வராஜ் எழுதிய "அவர்கள் எனக்கு சுரேஷ் என்று பெயரிட்டார்கள்" என்ற சிறுகதையை படிக்கும் போதும் நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கும். ஒரு நாயின் பார்வையில் அதன் வாழ்வை பார்க்க நேரிட்டால் அது அப்படி தான் இருக்க முடியும் என்று நம்மை நம்ப செய்து விடுகிறது. சாதாரணமாகவே  நாய் என்ற சொல்லை நாம் இழிவுபடுத்த மட்டுமே கூற விழைகின்றோம். உதாரணமாக,


"அவன் ஒரு பரதேசி நாய்!"


"அவனைப்  பாத்தியா நாய் மாறி பொறுக்கிட்டு இருக்கான்"


"ஏண்டா நாய் மாறி சாப்பிட்ற ?"


இப்படியெல்லாம் சொல்வதை மிக சௌகரியமாக பழகிக் கொண்டோம். ஆனால், இதை அப்படியே மாற்றி நாயை ஒரு அப்பாவியான ஜீவனாய் முன்னிறுத்துவதில் தான் மாரி செல்வராஜ் மாறுபடுகிறார். கறுப்பியும் சுரேஷும் நம் கண்களை மட்டுமின்றி மனங்களையும் நிறைத்து விடுகிறார்கள். அவர்களை பார்க்கும்போதும் படிக்கும்போதும் தான் இதற்கு முன் நான் கடந்து வந்த எத்தனையோ கறுப்பிகளையும் சுரேஷ்களையும் திரும்பிப் பார்க்க தோன்றுகிறது. அந்த கதையில் வரும் சுரேஷ் இப்படி சொல்லியிருப்பான்.


'மாங்கொட்டாரத்தாளையும், ஐயாக்குட்டியையும் நான் தான் வெறி பிடித்து கடித்தேன் என்று சொல்வதை தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மாங்கொட்டாரத்தாள் அந்த பல்லு போன பாழாப்போன கிழவி என் வாலை மிதித்து நசுக்கியதால் வலி பொறுக்க முடியாமல் கடித்துவிட்டேன். அந்த ஐயாக்குட்டி கண் தெரியாத கபோதி ஒரு ஓரமாய் படுத்திருந்த என் மீது பொத்தென்று விழுந்ததால் அவசரத்தில் பயந்து கடித்தேன். நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை அப்படி செய்யும் அளவுக்கு என் உடம்பில் எனக்கு திறனும் இல்லை. அப்புறம் அப்படி ஒரு கடிநாயாக நான் வளர்க்கப்படவுமில்லை. அதற்காக "நான் ஏதோ செத்துப்போன கழுதை கறியை தின்னுட்டு வந்து கோட்டி புடிச்சு எல்லாரையும் கடிக்கிறேன்னு இவர்கள் சொல்வது அபாண்டம்".'


(மன்னிக்கவும். நான் இதை இங்கு எழுத வேண்டாம் என்றே நினைத்திருந்தேன். இருந்தாலும், எழுதாமல் விட என் மனம் ஒப்பவில்லை. அதனால் சுருக்கமாக சொல்லி விடுகிறேன். சுரேஷ் கடித்ததும் 'கர்ணன்' திருப்பி அடித்ததும் எந்த விதத்திலும் மாறுபட்டுவிடவில்லை என்னைப் பொறுத்தவரையில்!)


ஒரு எளிமையான அப்பாவியின் பேரில் நம்மால் எவ்வளவு எளிதில் குற்றம் சுமத்தி விடமுடிகிறது. இதையும் இன்னொன்றையும் நான் உணர சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் என் நினைவிற்கு வருகிறது.


அந்த இன்னொன்று என நான் கூறியது நா.முத்துக்குமார் சொன்ன இந்தக் கூற்று "நான் பூனை வளர்க்கும் சுதந்திரத்தை எதிர் வீட்டில் புறா வளர்ப்பவன் பறித்துக் கொள்கிறான்".


நான் எந்த செல்லப் பிராணியும் வளர்ப்பவன் அல்ல. எங்கள் வீட்டின் அருகில் சுற்றித் திரியும் கருவாச்சிக்கு அவ்வப்போது திண்பண்டங்கள் போடுவது உண்டு. 'கருவாச்சி' எந்த விதமான நிறவெறி காரணமுமின்றி அவளைப் போலவே அப்பாவியான எங்கள் வீட்டு பாப்பா வாஞ்சையுடன் வைத்த பெயர். இப்பொழுது கூட எங்கள் வீட்டுக் கதவின் முன்னால் காதுகளை மட்டும் தூக்கிக் கொண்டு படுத்திருக்கிறாள். அவள் என்னை துரத்தாமல் இருக்க லஞ்சமாக ஆரம்பித்த எங்கள் வீட்டு உணவும் திண்பண்டங்களும், நாளடைவில் அவளுக்கு அன்பான வாடிக்கையாகிவிட்டது. அப்படி ஒரு நாள் அவளுக்கு நான் பிஸ்கட்டுகள் போட்டுக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ சில கற்கள் அவளை வந்து தாக்கியது. வலி தாங்க முடியாமல் அலறிக் கொண்டு ஓடினாள் கருவாச்சி. அதிர்ச்சியில் கல் வந்த திசையில் நோக்கினேன் நான். நைட்டியை தூக்கி மடித்துக் கட்டியவாறு கையில் இன்னும் சில கற்களோடு ஆக்ரோஷமாக வந்து கொண்டிருந்தார் எங்கள் வீதி குடோன் அம்மா. எங்கேயோ ஓடி பயந்து பம்மிக்கொண்டிருந்த கருவாச்சியின் திசையில் கையில் இருந்த மீதி கற்களையும் வீசிவிட்டு கத்திக்கொண்டே அவர் வீட்டிற்கு திரும்பிச் சென்றார்.


"திருட்டு நாய் கோழிய எல்லாம் வந்து தூக்கிட்டு போயிருது நைட்டு ஆனா... ஊர் மேயற நாய்க்கு நம்ம வீதில என்ன வேல... இந்த...." அதற்கு மேல் அவர் பேசியது கேட்காத தூரம் சென்றிருந்தார். நிற்க. என்னை யாரென்றே அவருக்கு தெரியாது அதனால் அவர் திட்டியது என்னைப் பற்றியதாக இருக்க வாய்ப்புகள் குறைவே!


கருவாச்சி அவர்கள் வீடு வரையில் சென்று எவருமே பார்த்ததில்லை, இருந்தும் இப்படியொரு குற்றச்சாட்டு வந்தது வீதியில் இருந்த அனைவருக்குமே ஆச்சர்யம் தான். சில நாட்களுக்கு பின் தான் தெரிந்தது, அந்த மாயமான கோழிகளுக்கு காரணம் அவர்கள் வீட்டிற்கு ரெகுலராக வந்து சென்று கொண்டிருந்த ஆசாமி என்று. அதன் பிறகு அந்த குடோன் அம்மாவின் சத்தம் வீதியில் கேட்கவில்லை. 'ஒரு நாய் தூக்கிட்டு போயிருச்சே' என்கிற ஆதங்கம் அவருக்கு ஆறியிருக்குமோ என்னவோ. ஆனால், கருவாச்சியின் காயங்கள் ஆற சில தினங்கள் பிடித்தன.


கருவாச்சி எனக்கு உணர்த்திய இன்னொரு கூற்று "அம்மா னா யாருக்கு தான் புடிக்காது. நாய் பூனைக்குக் கூட தான் புடிக்கும்". இது புதுப்பேட்டை படத்தில் தனுஷ் பேசிய வசனம்.


கருவாச்சி மிக கெட்டிக்காரி. ஒரே பிரசவத்தில் ஐந்து குட்டிகள். எங்கள் வீட்டிற்கு அருகிலேயே தான் மொத்த குடும்பமும் தஞ்சம். குட்டிகள் வந்த பிறகு கருவாச்சி அவ்வளவாக சாப்பிடுவதில்லை. நாங்கள் பிஸ்கட்டுகளோ உணவோ கொடுக்கும்போது குட்டிகள் முண்டியடித்துக் கொண்டு சாப்பிடும்போது நடுவில் வராமல் வேடிக்கைப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொள்ளும் அன்பான அம்மாவாக மாறிவிட்டாள். அவளுக்கென தனியாக நாங்கள் ஏதாவது வைத்தாலும் குட்டிகள் அருகில் வந்துவிட்டால் சாப்பிடாமல் விலகி சென்றுவிடுகிறாள், விவரம் தெரியா குட்டிகளும் முழுவதையும் முக்கி விடுகின்றன. அம்மாக்கள் பட்டினி கிடப்பது இப்புவியின் சாபம் தான் போலும்.


இதைப் பற்றியெல்லாம் பேசும்போது எனக்கு ஜிக்கியின் ஞாபகம் வருகிறது. எனக்கு விவரம் தெரியாத வயதில் எங்கள் வீட்டிற்கு வந்தவன் தான் ஜிக்கி. எனக்கு ஞாபகம் இருப்பது எல்லாம் தன் கடைசி காலத்தில் நோய்வாய்ப்பட்டு நடக்கவே முடியாமல் இருந்த ஜிக்கி. அப்படி இருந்தவனை எங்கள் வீட்டில் இருந்த அநேகம் பேரும் அருவருப்புடனே பார்த்தோம். எங்கேயாவது கொண்டு விட்டு விட வேண்டுமென்பதே அனைவரின் தீர்க்கமான முடிவு. அப்படி ஒரு நாள் அவன் கொண்டு செல்லவும் பட்டான். எனக்கு இருக்கும் நிறைவேறவே வாய்ப்பில்லாத ஆசைகளின் பட்டியலில் இப்பொழுது இதுவும் இணைகிறது. 'வாய்ப்பு கிடைத்தால் பரிதாபமாக எங்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜிக்கியை பாசமாக ஒரு முறையாவது கொஞ்சி விட வேண்டும். அருவருப்பை மட்டுமே என் கண்களில் இருந்து பார்த்தவனுக்கு ஒரு இம்மி அளவு அன்பையாவது காட்டி விட வேண்டும்.'


 "இத மட்டும் சொல்றியே.. நாய கொஞ்சறவங்கள எல்லாம் பாத்ததே இல்லையா?" என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. நிச்சயமாக பாசமழை பொழியும் பலரையும் எனக்கு தெரியும். என் நெருங்கிய சொந்தங்கள் நண்பர்கள் கூட குடும்பமாக எண்ணி வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பதிவு என்னைப் போன்ற அலட்சியவாதிகளுக்காக மட்டுமே எழுதியது. இந்த நேரத்தில் என்னையும் ஒரு நாயைப் போல எண்ணிக் கொஞ்சிய ஒரு பெண்ணைப் பற்றி கூற நினைக்கிறேன். என் கல்லூரித் தோழி என்னை அழைக்கும்போதெல்லாம் "நாயே" என்று கூறி தான் அழைப்பாள். அதில் ஒரு உரிமையும் கனிவும் எப்போதும் கலந்திருக்கும். இப்போதும் நாங்கள் எப்போதாவது பேசிக்கொள்ளும்போது அவள் அப்படி அழைப்பதுண்டு. அவள் என்னை "நாயே" என்றழைப்பது எனக்கு எப்போதுமே பிடிக்கும். இப்போது இன்னும் பிடிக்கிறது!


அலட்சியமான பார்வை, பார்ப்பவர்களை கட்டி இழுக்கும் மூக்கு வளையம், நினைத்த நேரத்தில் சிகரெட் புகைக்கும் உதடுகள், தனக்கு சுவாரசியமானதை பார்க்கும் போது மட்டும் கன்னத்தில் குழி செய்யும் சிரிப்பு - இது தான் மேவ். எதையுமே சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் ஜாலியாக திருடிக் கொண்டு தோன்றியவர்களோடு கலவி கொண்டு திரியும் அவளுக்குள் யாரும் அறியாத மென் சோகம். அவளைப் பார்த்த மாத்திரத்தில் ஈர்ப்பு கொள்கிறான் ஒட்டிஸ்.

ஒட்டிஸ் அவளுக்கு அப்படியே நேர்ரெதிர் துருவம். எதுவாகினும் பார்த்து பார்த்து செய்யும் ஒரு அக்மார்க் நல்லவன். "நீ இது வரைக்கும் செய்யக்கூடாத ஏதாவது செஞ்சுருக்கியா?" என்று கேட்டால், "ஓ செஞ்சுருக்கேனே, அடிக்கடி சோம்பேறித்தனமா இருக்குனு என் டேட்டா பேக்அப் எடுக்காம விட்ருவேன்" என சொல்லும் அளவுக்கு அப்பாவி.



இருவரும் சேர்ந்து நேரம் கழிக்கும் ஒரு நிலை வருகிறது. அவளுடன் இருப்பதற்காகவே அவனுக்கு இஷ்டம் இல்லாத அந்த வேலையை செய்ய ஒப்புக் கொள்கிறான்.

அப்படி ஒரு நாள் அவள் ஸ்கூல் முடிந்த இடத்தில் தன்னை சந்திக்க முடியுமா என கேட்கிறாள். அவள் தன்னுடன் டேட் செய்ய விரும்புகிறாள் என்று எண்ணி உடனே சம்மதிக்கிறான். அவளும் ஒரு விலாசம் கொடுத்து வர சொல்கிறாள்.

தன் முதல் டேட்டில் அவளை இம்ப்ரெஸ் செய்து விட வேண்டுமென தீர்க்கமாய் கோட்டு சூட்டு சகிதமாய் அவளை சந்திக்க செல்கிறான் ஒட்டிஸ். ஹாய் சொல்வதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டு சென்றவனுக்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அது ஒரு அபார்ஷன் கிளினிக். மேவ் தன் அலட்சியத்தால் கருவுற்றிருந்தாள். அதைக் கலைத்து விட்டு வீட்டுக்கு செல்லும்போது கூட ஒருவர் வேண்டுமென ஒட்டிசை வர சொல்லியிருக்கிறாள்.இது தெரியாமல் கனவு கோட்டை கட்டி வந்த அவனுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனது எண்ணங்களை புரிந்து கொண்டு உடனே வெளியேற சொல்கிறாள். அவனும் வெளியேறுகிறான்.

அவள் முடிந்து வெளியே வரும்போது அவளுக்காக பூங்கொத்துடன் வெளியே காத்திருக்கிறான். "நீ இன்னும் வெயிட் பண்றியா ?" என புன்முறுவலுடன் அவள் கேட்க, "அதுக்கு தானே வர சொன்ன !" என்கிறான் எவ்வித சலனமும் இல்லாமல். அவள் வீட்டிற்கு நடக்க ஆரம்பிக்கிறார்கள்.

அவள் கருவுற்றதைப் பற்றியோ, அவன் அடைந்த ஏமாற்றத்தைப் பற்றியோ ஒரு சொல்கூட இல்லை. ஆனால், அது அவர்களை பற்றிய உரையாடலாய் இருந்தது. "அந்த பூ எனக்காகவா ?" என்கிறாள் .

"ஆமா, ஆனா இப்போ குடுத்தா சரியா இருக்குமானு தெரில..."

"எனக்கு புடிச்சிருக்கு குடு, 'ஹாப்பி அபார்ஷன்' னு சொல்ற மாறி இருக்கு..." என்கிறாள் அவளுக்கே உரிய நக்கலுடன். இருவரும் சிரித்துக் கொள்கிறார்கள்.

இது Sex Education என்கிற சீரிஸில் வருகிற ஒரு எபிசோட். நாடகத்தன்மையுடன் எத்தனையோ உணர்வுகளை இந்த இடத்தில் வெளிப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அனைத்தையும் மறந்து அவர்களின் உரையாடலுக்காக நம்மை புன்னகைக்க வைத்திருக்கிறார்கள். இப்படி ப்ராக்டிக்கலான பல தருணங்களைக் கொண்டிருக்கும் இந்த சீரிஸ் ஒரு மேஜிக் தான்.

ஒரு queer கதாபாத்திரம் எப்படி வடிவமைக்கப்பட வேண்டுமென பாடம் எடுத்திருக்கிறார்கள். எரிக் தன் பாலியல்பின் பொருட்டு சில இடங்களில் அவமானப்படுத்தப்படுகிறான். ஆனாலும் அவன் சுருண்டு படுத்துக்கொள்வதில்லை. அவனை அரவணைக்க ஆயிரம் கைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. தான் நினைத்ததை செய்ய தன் அப்பாவிற்கே பாடம் எடுக்கும் அளவிற்கு முதிர்ச்சி. ஆனால், தன்னை கொடுமைப்படுத்தியவனிடமே காதலில் விழும் அப்பாவித்தனம். ஒரு கதாப்பாத்திரத்தில் எத்தனை பரிமாணங்கள்.

இந்த ஒரு கதாபாத்திரம் மட்டுமின்றி - பள்ளியிலேயே அழகானவனை நான் தான் டேட் செய்ய வேண்டுமென என்னும் ஒரு பெண், அதில் அவமானப்படுத்தப்பட்டு வெகுண்டெழுந்து அவளின் அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிடும் ஒரு தோழி, வீட்டில் தந்தையால் வெறுக்கப்படும் விரக்தியில் பார்ப்பவர்கள் மேல் எல்லாம் எரிந்து விழும் ஒருவன், செக்ஸ் தெரபிஸ்ட்டாக ஊருக்கே உபதேசம் செய்தாலும் தன் தனிப்பட்ட வாழ்வில் உறவுகளின் பிடியில் ஒரு முடிவிற்கு வர முடியாத ஒட்டிஸின் அம்மா என எளிதாக ஜட்ஜ் செய்யப்படக்கூடிய ஆனால் ஜட்ஜ் செய்ய முடியாத கதாபாத்திரங்கள் நிறைந்திருக்கின்றன.

சீரிஸ் முழுவதும் புணர்ச்சியைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். ஆனால், ஒரு துளி வக்கிரம் இல்லை. அதே சமயம், பொது இடங்களில் நடக்கும் sexual assault எவ்வளவு சீரியஸான விஷயம் என்பதையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள்.

ஏய்மீ பேருந்தில் செல்லும்போது இளைஞன் ஒருவனால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகிறாள். ஆனால், அவள் அதைப் பற்றி பெரிதாக யோசிக்காமல் தான் மேவ் பிறந்தநாளிற்கு கொண்டு வந்த கேக் வீணாகிவிட்டதே என்று வருத்தப்படுகிறாள். இதைப் பார்த்த மேவ்,

"உனக்கு என்ன நடந்துருக்குன்னு புரியுதா ?"

"இந்த மாதிரி பண்றதுக்குன்னே தான் வருவாங்க. இதையெல்லாம் பெருசு பண்ண முடியுமா? உனக்கு கொண்டு வந்த கேக் வீணாயிடுச்சே!"

"எனக்கு உண்மையிலேயே கிப்ட் குடுக்கணும்னு நெனச்சா, நா சொல்றத செய்வியா?" என்றாள் விபரீதம் புரிந்த மேவ்.

"சொல்லு, செய்யறேன்!"

"என்கூட போலீஸ் கிட்ட வா, நம்ம கம்ப்ளைண்ட் குடுத்துட்டு வருவோம். இத இப்டியே விடக்கூடாது."

சில பல உரையாடலுக்கு பின் ஏய்மீயும் சம்மதிக்கிறாள். அதன் பின் தான் அச்சம் அவளை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கிறது. பேருந்தில் ஏறவே பயந்து தினமும் கிலோமீட்டர் கணக்காக நடக்கிறாள். அவளுக்கு மட்டுமே தெரிந்த அவளுக்குள் குடிகொள்ளும் இந்த போராட்டங்கள் பல கண்ணீர்களை காண்கிறது.

பின்னொரு நாளில் பல மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட பெண்களுக்கிடையே இருக்கும் ஒரு பொதுவான விஷயம் பற்றிய கலந்துரையாடல் வரும்போது ஏய்மீயின் இந்தப் பிரச்சனை வெளிச்சத்திற்கு வருகிறது. அப்பெண்கள் அனைவரும் இதே போன்ற பிரச்சனையை சந்தித்ததாக வழிமொழிகின்றனர். பொதுவாக நடப்பதால் ஒரு தவறு எவ்வளவு மேம்போக்காக கையாளப்படுகிறது என்பதை நொந்து கொள்கின்றனர். அடுத்த நாளே தங்கள் பாகுபாடுகள் சண்டைகளை மறந்து ஏய்மீயின் பயத்தை எதிர்த்து ஒன்றாக பேருந்தில் ஏறுகின்றனர்.

இப்படி நினைத்து நினைத்து சிலாகித்துக் கொள்ள பல சிரிப்புகள், பல கண்ணீர்கள், பல போராட்டங்கள், பல மனமாற்றங்கள்  இந்த சீரிஸ் முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன. இருந்தும் மேவும் ஒட்டிஸும் இணைந்து விடும் அந்த தருணத்திற்கான காத்திருப்பு தான் என் பார்வையில் இந்த சீரிஸ்.

பெண்களைப் பற்றிய படம் அல்லது பெண்களை சுற்றிய படம்  என்றாலே நம்மூரில் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி விடலாம். ஜோதிகா நடித்தால் ஒரு குடும்பப் பெண்ணின் போராட்டம், நயன்தாரா நடித்தால் திகில் நிறைந்த பேயாட்டம், மற்ற மசாலா படங்களில் வரும் நாயகிகளுக்கு காதலினால் வரும் ஆர்ப்பாட்டம். இவ்வளவு தான் நம் சினிமா. இதையும் தாண்டி சில படங்கள் ஸ்டீரியோடைப்புகளை உடைத்துவிட்டு வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், எண்ணிக்கை என்று பார்த்தால் சொச்சம் தான். போராட்டம், பயம், காதல் இதைத் தாண்டி பெண்களின் உணர்ச்சிகளை திரையில் பார்க்க முடியாதா என நான் எண்ணிக் கொண்டிருந்த வேளையில் நான் பார்த்த சீரிஸ் தான் 'ஆரஞ்ச் இஸ் தி நியூ ப்ளாக்'. (Orange is the New Black)



பிரெண்ட்ஸ் சீரிஸ் அளவிற்கு இது பிரபலமான சீரிஸ் இல்லை தான். ஆனால், ப்ரெண்ட்ஸில் பகடி செய்யப்பட்ட சில உறவுகளின் ஆழம் இதில் உணர்த்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, லெஸ்பியன்/கேய் உறவுகளை கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் பகடி செய்திருப்பார்கள் ப்ரெண்ட்ஸ் சீரிஸில். ஆனால், இதில் நாம் பார்க்கும் மைய கதாபாத்திரமே ஒரு லெஸ்பியன். அங்கேயே ஆரம்பிக்கிறது இந்த சீரிஸின் சுவாரஸ்யம்.

லெஸ்பியன் என்றாலே இரு பெண்களுக்கு இடையேயான புணர்ச்சி என்கிற அளவில் தான் நம் புரிதல் உள்ளது. ஆனால், காதல், ஊடல் , கண்ணீர் அதையும் தாண்டி வெளிப்படும் துரோகம் என அனைத்தையும் பைப்பர் வழியே நமக்கு கடத்தியிருக்கிறார்கள்.  பைப்பர் தன் காதலியால் ஒரு போதைப் பொருள் கடத்தலில் சிக்க வைக்கப்பட்டு சிறைக்குள் வரும் பெண். அவள் தன் லெஸ்பியன் வாழ்வை மறந்து ஒருவனை மணமுடிக்க ஆயத்தமான நேரத்தில் தொடங்குகிறது நாம் பார்க்கும் திரைமொழியினோடு அவள் சிறைவாசம். அங்கேயே அவளை சிக்க வைத்த காதலியும் வந்து சேர்கிறாள். அதன் பிறகு அவர்களுக்குள்ளும் அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கும் நடக்கும் சம்பவங்கள் தான் கதை.

பெண்கள் சிறை. நாம் அதிகம் பார்த்திராத ஒரு சூழல். பைப்பர் மைய கதாபாத்திரம் ஆனாலும் அவளே இல்லாத எபிசோடுகள் கூட உள்ளன. சுற்றிலும் அவ்வளவு வித விதமான கதாபாத்திரங்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி  கிளைக்கதைகள். சிலர் தெரிந்தே செய்த தவறுகள், சிலர் தெரியாமல் செய்த தவறுகள். அதனால் அவர்களுக்கு கிடைத்த சிறைவாசம். அதில் அவர்களுக்கு நிகழும் மனமாற்றம், மனக்குமுறல் என சீரிஸ் முழுக்க உணர்ச்சிகள் நிறைந்து கிடக்கின்றன.

வெளியே தனி தனியாக தவறு செய்துவிட்டு சிறைக்குள் ஒன்று சேரும் அம்மா-மகள், சிறையில் தனிமையில் வாடுபவர்களை மகள்களாக எண்ணி உதவும் பெண், மூன்று பச்சிளங்குழந்தைகளை கொன்றுவிட்டு குற்ற உணர்ச்சியில் சுற்றும் ஒரு அம்மா, திருநங்கையாக தன் மனைவியின் உதவியுடன் மாறிய ஒரு கணவன், ஆண்களுக்கான முக்கியத்துவம் குறைகிறது என்பதாலேயே பெண்களுக்கு இடையேயான உறவுகளை வெறுக்கும் ஒரு காவலாளி, சிறைவாசிகளுக்கு ஏதாவது நல்லது செய்துவிடமாட்டோமா என்று ஏங்கும் ஒரு வார்டன் என கதாபாத்திரங்களுக்கிடையே முரண்களைப் புகுத்தி முன்னேறி செல்கிறது இந்த கதை.

இந்த சீரிஸ் பார்த்து நான் அறிந்து கொண்ட இன்னொரு விஷயம். இதுவரை இனவெறி சண்டையென்றால் அது கருப்பு வெள்ளை என ஒடுக்கப்பட்டும் ஒடுக்கியும் வாழ்பவர்கள் என்றே நினைத்திருந்தேன். ஆனால், அதில் கருப்பு வெள்ளை தாண்டி ஸ்பானிஷ், ஏசியன் என இன்னும் பல இருப்பதை விரிவுப்படுத்தி விளக்கியிருந்தனர். அவர்களுக்கு இடையே தலைமைக்கான போட்டி அதற்காக நடக்கும் கடத்தல், கொலை என்பதும் இந்த சீரிஸின் சாராம்சம்.  சிறைவாசிகள் மட்டுமின்றி அங்கு வேலை செய்யும் காவலாளிகளின் மனவோட்டத்தையும் பதிவு செய்திருந்தது சிறப்பு. அவர்களின் வாழ்வு, வழி அது உந்தும் போராட்டம் என சரி தவறு தாண்டி ஒரு ஜட்ஜ் செய்ய முடியாத கண்ணோட்டத்தில் நம்மை செலுத்தும் இந்த சீரிஸ்.

6 சீசன்கள் பார்த்துவிட்டு, 7வது சீசனுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அது தான் கடைசி சீசன் என்பதால் என்ன புதுசாக சொல்லிவிட போகிறார்கள் என்று தான் இருந்தேன். ஆனால், அதில் அமெரிக்காவின் சமகால அரசியலை வெளிப்படையாக சாடியிருந்தது ஒரு அதிர்ச்சியான ஆச்சர்யம் தான். நாடு விட்டு நாடு சென்று அமெரிக்காவில் இருக்கும் மக்கள் நிராதரவாக நாடு கடத்தப்படுவதை அழுத்தமாக பதிவு செய்திருந்தனர். அதில் பிரியும் உறவுகளில் சில சீரிஸ் முடிந்த பின்பும் நம்முள் நீங்காமல் இருக்கும். அவர்கள் தன் ஜனாதிபதியையும் சாட தவறவில்லை. இது இப்படி இருக்க இந்து முன்னணி என்னும் ஒரு அமைப்பைப் பற்றி பேசியதால் சென்சார் தாண்ட முடியாமல் இருக்கும் ஜிப்ஸி என்னும் தமிழ் படத்தை எண்ணி நொந்து கொண்டே இதை எழுதி முடித்தேன். 


"அம்மி அம்மி அம்மி மிதிச்சு" என்று மெட்டி ஒலி நாடகத்தின் இன்ட்ரோ பாடல் கேட்டவுடன் சில்லறைகளை சிதறவிட்டு பார்த்த வீடுகளில் எங்கள் வீடும் ஒன்று. சரோவிற்கு வந்த மாமியார் பிரச்சனை, லீலாவிற்கு வந்த கணவன் பிரச்சனை என அனைத்து பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து அவர்களுக்காக அலறி அனுதாபப்பட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு சுபம் போடுவதற்கும், 'இந்த நாடகம்னாலே இப்படி தான் டா அழுகாச்சியா இருக்கும்' என்று பொதுமைப்படுத்தி சீன் போடும் எதார்த்த கிளிஷேவிற்குள் நான் விழுவதற்கும் சரியாய் இருந்தது.

அன்றிலிருந்து சீரியல் என்றாலே எனக்கொரு ஒவ்வாமை இருந்து வந்தது.  அவ்வப்போது ஆங்கில சீரிஸ் பார்க்கச் சொல்லி எனக்கு நண்பர்களிடம் இருந்து அறிவுரைகள் வந்து கொண்டும் இருந்தது. அப்போதும் என் எண்ணங்கள் யாவும் தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களையும் என் நண்பர்கள் சொன்ன சீரிஸ்களையும் ஒன்றாகவே எண்ணி என்னை ஒன்ற விடாமல் செய்து கொண்டிருந்தது. அப்படி இருந்த என்னை  'இந்த சீரிஸ் பாரு டா வேற லெவல்ல இருக்கும்' என்று மற்றவருக்கு உபதேசம் சொல்லும் உத்தமன் ஆக்கிய  புண்ணியம் நான் பார்த்து வியந்த சில சீரிஸ்களையே சாரும். அவற்றை நான் உணர்ந்த விதம் பற்றிய  சிறு தொகுப்பு தான் இது. பல கருத்து கதவுகளை எனக்கு திறந்துவிட்ட அந்த சீரிஸ்களுக்கான நன்றியாகவும், அவற்றை எனக்கு அறிமுகப்படுத்த நினைத்த பலரை  பகடி செய்ததற்கு மன்னிப்பாகவும் தான் நான் இதை பார்க்கிறேன்.

'அப்படி என்ன தான் யா இருக்கு இதுல' என்று நான் பார்க்க ஆரம்பித்த ஒரு சீரிஸ் 'ஃப்ரெண்ட்ஸ்'. வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் ஒன்று சேர்ந்த ஆறு நண்பர்களின் கதை. எப்போதும் காபிக்கடையில் அரட்டையடித்துக்கொண்டு, எப்போதாவது பெற்றோர்களை சந்தித்துக்கொண்டு, லவ் வேறு டேட்டிங் வேறு என்று புரிந்து கொண்டு வாழும் நமக்கு செட்டே ஆகாத செட்டப். இதில் மீண்டும் மீண்டும் சிரிப்பில் வருவது போல் இடையில் சிரிப்பலைகள் வேறு. ஆனாலும் ஒவ்வொரு கேரக்டரும் அவர்களுக்கு நிகழும் கிளைக்கதைகளும்  நம்மை வியப்படைய வைக்க தவறவில்லை.




"நட்புன்னா என்னனு தெரியுமா? இப்படி இருக்கணும் டா , அப்படி இருக்கணும் டா" என்று அவர்கள் பேசிக் கொள்வதில்லை. இத்தனைக்கும் ஒவ்வொருவரும் இன்னொருவர் பேச்சைக் கேட்பதில்லை, சொன்ன சொல்லை அப்படியே காப்பாற்றுவதும் இல்லை. ஆனால், ஒருவருக்கு நடக்கும் நல்லது கெட்டது என அனைத்திலும் மற்றவர்கள் துணை நிற்கிறார்கள். அவர்களின் நட்பு காட்சிகளாக கதைகளாக அவர்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளாக நம் முன் விரிவடைகின்றன. அந்த நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அவர்களுக்கு பரிச்சயமான ஆனால் கண்களுக்கு தட்டுப்படாத  ஒரு கேரக்டராக நாமும் வாழ துவங்கி விடுகிறோம்.

ஆண்களும் பெண்களும் நண்பர்களாக மட்டும் இருக்க முடியுமா? நண்பர்களுக்குள் காதல் தவறா? என்று நாம் இன்னும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், இதுல சரி தவறுன்னு எதுவும் இல்ல நமக்கு எது செட் ஆகுதோ அத பண்ணிட்டு போயிட்டே இருப்போம் என்று அசால்டாக பதில் சொல்லி செல்கிறார்கள்.

நண்பர்கள்னா பார்ட்டி ஜாலி மட்டும் தானா என்றால், அது மட்டுமில்லை அவர்களுக்கு பிரச்சனை அதற்கு மேல் வரும் என்பதையும் அவர்கள் சொல்ல தவறவில்லை. கை நிறைய சம்பாரித்து அடிக்கடி பார்ட்டி செய்யும் நண்பர்களுக்கிடையில் நிரந்தர வருமானமில்லாமல் பார்ட்டிக்கு போக கூச்சப்படும் இருவர், பல பெண்களிடம் உறவு கொண்டாலும் தன் நண்பனின் முன்னாள் காதலியின் மேல் காதல் வரும்போது அதை வெளிப்படுத்த முடியாமல் மறைக்க முற்படும் ஒருவன் என்று அவர்களுக்குள் வரும் முரண்பாடுகள் நாம் அதிகம் சிந்தித்து பார்க்காதவை ஆனால் எளிதில் நடக்கக் கூடியவை.

இந்த சீரிஸ் வந்த காலக்கட்டத்தை வைத்துப் பார்க்கும்போது இது பதித்து சென்ற முற்போக்கான கருத்துகள் அதீதம். அதே சமயம் அவர்கள் கூறும் நெகிழ்வான கதைகளும் ஏராளம். 

மாற்றாந்தாயின் மூலம் பிறந்த தம்பியின் குழந்தைகளுக்கு வாடகைத்தாய் ஆகும் அக்கா,  தந்தையின் நண்பனைக் காதலிக்கும் மகள், பெண்ணாக மாறிய தந்தையை 30 வருடங்களுக்கு பிறகு ஏற்றுக் கொள்ளும் மகன், தந்தை இல்லாத தோழிக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமண மேடையில் ஏற்றிவிடும் நண்பன், விபத்தாக நண்பர்களுக்கு இடையே நடந்த உறவில் பிறந்த குழந்தை, ஆனால் அதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாமல் வாழும் தம்பதி, மனைவியின் லெஸ்பியன் திருமணத்தை முன் நின்று நடத்தும் கணவன்  என இந்த சீரிஸ் நமக்கு அறிமுகப்படுத்தும் விஷயங்கள் பல பல.

இதில் பலவற்றையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். ஆனால், அவர்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை. அவர்கள் நமக்கு சொல்லிக் கொள்ள விரும்புவதும் அது தான்.

இவ்வளவு ஆழமான நிகழ்வுகள், கனமான பாத்திரங்கள் இருந்தும் நம்மை தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். நகைச்சுவை மூலம் இவ்வளவு கதைகளும் கதாபாத்திரங்களும் நமக்கு உணர்த்தும் உண்மைகள் அபாரமானவை.

எவன் எது செய்தாலும் கிண்டல் செய்யும் சாண்ட்லர், பார்க்கும் இடமெல்லாம் சுத்தம் எதிர்பார்க்கும் மோனிகா, சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் டைனோசர் பற்றி லெக்ட்சர் அடிக்கும் ராஸ், பேஷன் டேட்டிங்கில் நாட்டம் கொண்ட ரேஷல், பெண்களை கவர்வதையே வேலையாக வைத்திருக்கும் ஜோயி, தன் கிறுக்குத்தனங்களை மறைக்க விரும்பாத ஃபீபீ என அவர்கள் ஒருவருக்கொருவர் சொல்லாமல் சொல்லிக்கொள்ளும் ஒரே விஷயம்

 I’ll be there for you, like I’ve been there before...
I’ll be there for you, Coz you’re there for me too...


"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்" என்றான் பாரதி. அவன் கனவு மட்டும் பலித்திருந்தால், பல கனவுகள் பலி ஆகாமல் இருந்திருக்கும். சாதி, மதம், இனம் ,மொழி , மாநிலம் , நாடு போன்ற மேம்போக்கான பாகுபாடுகளை பற்றி அலசி ஆராயும் நாம் இதற்கெல்லாம் வித்திட்ட பாலின பாகுபாட்டை  அலட்சியப் படுத்துவதில் ஆச்சர்யமில்லை. காரணம், அது இயல்பு என்றாகிப் போனது தான்.

பெண் என்பவள் ஒரு சக மனிதி  என்று உணரும் ஞானம் பலருக்கும் வாய்க்காமல் போனது ஏன் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. பதில் மட்டும் கிடைத்த பாடில்லை.  ஆண்களால் முடிந்த சில விஷயங்கள் பெண்களால் முடியாது, பெண்களால் முடிந்த சில விஷயங்கள் ஆண்களால் முடியாது.  அதை உணர்ந்து ஒருவரையொருவர் உறுதுணையாகக் கொண்டு உலக  வாழ்வின் பூரணத்தை நோக்கி  வழி நடத்திச் செல்வதே ஆண், பெண் படைப்பின் சித்தாந்தம். ஆனால், இங்கு நடப்பது அனைத்தும் அதற்கு நேர்மாறானவை.


சர்வாதிகாரம், வேற்றுமை இவையெல்லாம் நாட்டு நடப்பு என்பர், இதே தோரணையில் நடக்கும் வீட்டு நடப்பிற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. பெண்களுக்கு எதிரான கொடுமை என்றால் அது கொலை, கொள்ளை, வன்முறை மட்டுமே என்று நினைத்தால் மன்னிக்கவும். அதையும் தாண்டி பல வெளி வராத , பெண்களின் உள்ளங்களை மட்டுமே வாட்டி எடுக்கும் பல கொடுமைகளும் உள்ளன. உதாரணமாக, இங்கு இரு  கதைகளை  எடுத்துக் கொள்வோம்.

வித்யா ஒரு புத்திசாலி பெண். பள்ளி காலத்தில் அவளுடன் படித்த அனைவரையும் விட மதிப்பெண்களும் அறிவும் பெற்றவள். பட்டம் படித்து பொறியாளராக வேண்டும் என்பது தான் அவள் கனவு. ஆனால், அவளால் பொறியியல் பட்டதாரி மட்டுமே ஆக முடிந்தது. சமூகம் திணித்த திருமணம் தான் அதற்கு காரணம் . "என்ன இவ்ளோ வயசு ஆகியும் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணாம வெச்சுருக்கிங்க "  என்று ஒரு 22 வயது பெண்ணைப் பார்த்து கேட்கும் அவலம் இந்நாட்டில் மட்டுமே காணமுடியும் பொக்கிஷம். பல கண்டுபிடிப்புகளின் பிறப்புக்கு காரணமாக வேண்டிய அவளால், இரு குழந்தைகளின் பிறப்புக்கு மட்டுமே உதவ முடிந்தது. குழந்தை பிறப்பு அவளால் மட்டுமே முடிந்த ஒன்று தான். அதற்காக அவள் கனவுகள் கலைக்கப்பட்டதற்கு காரணம் குழந்தைகள் என்றாகுமா? நிச்சயமாக இல்லை.

அவள் உடல் ரீதியாக எந்த விதத்திலும் புண்படுத்தப்படவில்லை. யாருடைய வார்த்தையும் அவளை துளைத்தெடுக்கவில்லை. இருந்தும் அவள் துன்புறுத்தப்படுகிறாள்.  இத்தனைக்கும் அவள் சுற்றத்தார் அவளுக்கு ஓர் நல்வாழ்வு ஏற்படுத்திக் கொடுப்பதாகவே நினைத்து இதை செய்தனர். அவர்களது அன்பு பாசத்தால் மறைக்கப்பட்டுவிட்டது அவள் கனவு. அதற்காக அன்பு பாசமே இருக்கக்கூடாதா என்றால் அது தவறு. எதிலும் அவர்களுக்கான இடைவெளியும், சுதந்திரமும் கொடுக்கப்படவேண்டும். இது ஆண்களுக்கும் பொருந்தும். வித்யாவின் மனநிலையை சற்று சிந்தித்து பார்க்கையில் , அவளுக்குள் ஒரு போராட்டமே நடந்திருக்கும்.  அவள் மீது அக்கறை கொண்ட அன்பான குடும்பம் , அக்குடும்பத்தின் மீது எந்நேரமும் குற்றம் சொல்ல காத்திருக்கும் சமூகம். இதற்கிடையில் அவளுக்கான கனவு. அதை அவள் வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கூட அவளுக்கு கிடைத்திராது. அவள் உணரும் முன்பே அவளுடைய கனவு நசுக்கப்பட்டிருக்கும். கருவை சிதைப்பது எவ்வளவு கொடுமையோ, அதே அளவு கனவை சிதைப்பதும் தான்.

நாம் சாருவின் கதைக்கு வருவோம். பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களே அதிகம் கொண்டவள்  சாரு. தைரியசாலி , சமூகத்தில் பெண்கள் மீது பிணைக்கப்பட்டிருக்கும் சங்கிலிகளை உடைப்பதிலும் கூட. தன் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது மட்டும் இல்லாமல், அவர்களுக்கு பிரச்சனை என்றாள் முன் நிற்பதிலும் அவள் தான் முன்னோடி. அதற்காக அவள் வாங்கிய பெயர்கள் 'பஜாரி ', 'அடங்காப்பிடாரி ' போன்ற வகையறாக்களை சேர்ந்தவை. ஏன் இன்னும் சிலர் அவளை 'தே.....' என்கிற வார்த்தையில் கூட அழைப்பதுண்டு. இதையே ஒரு ஆண் செய்திருந்தால் 'வீரன்,தீரன் ' என்று போற்றப்பட்டிருப்பான். அவளைப்  போற்றிப் புகழ வேண்டாம், ஆனால் ஒரு குறைந்தபட்ச மரியாதையாவது அவளுக்கு கிடைத்திருக்கலாம். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் துடித்த சாரு, தற்கொலை செய்து கொள்கிறாள். காரணமே தெரியாத சுற்றத்தாரும் "அவ நடத்தை சரியில்ல அது அவங்க வீட்டுக்கு தெரிஞ்சுருச்சு , அதான் தற்கொலை பண்ணிகிட்டா"  என்று கிளப்பி விடுகின்றனர் . உலகின் பல கொடுமைகாரர்களுக்கு கிடைத்த இறுதி மரியாதை கூட, அவளுக்கு கிடைக்காமல் போனது யார் குற்றம்?

சாரு தன் உயிரை மட்டுமே மாய்த்துக் கொண்டாள். இங்கு இருப்பவர்கள் கலாசார சீரழிவு என்னும் வஸ்திரத்தால் அவள் பண்பை மாய்த்துவிட்டனர். எது கலாசார சீரழிவு ? ஆணுடன் பேசாதே , அவனுடன் பழகாதே என்று அவள் சமூக சிந்தனையை முடக்குவதா, இல்லை சகமனிதரை மதித்து பழகுவதா! சாருவின் ஆன்மாவும் கண்ணீர் வடித்திருக்கும் இவர்கள் அறியாமையை கண்டு.  ஒரு பெண்ணைப் பற்றி முழுதும் அறியாமலேயே அவள் பாத்திரத்தை கொலை செய்ய கதை உருவாக்குபவர்களுக்கு , அவள் நிலைமையை உணர நேரம் இருந்திருக்காது தான்.

இம்மாதிரி பல வித்யாக்களும், பல சாருக்களும் நம்மை சுற்றி தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை பெண் தெய்வங்களாக போற்ற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. சொல்லப் போனால் பிரச்சனை ஆரம்பிக்கும் இடமே, அப்படி அவர்களை பிரித்துப் பார்க்கும் போது தான். அவர்களை அவர் போக்கில் விடுங்கள், பிரச்சனைகள் சுமூகமாகும். அடுப்படி மட்டுமே அவர்களது நிரந்தர உறைவிடம் என்பது மாற வேண்டும்.

"ஒரு பொண்ணால எப்டி இத பண்ண முடியும்... "

"ஒரு பொண்ணுகிட்ட போய் இப்டி தோத்துட்டு வந்துருக்கியே... "

"ஒரு பொண்ணுக்கு என்ன இவ்ளோ ஆசை .."

"ஒரு பொண்ணு சொல்றத நான் கேக்கணுமா?"

"ஒரு பொண்ணு தானே... "

போன்ற எண்ணங்கள் ஆண்களுக்கும் ,

"நான் ஒரு பொண்ணு, எப்டி நான் போய்... "

"நான் ஒரு பொண்ணு, எப்டி என்னால முடியும்.."

"ஒரு பொண்ணு பண்ணுனா ஒத்துக்குவாங்களா .."

"நான் ஒரு பொண்ணு, மத்தவங்க சொல்றத தான் கேக்கணும் "

போன்ற எண்ணங்கள் பெண்களுக்கும் இருக்கும் வரையில் இக்கொடுமைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

பெண் என்பவள் ஒடுக்கப்பட்டவளும் அல்ல, வலிமையற்றவளும் அல்ல. நம்மால் அந்த நிலைக்கு தள்ளப்பட்டவள். இன்றைய வளர்ந்து வரும் நாகரிகத்தில், பெண்கள் வெளி வர ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால், அதுவும் அவர்களுக்கு பிரச்சனை கொடுக்கவே ஆரம்பித்திருக்கிறது. அப்படிப்பட்ட பெண்களை எளிதாக அடைந்து விடலாம் என்பது சில காமுகர்களின் பார்வை. அது அனைவரின் சிந்தனை இல்லையெனினும் சமீபத்தில் 11 மாத குழந்தை கற்பழிக்கப்பட்ட செய்தி மற்றவர்களையும் கிலி அடையத்தான் செய்கிறது. இருந்தும் அதையும் உடைத்தெறிந்து வெளி வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருகிறது.

ஒரு பெண் இங்கு தான் செல்ல வேண்டும் , இவ்வளவு நேரம் தான் இருக்க வேண்டும் , இவ்வளவு தான் பேச வேண்டும் , இவர்களோடு தான் பேச வேண்டும்  என்பதெல்லாம் தான் பெண்களுக்கான இலக்கணம் என்றால், அதை திருத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு. பெண்களுக்கான இலக்கணம் என்பதே உடைத்தெறிக்க பட வேண்டிய ஒன்று தான். அவர்களை அவர்களாக இருக்க விடாமல் செய்யும் கருணையும் கூட கொடுமையானது தான்.

பெண்களுக்கான குரல்கள் ஆங்காங்கே ஒலித்தாலும் அதில் பலவும் சில பெண்களின் சுயநல விரோதத்தை தீர்த்துக் கொள்ளவே பயன்படுகிறது. பெண்களே! உங்களுக்கான ஆதரவுகள் பெருக துவங்கி இருக்கின்றன. அதை சரியான முறையில் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துங்கள். பாலின பாகுபாடு குறைய சில காலம் பிடிக்குமெனினும் அதற்கான ஆணிவேராக இது அமையும். ஆண், பெண் இருவருடைய ஒத்துழைப்பின்றி இது நிறைவேறாத ஆசையாகவே இருக்கும்.

"விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்
சாத்திரங்கள் பலபல கற்பராம்
சவுகரியங்கள் பலபல செய்வராம்
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்
மூடக் கட்டுகள் யாவும் தகர்ப்பராம்
காத்து மானிடர் செய்கை அனைத்தையும் கடவுளர்க் கினிதாகச் சமைப்பராம்"

இதில் பாதி நிகழ ஆரம்பித்திருக்கிறது. மீதியும் நிகழ, பெண்மையைப் புகழ்வோம்.
அவளிடம் நான் அவ்வளவாக பேசியதில்லை. நான் தனிமையில் இருக்கும்போது அவளுடன் பேச ஓராயிரம் வார்த்தைகள் ஒத்திகை பார்த்ததுண்டு. ஆனால், அவளுடன் பேச விழையும் தருணங்களில் ஒன்றிரண்டு வார்த்தைகளுக்கு மேல் உதிர்க்க என் நா மறுக்கின்றன. அதற்கு காரணம், என்னையே அறியாமல் நான் கொண்ட நாணமா இல்லை அவள் கண்களில் நான் கண்ட பானமா என்பது எனக்கே புதிர் தான். தூக்கக் கலக்கத்திலோ ஒரு வித கிறக்கத்திலோ நான் அவளைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அவளுடன் பேசிட, அவள் மேல் நான் கொண்ட ஆசைகளை கவிதையாய் பாடிட ஓர் அசட்டுத் தைரியம் என்னை வந்து சேரும். ஆனால், அடுத்த நாளே அவளைப் பார்க்கும்போது மீண்டும் ஓர் முறை கோழையாகிறேன்.

அவள் இதழோரப் புன்னகை அவ்வப்போது தலைநீட்டி கண் சிமிட்டும். அது எனக்கானதாய் இருக்காதா என்கிற அங்கலாய்ப்பு எப்போதும் எனக்குண்டு. நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த சிரிப்பு இரட்டிப்பாகும். அதைப் பார்த்து என்னையே அறியாமல் நானும் சிரித்துக் கொண்டிருப்பேன். அந்த சிரிப்பிற்கு காரணம் கேட்டால் சமாளிக்க முடியாமல் அசடு வழிவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். அப்படியொரு நிலைக்கு என்னை அடிக்கடி ஆளாக்குவதில் அவள் படுசுட்டி.


அவள் பார்க்கும் திசையில் நான் இருந்துவிட்டால் போதும், அவளைக் கவர்ந்து விட வேண்டுமென்று என் இயல்பை மீறி நான் செய்யும் கோமாளித்தனங்கள் பல. அவள் கண் விழி உருளும் சமயங்களில் நானும் உருள முற்படுகிறேன், அவள் விழிகளின் ஒளி என் மேல் நிகழ்ந்து கொண்டே இருக்க.


அவள் துப்பட்டாவும் என் சட்டையும் எப்போதாவது ஒரே வண்ணத்தில் சந்தித்துக் கொள்ளும். அப்போதெல்லாம் இந்தப் பிரபஞ்சத்தின் ஆற்றல் ஒன்று எங்களை சேர்க்க போராடி வருவதாய் நினைத்துக் கொள்வேன். அவள் தன் தோழிகளுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் அரை வினாடிக்கொரு முறை முகபாவனைகளை மாற்றிக் கொண்டே இருப்பாள். அவளை விட அப்படி என்ன சுவாரஸ்யம் அந்த உரையாடலில் இருந்து விட போகின்றது என்று நான் வியந்ததுண்டு. இருந்தும் அவளைத் தொடர்ந்து கவனிக்க நான் அச்சப்படுகிறேன். அவள் ஒவ்வொரு முகபாவனையும் என் உடல் பாகங்களை அங்குமிங்கும் அலைக்கழிக்கின்றன.


யாரும் கவனிக்கவில்லையென நினைத்து அவள் தன்னிலை மறந்து நொறுக்குத் தீனிகளை கொறித்துக் கொண்டிருப்பாள். ஒரு மழலையின் உடல்மொழி அவளிடத்தில் தெறித்துக் கொண்டிருக்கும். பஞ்சத்தில் அடிபட்ட பாமரனாய் அவளையே நான் வெறித்துக் கொண்டிருப்பேன், அவள் சிந்தவிடும் சிதறல்களேனும் எனக்கு சொந்தமாகுமா என்கிற ஏக்கத்தில்.


சுவாரஸ்யம் இல்லாத வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்போதெல்லாம் அவள் முகத்தை ஒரு மாதிரி தூக்கி வைத்துக் கொள்வாள். அதுவும் ஒரு அழகு தான் என்று இலக்கணத்தை மாற்றியமைத்தாள். அனைவரும் தாங்கி நிற்கும் எதார்த்தம் கூட, அவளிடம் சேர்கையில் கவிதையாகிறது.


அவள் யாருடனாவது ஐந்து நிமிடங்களுக்கு மேல் கைப்பேசியில் உரையாடினால் என் மனம் பதைபதைக்க ஆரம்பித்துவிடும். ஒரு வித பொறாமை துளிர்விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்க ஆரம்பித்து விடுவேன். நேரில் பேச முடியாமல் திருட்டுத்தனமாய் அவள் முகப்புத்தகப் பக்கத்தை நோட்டமிடும் ஒரு தொடை நடுங்கியின் செய்கை வேறென்னவாக இருந்து விட முடியும்.


அவளை நான் இவ்வளவு ரசித்தபோதும், விரும்பியபோதும் அவளுடனான ஒரு இடைவெளியையே விரும்புகிறேன். அவளுடன் நெருங்கி அவளைப் புரிந்துகொள்ள முயல்கையில் உண்மையில் அவள் நான் விரும்பிய அவள் இல்லை என்கிற ஏமாற்றத்தை விட, தொலைவில் இருப்பினும் நான் ரசித்த அவளாகவே வாழ்ந்துவிட்டு போகட்டும். அவள் வாழ்க்கையில் அவளே படிக்காத ஒரு அத்தியாயமாய் இருப்பதும் ஒரு போதை தானே...!
"ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை
இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணை தான் ஞானத்தின் எல்லை..."

என்று வைரமுத்துவின் வரிகள் சோகக் குரலில் ஒலித்துக் கொண்டிருக்க, மின் மயானம் முழுவதும் அழுகைக் குரல்கள் நிறைந்திருந்தன. அதில் ஒருவனின் ஓலக்குரல் மட்டும் தனியாக ஒலித்துக் கொண்டிருந்தது. இறந்து போன சிவகாமி பாட்டியின் பேரன் ராகவ் மூச்சடைக்க விசும்பிக் கொண்டிருந்தான். பிறக்கும்போது இவனை அள்ளி அணைத்த கைகள், அனலின் கைகளுக்கு இரையாவதை பார்த்த பின் எப்போதும் கட்டுக்குள் இருக்கும் இவன் உணர்ச்சிகள் அணைகளை உடைத்துக் கொண்டு வெளி வர ஆரம்பித்திருந்தன.  பாட்டியின் இழப்பு இவனை இவ்வளவு திருப்பிப் போடும் என ஒரு போதும் நினைத்திருக்கவில்லை. அவர் இழப்பைப் பற்றியே யோசித்திராவனுக்கு இது ஒரு மீளாத்துயரமாக தான் பட்டது. இவன் மட்டுமல்ல வேறு எவரும் யோசித்திருக்க மாட்டார்கள். காலையில் கோவிலுக்கு சென்று வருகிறேன் என கிளம்பி, மாலையில் சாமியாக வந்த சிவகாமி பாட்டி தந்த ஏமாற்றம் அனைவருக்கும் பேரதிர்ச்சி தான்.

அக்கண்ணீரின் இடைவெளிகளில் தன் சிந்தை எங்கிருக்கிறதென்று அறியாதவனாய் அனைவரையும் நோட்டம் விட ஆரம்பித்திருந்தான். இவர் இடத்தில் இனி யாரும் இல்லையே என்ற பாசத்தில் சிலரும், இன்று இவர் இருக்கும் இடத்திற்கு நாளை நாமோ என்ற பயத்தில் சிலரும் அழுது கொண்டிருந்தனர். அவர்களைப் பார்க்கப் பார்க்க இவனுக்கு கோபம் தலைக்கேறியது, தன் மீதும் கூட.  சிவகாமி பாட்டி உயிருடன் இருக்கும்போது  வசை பாட வாய்கள் போதாமல் பேசியவர்கள் பலரும், கவலை முகமாய் கண்ணீருடன் நின்றிருந்தனர்.  அவர்களைக் கேள்வி கேட்க முடியாத விரக்தியில் தன் மீதும் எரிச்சலாய் வந்தது. கோபத்தின் உச்சத்தில் இறந்த கால நினைவுகளை அசை போட ஆரம்பித்தான்.

பரந்து விரிந்த வானை அலங்கரிக்கும் நிலா போல நெற்றியில் பொட்டும், அவிழ்க்க முடியாத ஜிலேபி கொண்டையும், தவிர்க்க முடியாத புன்னகையும் தான் சிவகாமி பாட்டியின் அடையாளங்கள். இளையவர்கள் எது செய்தாலும் பாக்கைக் கொட்டிக் கொண்டு குற்றம் சொல்லும் சாதாரண பாட்டி அல்ல சிவகாமி, அவர்கள் செய்யும் லூட்டிகளில் தன்னையும் இணைத்துக்கொண்டு மகிழும் முதிர்ந்த இளரத்தம். ராகவ் எடுக்கும் செல்பிக்களுக்கு போஸ் கொடுப்பதாகட்டும், இளையதளபதி விஜய் படத்தை இமை கொட்டாமல் பார்ப்பதாகட்டும், 'ஊதா கலரு ரிப்பன் ' பாடலை முணுமுணுத்துக் கொண்டே வேலை செய்வதாகட்டும், ராகவின் நண்பர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களை கலாய்ப்பதாகட்டும்  தனக்கான இலக்கணத்தை தானே வடிவமைத்துக் கொண்டிருந்தார். அதே சமயம் ராகவிற்கு பழைய உறவுகளின் கதைகளையும் அவர்களின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் சந்தர்ப்பங்களையும் அவர் தவற விடவில்லை.

ராகவுடன் அவருடைய உறவு மிகவும் விசேஷமானது. மகன் வழிப் பேரன் என்பதாலோ என்னவோ இட ஒதுக்கீட்டில் இருக்கும் ஓர வஞ்சனை போல மற்ற பேரப் பிள்ளைகளை விட இவனிடம் பாசம் அதிகம். ராகவ் தன் அம்மாவுடனோ அப்பவுடனோ சண்டை இடும் போதெல்லாம் சிவகாமி பாட்டியிடம் போய் படுத்துக் கொள்வான். காரணம், தவறியும் சிவகாமி பாட்டி ராகவை திட்டி விட மாட்டார். குழந்தையில் இருந்து அவனை தூக்கி வளர்த்ததால், அவன் ஒவ்வொரு அசைவும் பாட்டிக்கு அத்துப்படி.  அவன் கோபம் தீரும் வரை அவனிடம் கதைகளைக் கேட்டுக் கொண்டு, தலையை நீவி தூங்க வைத்து விடுவார். அடுத்த தினமே "சின்ன பையன் அவன் என்ன பண்ணிட்டான்னு அவன திட்டிருக்க ?" என்று ராகவின் அப்பாவிடம் சண்டையிடுவார்.

முகப்புத்தகத்தின் குறுக்கீடு இல்லாமல் பிறந்தநாட்களை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பாட்டி படுசுட்டி.பிறந்த தினம் விசேஷ தினங்களில் ராகவ் தவறாமல் பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதமும் பணமும் வாங்கி விடுவான்.  அவன் வரவில்லையென்றாலும் பாட்டியின் ஆசிர்வாதமும் பணமும் அவனை தேடி வந்துவிடும்.

வீட்டில் துணி எடுக்க அனைவரும் செல்லும்போதெல்லாம், பாட்டி ராகவ் தேர்ந்தெடுக்கும் சேலைகளை தான் வாங்குவாள். இவன் தேர்ந்தெடுக்க சிரமப்பட்டால் "ஏண்டா, உங்கம்மாளுக்குனா அவ்ளோ சீக்கிரம் செலக்ட் பண்ற, எனக்கு பண்ணமாட்டியா ?" என்று நக்கலடிப்பார். அதே சமயம் அவன் சுமாராக தேர்ந்தெடுத்தாலும் ,"என் பேராண்டி செலெக்ஷன் எப்போவும் சூப்பரா தான் இருக்கும் " என்று அனைவரிடமும் கூறி பெருமைப்பட்டுக் கொள்வார்.

அப்படி சேலை உடுத்தி மகிழ்ந்த உடலை அவருக்குப் பிடித்த ப்ளூ கலர் பட்டுப்புடவையுடனே அனலுக்கு இரையாகக் கொடுத்து விட்டோமே என்று எண்ணிய போது, ராகவிற்கு அழுகை இன்னும் குமுறிக்கொண்டு வந்தது. அவர் எப்படி இறந்தார் என தெரியாத விரக்தியில் அழுகை இன்னும் அதிகமானது. எப்படியேனும் அதை அறிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு அவனுக்கு இருந்ததாக உணர்ந்தான்.

அது ஒரு புரட்டாசி சனிக்கிழமை. ராகவின் அம்மா அவனை சிறப்பு வாய்ந்த கோவில்களுக்கு அழைத்து செல்ல ஒரு பட்டியலே தயார் செய்து வைத்திருந்தார். ராகவ் காலை எழுந்திருக்கும்போதே சிவகாமி பாட்டி தலைக்கு குளித்து துவட்டிக் கொண்டிருந்தார்.

இவனைப் பார்த்தவுடன் "நீ கோயிலுக்கே போகமாட்டேனு இருந்த, இன்னைக்கு பாரு... உங்க அம்மா உன்ன எத்தன கோயிலுக்கு கூட்டிட்டுப் போக போறான்னு...  ஆனா நா தப்பிச்சுட்டேன் பா..  இங்க பக்கத்துல இருக்கற கோயிலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்து படுத்துக்க போறேன் "  என்றார் கிண்டலாக. அவனும் அதைக் கேட்டு மீண்டும் உறங்க சென்றுவிட்டான்.

சிறிது நேரம் கழித்து எழுந்தவுடன் "பாட்டி எங்கயோ கீழ விழுந்துட்டாங்களாம்... இந்த ஹாஸ்பிட்டலுக்கு வந்துரு" என்று ராகவின் அப்பா அவனிடம் சொன்ன போது கூட அவனுக்கு பாட்டி உடல்நிலையின் தீவிரம் அவனுக்கு புரியவில்லை. அங்கு சென்று பாட்டியின் நிலைமை சீராகிக் கொண்டிருக்கிறது என்று அனைவரும் பெருமூச்சு விடுவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. சர்க்கரையும் மாரடைப்பும் அவரை முடித்துவிட்டது.

வீட்டிற்கும் ஹாஸ்பிட்டலுக்கும் இடையில் நடந்தவை அனைவருக்கும் புதிர் தான். அதை விடுவிக்க ராகவ் கோவிலுக்கு அருகில் சென்று விசாரிக்கப் போனான். ஒவ்வொருவரிடமும் அவன் கேள்வி கேட்கும்போதும் அவர்கள் சொல்லும் பதிலில் தன் பாட்டியே கிடைத்து விடுவாரோ என்ற ஆர்வம் அவன் கண்களில் தெறித்தது கண்ணீருடன் சேர்ந்து. இறுதியில் அவன் அறிந்த சம்பவம் அவனை சற்று பலவீனமாக்கியது உண்மை தான்.

பாட்டி கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல ஒரு சிற்றுந்தில் ஏற வேண்டும். அதற்கு செல்லும்வழியில் பாட்டிக்கு தலைசுற்றல் ஆரம்பமாகியுள்ளது. ஒரு வழியாக பேருந்தில் ஏறியவருக்கு உட்கார இடமில்லை. கம்பியைப் பிடித்து நிற்க முயற்சித்த பாட்டிக்கு தோல்வியே கிட்டியது. தன் முகத்தைப் பேருந்தின் தரைக்கு தந்தார். தன்னையும் அப்போது வந்த முதல் மாரடைப்புக்கு இரையாக. அந்த பேருந்தின் நடத்துநர் சொல்ல சொல்ல ராகவின் கண்கள் குளமாகியது. இதை வீட்டில் சொல்ல முடியாமல் சொல்லி கதறினான்.

அதன் பிறகு, அவன் பேருந்தில் செல்லும்போதெல்லாம் பாட்டியின் ஞாபகங்கள் ஒரு முறையாவது அவனை தீண்டிவிடும். விளைவு, பாட்டியின் வயதில் எவர் வந்தாலும் அவர்களுக்கு உட்கார இடம் கொடுக்க ஆரம்பித்தான்.

அவர்களின் கண்களிலும் புன்னகையிலும் சிவகாமி பாட்டி வாழ்கிறார் என்கிற நம்பிக்கை அவனை முழுதும் ஆட்கொண்டது.
இரவு 9:30 மணி

யுவன் இசையைப் போன்ற எனெர்ஜியும், ஸ்ரீ காந்த் தேவா வின் இசையைப் போன்ற இரைச்சலும் ஒரு சேர நிறைந்த  பெங்களுரு பேருந்து நிலையத்தில் சத்யா தன் தோழியின் அண்ணன் அமுதனுடன் எலெக்ட்ரானிக் சிட்டி செல்லும் பேருந்தைத் தேடிக் கொண்டிருந்தாள். அதற்கு போகும் வழியில் தான் சத்யாவின் ஹாஸ்டலும் கூட.

ஒரு தோழியின் திருமணத்திற்காக வந்திருந்த அமுதனை விருந்தோம்ப வேண்டிய சூழல் சத்யாவிற்கு, அதை அவனை சேலத்திற்கு பேருந்து ஏற்றி விடும் வரையில் கடமையாய் செய்து முடிக்க சபதம் ஏற்றிருந்தாள். அதற்காக ஹீரோயினை பத்திரமாக பஸ் ஏற்றி விடும் ஹீரோவாக தன்னை பாவித்துக்கொண்டு, தன்னை பற்றி தானே எண்ணி புளங்காகிதம் அடைந்து கொண்டிருந்தாள்.

திருமண வரவேற்பு முடிந்து மணமகன்- மணப்பெண் இருவரின் மேக்கப்புகளுமே கலைந்து போயிருக்கக் கூடிய அவ்வேளையிலும், மாலையில் தான் போட்ட மேக்கப் சிறிதளவும் சிதையாதவாறு பத்திரமாக பார்த்துக் கொண்டாள் சத்யா. அதற்கு உடந்தையாக அவள் பர்ஸில் குடிகொண்டிருந்த சீப்பும் கண்ணாடியும் ஒத்துழைத்தது. ஹோட்டல் கமிஷனுக்காக ஆள் புடிக்கக் காத்திருந்த ஆட்டோக்காரர்களும் இவளைப் பார்த்து கன்னடத்தில்  கூவ ஆரம்பித்தனர்.

"மேடம்... தங்க ஹோட்டல் வேணுமா ?" 

"ஆட்டோ , ஆட்டோ... ஒரு 20 ரூபா குடுங்க.. நல்ல ஹோட்டலா நா கூட்டிட்டு போறேன்... நீங்களா போனா ஏமாத்திருவாங்க ..."

என்று பல குரல்கள் இவளை ஒரு சுற்றுலா பயணியாக எண்ணி ஹோட்டலில் தங்க வைக்க ஓலமிட்டுக் கொண்டிருந்தன. ஆனால், எதையும் சட்டை செய்யாமல் எலெக்ட்ரானிக் சிட்டி பஸ் இருக்கும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.

'அடேய்... எங்க ஆபீஸ்ல பேசற இங்கிலிஷே அரைகுறை, இதுல உங்க கன்னடம் வேறயா... சும்மா போங்கடா !' என்று மனதிற்குள் கூறிக் கொண்டாள். மைன்ட் வாய்ஸ் வெளியே கேட்டாலும் தமிழில் கேட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில். இருக்கும் இடம் கர்நாடகம் அல்லவா!

ஒரு வழியாக அவள் தேடிக் கொண்டிருந்த பேருந்து கிளம்ப தயாராக இருந்தது மட்டுமல்லாமல் , இவர்கள் இருவரும் அமர இரு சீட்கள் தரும் அளவிற்கு கருணையும் கொண்டிருந்தது.  பேருந்தில் வேறு சீட் எதுவும் காலியாக இல்லை, ஒரு பெண் ஏறினாலும் சீட் பறி போகும் அபாயத்தில் அமுதன், எப்போது வேண்டுமானாலும் தூங்கி விழும் பரிதாபத்தில் சத்யா என்ற நிலையில் பேருந்து கிளம்பியது.

"எலெக்ட்ரானிக் சிட்டி போகவே 1 மணி நேரம் ஆகும். அப்புறம் நா பஸ் ஏறி , நீ திரும்ப ஹாஸ்டலுக்கு அரை மணி நேரம் நடந்து வரணும். உனக்கு ரொம்ப லேட் ஆயிரும் சத்யா..." என்றான் பரிச்சயமில்லாத பாஷைக்கிடையில்  படாத பாடு பட்டுக் கொண்டிருந்த அமுதன்.

"அரை மணி நேரம் எல்லாம் ஆகாது ணா... சீக்கிரம் போயிடுவேன் உங்கள பஸ் ஏத்தி விட்டுட்டு..." என்றாள் தன் ஹீரோயிசத்தை காட்டியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த சத்யா.

"இல்ல பரவாயில்ல...  நா பஸ் ஏறிக்கறேன்.. நீ உங்க ஹாஸ்டல் ஸ்டாப்லயே  இறங்கிடு.."

"இல்ல ணா... ஒரு ஸ்டாப் தானே... உங்கள ஏத்தி விட்டுட்டு நா ஹாஸ்டல் போயிக்கறேன் " என்றாள் சக்திமானாக தன்னை நினைத்துக் கொண்ட சத்யா. அமுதனும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

தனக்கு மனப்பாடமாக தெரிந்த கன்னட டயலாக்கில் டிக்கெட்டை எடுத்துவிட்டு ஜன்னலோரத்தில் தன் தலையை  சாய்த்தாள். தூக்கம் தூரத்தில் வருவது போல தோன்றியது. இருந்தாலும் தன் கண் மை அழிந்து விடக்கூடாதென்று கண்ணியமாக அதை துரத்திவிட்டாள்.

அப்போது ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றது. நடுத்தர வயதில் இருவர் ஏறினர். ஒருவர் மாற்று திறனாளி , மிகவும் சிரமப்பட்டு தான் பேருந்தில் ஏறினார்.  சீட் இல்லாததால் ஒரு கம்பியைப் பார்த்து சாய்ந்து நின்று கொண்டார். ஹெட்போன்களிலும் மொபைல்களிலும் மூழ்கிப் போயிருந்த பயணிகளுக்கு இவரை கவனிக்க நேரம் இல்லாமல் தான் போனது.

எதார்த்தமாக அவரைப் பார்த்த சத்யா, தன் சீட்டை விட்டு உடனே எழுந்தாள். அவருக்கு உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன், உட்கார்ந்திருந்தால் தூங்கி விடுவேன் என்ற எண்ணமும் சேர்ந்து அவருக்கு சீட் கொடுக்க செய்தது. எந்த மொழியில் பேசுவது என புரியாமல் ஆங்கிலத்தில் ஒருவாறு பேசி அவரை உட்கார வைத்தாள். முதலில் மறுத்தாலும், அன்பு தொனித்த அவள் குரல் அவரை உட்கார வைத்தது. அவளுக்கு மனமார நன்றி கூறிக்கொண்டார்.

இவள் நின்ற சிறிது நேரத்தில் அமுதனும் இன்னொருவருக்கு இடத்தைக் கொடுத்து விட்டு நின்றுகொண்டான்.  இருவரும்  சுவாரஸ்யமற்ற விஷயங்களை சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே வந்தனர். சத்யா இடம் கொடுத்தவர் மட்டும் அவ்வப்போது சத்யாவை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார்.

எலெக்ட்ரானிக் சிட்டி ஸ்டாப் வந்தது. அமுதனும் சத்யாவும் இறங்கினர். அதே இடத்தில் அவரும் இறங்கினார். என்றும் இல்லாமல் அன்று இறங்கிய சிறிது நேரத்திலேயே பஸ் வந்தது. அமுதனை அதில் ஏற்றிவிட்டு தன் கடமையை முடித்த சத்யா, மனம் முழுக்க திருப்தியுடனும் முகம் முழுக்க தூக்கத்துடனும் தன் ஹாஸ்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அங்கிருந்து சுமார் 1.5 கி மீ தொலைவில் இருந்தது அவள் ஹாஸ்டல்.

சிறிது தூரம் நடந்தவளுக்கு திடீரென அவளை யாரோ பின் தொடர்வது போன்ற எண்ணம் ஏற்பட்டது. திரும்பி பார்த்த அவளுக்கு பேரதிர்ச்சி. அவள் இடம் கொடுத்த அந்த நடுத்தர வயது நபர் அவளுக்கு 10 மீட்டர் தொலைவில் வந்து கொண்டிருந்தார்.

'என்னடா இது ? இடம் கொடுத்தது ஒரு தப்பா... எதுக்கு என்ன பாலோ பண்றாரு ' என்ற குழப்பத்தை மனதில் வைத்துக் கொண்டு, அவரைப் பார்த்து புன்னகையை படரவிட்டாள்.

(ஆங்கிலத்தில் )

"என்ன இவ்ளோ நேரம் கழிச்சு தனியா போயிட்ருக்கிங்க ?" என்றார் அந்த நபர் அதே புன்முறுவலோடு.

"ஆமாங்க... ஒரு பிரெண்டோட கல்யாணம் .. அதுக்கு போயிட்டு வர லேட்டாயிடுச்சு... "

"ஓ.. சரி சரி ... கொஞ்சம் சீக்கிரமா வந்துருக்கலாம்.. இந்த ஊர் கொஞ்சம் சேப் இல்ல இந்த டைம்ல "

'ஐயையோ.. இவர் முதல்ல எதுக்கு வரார்னு தெரிலையே..' என்று எண்ணியவாறு "உங்க வீடும் இந்த பக்கம் தானா ?" என்றாள் தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள எண்ணிய சத்யா.

"இல்ல இல்ல.. என் வீடு அந்த பஸ் ஸ்டாப் பக்கம் தான்.. நீங்க தனிய போறிங்களே னு தான் பின்னாடி வந்தேன்"

"ஐயோ... அதெல்லாம் பரவாயில்ல ... நான் போயிக்கறேன்... நீங்க ஏன் கஷ்டப்பட்டு இவ்ளோ தூரம் வரிங்க ?"

"நா கூட வர்றது தெரிஞ்சாலே நீங்க பயப்படுவிங்க னு தெரியும்... அதனால தான் உங்களுக்கே தெரியாம வரலாம்னு பாத்தேன். ஆனா நீங்க என்ன பாத்துட்டிங்க " என்றார் கள்ளம் கபடம் இல்லாத புன்னகையோடு.

"இல்ல... நா இந்த டைம்ல நெறைய தடவ போயிருக்கேன் .. ஏதும் பிரச்சனை இல்ல.. நீங்க வீட்டுக்கு போங்க.."

"இல்ல மா... நா உங்க கூட வரது உங்க சேப்டிக்காகனு மட்டும் சொல்லிட முடியாது...  எனக்காக இடம் குடுத்த நீங்க , பத்தரமா வீட்டுக்கு போயிட்டீங்கனு தெரிஞ்சா ஒரு திருப்தி அவ்ளோ தான் . அதுவும் இல்லாம உங்கள பாத்து என் சிஸ்டர் ஞாபகம் வந்துருச்சு"

சினிமாத்தனமாக இருந்தாலும் அவர் கூறிய வார்த்தைகளில் இருந்த நேர்மை அவளை ஏதோ செய்தது. இவரையா இவ்ளோ நேரம் சந்தேகப்பட்டோம் எனக் குறுகினாள்.

அவ்வளவு நேரம் யாரோவாக இருந்த அவர், அவளுக்கு ஒரு அண்ணன் இருந்தால் இப்படி தான் இருந்திருப்பாரோ என்று அவளை எண்ண வைத்தார். "அண்ணா ..." என்று அழைக்க ஆரம்பித்தாள்.

மீதியிருந்த 1 கிமீ தூரமும் மனிதமும் அன்பும் நிறைந்த பாதையாக மாறியது.